சிங்கப்பூரில் வசிக்கும் எனது நீண்ட கால வாடிக்கையாளர் ஒருவர் கைபேசியில் அழைத்தார். தங்கள் குடும்ப தெய்வ வழிபாட்டில் ஒரு சிக்கல் எழுந்துள்ளதாகவும் அதற்கு ஜோதிட ரீதியாக ஒரு தீர்வு கூறுமாறும் கேட்டுக்கொண்டார். பிரச்சனை என்னவென்றால்? குல தெய்வ வழிபாட்டுடன் குடும்ப தெய்வமாக ஒரு தெய்வத்தையும் அன்பரின் குடும்பம் வணங்கி வருகிறது. தங்களது இந்திய பூர்வீகத்தில் உள்ள அந்த குடும்ப தெய்வத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதற்கான நியமங்களின்படி வழிபாடு செய்கிறார்கள். இது தவிர இவரைப் போலவே வெளிநாட்டிலோ அல்லது தொலை தூர ஊர்களிலோ வசிப்பவர்கள் தாங்கள் விரும்பியபோது தங்கள் வீட்டிலேயே உருவ மற்ற நிலையில் குடும்ப தெய்வத்திற்கு அதே நியமங்களின்படி வழிபாடு செய்கிறார்கள். தற்போது தங்கள் பூர்வீகத்தை விட்டு விலகி வந்து குடியேறிய ஊரில் உள்ள சிவன் கோவிலில் தங்கள் குடும்ப தெய்வத்தை உறவுகள் பிரதிஷ்டை செய்துள்ளார்கள். குடியேறிய ஊரில் உள்ள குடும்ப தெய்வத்தை 1௦௦ கிலோ மீட்டர்களுக்கும் குறைவான தொலைவில் உள்ள குடும்ப தெய்வத்திற்கு செய்யும் நடைமுறைகளைப் போன்றே நியமங்களுடன் வழிபாடுகள் செய்யலாமா? என்பதே நண்பரின் கேள்வி.
கேள்வி மிக நுட்பமானது மட்டுமின்றி சிக்கலானதும் கூட என்பதால் இதற்கு ஜாதகத்தை விடுத்து துல்லியமாக பதில் வேண்டி பிரசன்னம் பார்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஜாமக்கோள் பிரசன்னமே கீழே நீங்கள் காண்பது.
குடியேறிய ஊரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தங்கள் குடும்ப தெய்வத்தை பூர்வீக ஊரில் உள்ள குடும்ப தெய்வத்திற்கான நியமங்களின்படியே வணங்கலாமா? கூடாதா? என்பதே கேள்வி. குடும்பத்தாரில் வயதில் மூத்தவர்கள், குறிப்பாக பெண்கள் இதை எதிர்க்கிறார்கள். ஆனால் இதுவும் தங்கள் குடும்ப தெய்வம்தானே இதையும் சம நியமங்களிபடி வழிபாடு செய்தால் என்ன என்பதே நண்பரின் கேள்வியாக இருந்தது.
தெய்வ வழிபாடுகளை பொறுத்தவரை நெருப்பு ராசி அதிபதிகளான செவ்வாய், சூரியன், குரு இதில் முக்கியத்தவம் பெறுகிறார்கள். இதில் மேஷத்தில் சூரியன் உச்சமாவதால் சூரியனும், குருவும் செவ்வாயைவிட அதிக முக்கியத்துவம் பெறுகிறார்கள். கால புருஷனுக்கு குல தெய்வத்தை குறிக்கும் 5 ஆம் பாவகாதிபதி சூரியன் மேஷத்தில் உச்சமாவதால், செவ்வாய் அங்கு பொறுப்பை சூரியனிடம் கொடுத்துவிடுகிறார் என்பதே இதற்குக் காரணம். சூரியன் குல தெய்வத்தை குறிப்பிட்டால், குரு தெய்வ அனுக்கிரகத்தை குறிப்பவர். சனி இதில் இறந்த, சமாதியான மூதாதையர்களின் பதிவுகளை குறிக்கும் கிரகமாகிறார். குடும்ப தெய்வம் என்பது தங்கள் குடும்பத்தினர் வணங்கி வந்த மரணமடைந்த பதிவுகளே ஆகும் என்பதால் சனியும் குல, குடும்ப தெய்வ வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுகிறார். எனவே குடும்பத்தினர் வணங்கும் இறந்த பதிவுகள் என்ற வகையில் சனியையும், குடும்ப தெய்வம் என்ற வகையில் குடும்ப காரகர் குருவும் உதயத்திற்கு 2 ஆமதிபதி சுக்கிரனும் இந்த பிரசன்னத்தில் முக்கியமாக ஆராயப்பட வேண்டியவர்களாகின்றனர்.
