மருத்துவ நுழைவுத்தேர்வு முடிந்து சிறந்த மதிப்பெண் பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டிலேயே மருத்துவம் பயில்கின்றனர். மதிப்பெண்கள் குறைவாக பெற்றவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர வேண்டிய நிர்ப்பந்தம். வசதி படைத்தோர் தங்களின் பிள்ளைகளின் கல்விக்காக கணிசமான பணத்தை செலவிடுவதை ஏற்றுக்கொள்கின்றனர். பொருளாதார வலு குறைந்தவர்களும் கணிசமான பணத்தை செலவிட தயங்குபவர்களும் வெளிநாட்டில் மருத்துவம் பயிலலாம் எனும் முடிவை ஏற்கின்றனர். ரஷ்ய-யுக்ரேன் போர் காரணமாக, யுக்ரேனில் மருத்துவ கல்வியை முடிக்க இயலாமல் பாதியிலேயே திரும்பியவர்களின் நிலை இன்று பரிதாபத்திற்குரியதாக உள்ளது. சீனாவில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்களுக்கு தற்போதுதான் கல்வியை தொடர அழைப்பு வந்துள்ளது. இந்நிலையில் வெளிநாட்டில் மருத்துவம் பயின்று இந்தியா திரும்பிய பிறகு, இந்திய மருத்துவ கழகம் நடத்தும் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே இந்தியாவில் மருத்துவ தொழில் செய்ய முடியும். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்களின் சதவீதம் மிகக்குறைவாகவே உள்ளது. இதற்கு வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளின் தரம், கற்பிக்கும் மொழி போன்ற பல காரணங்கள் கூறப்பட்டாலும் கணிசமான பணத்தை செலவழித்து வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பெரும்பாலோருக்கு இந்தியாவில் மருத்துவர் எனும் அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பது கவலைக்குரியது. இதை ஜோதிட ரீதியாக ஆராய்வதே இன்றைய பதிவு.
ஜோதிடத்தில் லக்னமும் அதன் திரிகோணங்களும் ஆரோக்யத்தை குறிப்பவை. ஒருவர் ஜாதகத்தில் 1, 5, 9 ஆகிய பாவகங்களும் அதன் அதிபதிகளும் சிறப்புற அமைந்தால்தான் அவர் மருத்துவம் பயில இயலும். கால புருஷனின் 1, 5, 9 பாவகங்களின் அதிபதிகளான செவ்வாய், சூரியன், குரு ஆகியோர்களும் அவர்தம் பாவகங்களும் நல்ல முறையில் தொடர்பாவது மருத்துவம் பயில முதன்மையான அமைப்பு. குறிப்பாக கால புருஷனின் 9 ஆவது பாவகாதிபதி குருவும், ஜாதகத்தில் 9 ஆவது பாவகமும் அதன் அதிபதியும் சிறப்புற அமைவது மிக முக்கியம். மேற்கண்ட ஜாதகத்தில் 5, 9 பாவகங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. ஜாதகத்தில் சந்திரன், 2 ஆம் பாவகம் 2 ஆம் பாவகாதிபதி ஆகியோர் சிறப்பாக அமைந்தால் எண்ணிய கல்வியை பயில பொருளாதாரம் கைகொடுக்கும். இவை பாதிக்கப்படிருப்பவர்கள் பொருளாதாரத்தின் பொருட்டு கல்விக்காக வெளிநாடு செல்கிறார்கள். ஜாதகத்தில் 8, 9, 12 ஆகிய பாவகங்கள் முறையே கண்காணாத, தொலைதூர, வெளிதேசங்களுக்கு செல்வதை குறிக்கும். கல்வி கற்கும் காலம் இவை தொடர்புடைய தசா-புக்திகள் நடப்பில் இருப்பின், கல்விக்காக அத்தகைய ஜாதகர்கள் வெளிநாடு செல்கிறார்கள். வெளிநாட்டுக் கல்வி பொருளீட்டுவதற்கு, தொழிலாக செய்வதற்கு உதவுமா? என்பதை குருவும், சனியும் முடிவு செய்கிறார்கள். இவ்விரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பாவதுடன் 1, 5, 9 மற்றும் 2, 6, 10, 11 ஆகிய பாவகங்களுடன் தொடர்பாவதைக்கொண்டு இதை அறியலாம். மேற்கண்ட ஜாதகத்தில் 2 ஆமதிபதி குரு ஆட்சி பெற்று சனி சாரத்தில் அமைந்துள்ளதுடன், பாக்கிய ஸ்தனத்தில் வர்கோத்தமம் பெற்ற சூரியனை 5 ஆவது பார்வையாக பார்க்கிறார். பாக்யாதிபதி சந்திரன் உச்சமாகியுள்ளார். இந்த ஜாதகி அரசு ஒதுக்கீட்டிலேயே ஆங்கில மருத்துவம் (MBBS) பயின்றவர்.
