திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது நம் முன்னோர் வாக்கு. ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதியும், சுப கிரகங்களும் வலுக்குன்றி, பாவ கிரகங்கள் வலுத்திருப்பின் அந்த ஜாதகருக்கு சொந்த வட்டாரத்தில் வாழ்வாதாரம் சிறப்புறாது. சொந்த ஊரில் அவர்கள் உயிர் வாழ வழி இருக்குமேயன்றி அவர்களது திறமையை பயன்படுத்த தடை இருக்கும். அத்தகையோர் வெளியிடம், வெளி தேசம் சென்று தனது வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்வதே அவர்கள் வாழ்வில் முன்னேற வழி. வாகன வசதிகளால் சுருங்கிவிட்ட இன்றைய உலகில் வாய்ப்புகளைத் தேடி படித்தவர்கள் உலகெங்கும் பயணிக்கிறார்கள். அப்படி செல்பவர்கள் அனைவரும் தங்கள் பணியின் மூலம் சிறப்பான வாழ்வை பெறுகிறார்களா? என்றால், அது குறைவான சதவீதத்தினருக்கே சாத்தியமாகிறது. பெரும்பாலன சதவீதத்தினர் வெளிநாட்டில் சம்பாதிக்கிறார்கள், குறைவான சதவீதத்தினரே சாதிக்கிறார்கள் என்பதே உண்மை.
ஜாதக பரிவர்த்தனைகள் குறிப்பிடுவது என்ன?
ஜாதகத்தில் சந்திரன் சனியோடும், புதன் சுக்கிரனோடும் பரிவர்த்தனை ஆகியுள்ளனர். ஒரு ஜாதகத்தில் உள்ள பரிவர்த்தனைகள் ஒருவர் தன் வாழ்க்கையின் சில குறிப்பிட்ட இலக்குகளை இடம்பெயர்ந்து அடைவதை குறிக்கிறது. இந்த ஜாதகத்தில் ஜீவன காரகர் சனி 12 நின்று , 7 ஆமிட சந்திரனுடன் பரிவர்த்தனையடைகிறார். இதனால் இவரது ஜீவன கர்மா, வெளிநாடு தொடர்புடையது என்பதை அறியலாம். மற்றொரு பரிவர்த்தனை புதன் சுக்கிரனுக்கிடையே அமைந்துள்ளது. இதன் பொருளாவது, சொந்த ஊரைக் குறிக்கும் தன ஸ்தானாதிபதி மூன்றாம் பாவமான முயற்சி பாவத்திற்கு பரிவர்த்தனையாகிச் செல்வதால் இவர் பொருளீட்ட வேண்டும் என்றால் சொந்த ஊரை விட்டு விலகி வெளியிடம் செல்ல வேண்டும் என்பதாகும். ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி கெட்டுவிட்டால் சொந்த ஊரில் அவரது திறமை பயன்படாது எனப் பொருளாகும்.
லக்னம், லக்னாதிபதி கெட்ட ஜாதகர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்த ஜாதகத்தில் பரிவர்த்தனையாகி துலாத்திற்கு வரும் சுக்கிரனால் சூரியன் நீசபங்கமடைகிறார். ஆனாலும் ராகுவால் பாதிக்கப்படுகிறார். இந்தக் கூட்டணியில் ராகுவே பலம் வாய்ந்தவர். எனவே இத்தகைய ஜாதகத்தினர் ராகுவை சார்ந்து தனது வாழ்வை அமைத்துக்கொண்டால் மட்டுமே வாழ்வில் சிறப்படைய முடியும்.
கல்வியை தேர்ந்தெடுக்கையில்…
புதனோடு தொடர்புடைய கிரகங்களின் காரக கல்வியே சிறப்பைத்தரும். அதிலும் வலுப்பெற்ற கிரகம் ஆதிக்கம் செலுத்தும். மேற்கண்ட ஜாதகத்தில் மின் உற்பத்தி என்பதை குறிக்கும் சூரியனின் காரகத்துடன் ராகு என்ற பிரம்மாண்டத்தின் காரக கிரகமும், கல்வியின் காரக கிரகம் புதனும் இணைவதால் இவர் மின் உற்பத்தித்துறையில் பொறியியலில் உயர்கல்வி பயின்றார்.
உயர் கல்விக்கு ஆராய வேண்டிய சதுர்விம்சாம்சத்தில் சூரியன் திக்பலத்துடன் உச்சமும் பெற்றிருகிறார். வர்க்க சக்கரங்களில் அதிக வலுப்பெற்ற கிரகம் அந்த சக்கரம் தொடர்புடைய விஷயத்தில் ஜாதகரை வழிநடத்தும் என்பதே இவர் மின் உற்பத்தித்துறை சார்ந்த கல்வி பயில காரணமாகியுள்ளது..