உதயம் மேஷமாகி உதயத்துடன் குரு, செவ்வாய், சனி ஆகியோர் தொடர்பாவது பிரசன்ன நோக்கத்தை தெளிவாக குறிப்பிடுகிறது. மேஷ குரு தனுசு செவ்வாயுடன் பரிவர்த்தனையாவது கேள்வியாளரின் பூர்வீகத்தைவிட்டு வளமை வேண்டி அன்னாரின் தாயாதிகள் இடம் பெயர்ந்து வந்துள்ளதை குறிக்கிறது. 1௦ ஆமிடம் கேள்வியை உறுதி செய்யும் என்பதற்கேற்ப, 1௦ல் மாந்தியுடன் புதன் மகரத்தில் அமைந்தது புதன் குறிக்கும் இரட்டை நிலையை வழிபாட்டில் குறிப்பதையும், மாந்தி அது மரணப்பதிகள் தொடர்பான வழிபாடு என்பதையும் தெரிவிக்கிறது. மகரமே சுடுகாட்டை குறிக்கும் ராசி என்பதை அறிக. புதன் உள்வட்டத்தில் மரணத்தை குறிப்பிடும் உதயத்திற்கு 8 ஆமிடம் விருட்சிகத்தில், 2 ஆமதிபதி சுக்கிரனுடன் இணைந்து 2 ஆமிடத்தை பார்க்கிறார் என்பதை கவனிக்க. ஆரூடம் இரட்டை ராசியான மிதுனத்தில் தெய்வானுக்கிரகத்தை குறிக்கும் குருவின் புனர்பூஷத்தில் அமைந்தது கேள்வியின் காரணத்தை தெளிவுபடுத்துகிறது. உதயத்திலேயே கவிப்பு அமைந்தது கேள்வியாளரே செய்யும் செயலின் விளைவாக பாதிக்கப்படுவதை குறிப்பிடுகிறது. மேஷ உதயத்திக்கு இரட்டைத்தன்மையை குறிக்கும் புதன் பகையாவார் என்பதை அறிக. 2 ஆமதிபதி சுக்கிரன் 8 ல் மறைந்ததும், வெளிவட்டத்தில் 2 ஆமிடத்திற்கு 8 ல் மறைந்ததும் குடும்பத்திக்கும் குடும்ப பெண்கள் நலத்திற்கும் பாதிப்பு ஜாதகர் செய்ய எண்ணியுள்ள வழிபாட்டால் வரும் என்பதையும் குறிப்பிடுகிறது.
கேள்வியாளரின் குடும்ப தெய்வ வழிபாட்டு நியமங்கள்
பேச்சை குறிக்கும் கிரகம் சந்திரனாகும். வாக்கு வன்மையை குறிக்கும் கிரகம் புதனாகும். கன்னிச் சந்திரன் வெளிவட்டத்தில் கேதுவாலும் உள்வட்டத்தில் துலாத்தில் சனியாலும் பாதிக்கப்பட்டுள்ளார். புதன் உள்வட்டத்தில் 8 ல் மறைந்து வெளிவட்டத்தில் மாந்தியுடன் இணைந்து நிற்கிறார். பேச்சு பாவாதிபதியான 2 ஆமதிபதி சுக்கிரனும் பாதிப்பான நிலையிலேயே அமைந்துள்ளது. நண்பரின் குடும்ப தெய்வம் பெண்ணாகும். அதை குடும்ப பெண்களே முன்னின்று வழிபாடு செய்கிறார்கள். குடும்ப தெய்வ வழிபாட்டன்று இவர்கள் பேசாமல் மௌன விரதம் அனுஷ்டிக்கிறார்கள். சூரியன் மறைந்து இருள் துவங்கியதுமே மாலை 7 மணியளவில் வழிபாட்டை நடத்துகிறார்கள். முன் பத்தியில் குறிப்பிட்டபடி சந்திரன், புதன், சுக்கிரனின் நிலை இவற்றை பிரசன்னத்தில் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
ஏன் குடியேறிய ஊரில் குடும்ப தெய்வத்தை நியமங்களிபடி வழிபடக் கூடாது?
சூரியன் சந்திரன் ஆகிய இரு ஒளி கிரகங்களும் தெய்வ சக்தியின் மூலாதாரங்களாகும். ஒளியே வழிபடும் விக்கிரகத்திற்கு உயிர் சக்தியை புகுத்துகிறது. உண்மையான தெய்வ வடிவம் அமைந்துள்ள கேள்வியாளரின் பூர்வீக ஊரில் அமைந்துள்ள குடும்ப தெய்வத்திற்கே அவ்வுயிர்ச் சக்தி இருக்கும். ஆனால் குடியேறிய ஊரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட தெய்வமானது குடும்ப தெய்வத்தின் பிம்பம் மட்டுமே. பிம்பங்களுக்கு உயிர் சக்தி கிடையாது. அவை வெற்று அடையாளங்கள் மட்டுமே என்பதால் அவற்றை முறைப்படி நியமங்களுடன் வழிபடக் கூடாது. சாதாரணமாக இதர தெய்வங்களுடன் இணைத்து வழிபடலாம்.
மீறி நியமங்களுடன் வழிபட்டால் என்ன ஆகும்?
நியமப்படியான வழிபாட்டின் போது நாம் பிம்பங்களுக்கும் உயிர் சக்தியை கொடுக்கத் துவங்குகிறோம். நியமங்களை உருவாக்கி தொடர்ந்து அவற்றின்படி வழிபடும்போது குறிப்பிட்ட நியமங்களுக்கான காரண காரியத்தை நாம் இறை சக்திகளுக்கு புகுத்துகிறோம். அப்போது பூர்வீக மற்றும் குடியேறிய ஊரில் அமைந்துள்ள இரு தெய்வங்களும் நியமங்களுடன் வழிபடுவதை எதிர்நோக்கும். தொடர்ந்து செய்துவந்த நியமங்களின்றி வழிபாடு செய்தாலும், நாளடைவில் குடியேறிய ஊர் தெய்வ வழிபாட்டின் சௌகரியம் கருதி, பூர்வீக ஊர் தெய்வத்தை அடுத்த தலைமுறையினர் மறந்துவிட வாய்ப்பு மிக அதிகம். இதனால் தன்னை நியமப்படி வழிபாடுகள் செய்யாமல் விட்டுவிட்டவர்களை குடும்ப தெய்வமே சபிக்கும் என்பதால் வசிக்கும் ஊரிலுள்ள கேள்வியாளரின் குடும்ப தெய்வத்தை சாதாரணமாக வழிபடுமாறும், நியமங்களின்படி பூர்வீக ஊரில் உள்ள குடும்ப தெய்வத்தை மட்டுமே வணங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501