சம்பாத்தியத்துறையை தேர்ந்தெடுக்கையில்…
புதனின் தொடர்புகள் மூலம் பொருத்தமான கல்வியை இனங்கண்டு படித்தாலும், அது சம்பாத்யத்திற்கு சிறப்பை தர வேண்டும் என்றால் புதன் 1௦ ஆமிட கிரக தொடர்பு பெறுவது அவசியம். இவை எல்லாம் சிறப்பைத் தந்தாலும் தசா-புக்தி கிரகங்கள் தங்கள் காரக, ஆதிபத்தியப்படியே ஜாதகரை வழி நடத்தும் என்பதால் அவற்றையும் கவனிப்பது அவசியமாகிறது. இதனால்தான் கல்வியை தேர்ந்தெடுக்கையில் மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. இந்த ஜாதகத்தில் லக்னம் சூரியனின் உத்திரம்-1 இல் அமைந்துள்ளது. இதனால் சூரியனின் காரகமே ஜாதகரை அதிகம் ஈர்க்கும். இவர் மின் உற்பத்தித்துறை சார்ந்த கல்வி பயின்றதை முன்பே பார்த்தோம். ஜாதகத்தில் 1௦ ஆமதிபதி சுக்கிரன் சூரியனின் சாரத்தில் நின்று பரிவர்த்தனைக்குப் பிறகும் சூரியனுடனேயே இணைகிறார். இதனால் இவர் மின் உற்பத்தித் துறையில்தான் பணிபுரிகிறார்.
வெளிநாட்டில் வேலையால் சிறப்புறும் ஜாதக அமைப்பு.
தசாம்சத்தில் 1௦ ஆமதிபதி சனி, சூரியனுடன் வருமான ஸ்தானமான 2 ஆமிடத்தில் இணைந்துள்ளார். இதனால் இவர் கல்வி கற்ற மின் உற்பத்தித் துறையிலேயே பணிபுரிகிறார். ஜாதகர் குரு தசையில் கல்வி முடித்து பணிக்கு சேர்ந்துவிட்டார். தற்போது சனி தசையில் உள்ளார். தசாம்சத்தில் குருவும் புதனும் பரிவர்த்தனையாகியுள்ளனர். இதனால் உள்நாட்டில் சில காலம் பணிபுரிந்தார். தற்போது வளைகுடாவில் பணிபுரிகிறார். புதன் திட்டமிடுதலையும், குரு பொருளாதாரத்தையும் குறிக்கும் கிரகங்கள் என்பதால், இவர் அயலக அரசின் மின் பகிர்மான கழகத்தில் வணிகத் துறையில் பணிபுரிகிறார். வெளிநாட்டில் பணியால் சிறப்படைவதை பரிவர்த்தனை குறிக்கிறது. இடமாற்றம் ஏற்படாவிட்டால் உள்நாட்டில் சில காலத்திற்குப் பிறகு இவரது வேலைக்கு மதிப்பிருக்காது அதனால் வாழ்வில் உயர்வும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
நிரந்தரமான, நிம்மதியான வேலை யாருக்கு அமையும்?
ஒருவரது செயல்களை லக்னமும், செயலுக்கான அங்கீகாரத்தை ஏழாம் பாவமும் குறிப்பிடும். இங்கு சனி பரிவர்த்தனைக்குப்பிறகு 7 ல் ஆட்சி, மூலத்திரிகோணம், திக்பலம் ஆகிய சிறப்புகளைப் பெறுகிறார். இதனால் பணியிடத்தில் இவரது வேலைக்கான அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்கும். லக்னம் போன்றே பரிவர்த்தனைச்சனி அமரும் கும்பமும் ஸ்திர வீடு என்பதால் இவரது வேலை ஸ்திரமானதாகும். இவர் இந்தியாவில் ஏறக்குறைய 1௦ ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில்தான் பணிபுரிந்தார். தற்போது வளைகுடாவிலும் 1௦ ஆண்டுகளை கடந்து ஒரே நிறுவனத்திதான் பணிபுரிகிறார். இதற்கு காரணம் ஸ்திர வீட்டில் சனி சிறப்பாக அமைந்ததுதான்.
வெளிநாடு செல்ல 9, 12 பாவங்கள் காரணமாகின்றன. 8 ஆமிடம் என்பது ஒருவர் தொலைவில் மறைந்து வாழ்வதை குறிக்கும். அதனால் அதுவும் வெளிநாடு செல்வதை குறிக்கும். இதனை கால புருஷ அடிப்படையிலும் கூறவேண்டும்.வேலையில் சிறப்படைய 7 ஆம் பாவம் சிறக்க வேண்டும். ஸ்திரமான வேலை அமைய சனியும் தசா கிரகமும் ஸ்திர ராசியில் சிறப்புற அமைய வேண்டும்.
மீண்டும் உங்களை விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501