கீழே இரண்டாவது ஜாதகம்.
வர்கோத்தம லக்னம், ஜாதகர் தனது எண்ணத்தில் உறுதியாக செயல்படுவதை கூறும். லக்னாதிபதி சனி வக்கிரம் பெற்று 3ல் கேதுவுடன் இணைந்துள்ளார். லக்னாதிபதி சனி வக்கிரமானதும் பிடிவாதமான உறுதியான ஜாதகியின் நிலைப்பாட்டை கூறும். தன்னுடன் இணைந்த கிரக காரகங்களை ஒரு கிரகம் தனதாக்கிகொண்டு செயல்படும் என்பதற்கேற்ப, லக்னாதிபதி மருத்துவ காரக கிரகங்களுள் ஒன்றான கேதுவுடன் இணைத்துள்ளார். இதனால் ஜாதகி பிடிவாதமாக மருத்துவம் பயில எண்ணினார். சூரியன் இங்கு 8 ஆமதிபதியாகிறார். குரு இந்த லக்னத்திற்கு விரையாதிபதியாகி விரையத்திலேயே ஆட்சி பெற்றுள்ளார். சந்திரன் விரையாதிபதி குருவுடன் இணைவு பெறுவது தனது எண்ணங்களை நிறைவேற்ற ஜாதகி வெளிநாடு செல்வார் என்பதை கூறுகிறது. செவ்வாய் கடகத்தில் நின்று லக்னத்தை பார்ப்பதால் மருத்துவம் பயிலும் தனது காரக எண்ணத்தை ஜாதகி மீது திணிக்கிறார். ஆனால் செவ்வாய் பாதகாதிபதி என்பதை நினைவில் கொள்க. தொடர்பு பாவகம் எனும் 7 ஆம் பாவகம் சிறப்படைந்தால்தான் ஒருவர் வெளியிடம் சென்று சிறப்படைய முடியும். இங்கு 7ல் நிற்கும் செவ்வாய் பாதகாதிபதியாவதால் வெளியிடத்தில் ஜாதகிக்கு பாதிப்பு ஏற்படும். உயர் கல்வியை குறிக்கும் 9 ஆமதிபதியும் வித்யா காரகருமான புதன் வக்கிரமாகியுள்ளார். இதனால் கல்வி தொடர்பில் இவர் தீவிர நோக்கம் கொண்டவரே. ஆனால் பரிவர்த்தனையில் புதன் எட்டில் அமர்வது கல்வியை பலனற்றதாக்கும் அமைப்பாகும். இத்தகைய அமைப்புகளால் ஜாதகிக்கு இந்தியாவில் மருத்துவம் பயில பெரும் தொகை செலவு செய்ய வேண்டியதை எண்ணி தனது எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்ள சீனா சென்று மருத்துவம் பயின்றார். செவ்வாய் லக்னாதிபதி சனியின் பூசத்தில் அமர்ந்து லக்னத்தை பார்ப்பதால் செவ்வாய் குறிக்கும் சீனாவிற்கு ஜாதகி சென்றார். சனி+செவ்வாய் தொடர்பே சீனாவை குறிக்கும் என்பதுடன் கடகத்தில் உள்ள பூச நட்சத்திரம் சீனாவை உலகியல் ஜோதிடப்படி குறிக்கும்.
ஜாதகி சுக்கிர தசையின் பிற்பகுதியில் மருத்துவம் பயில சீனா சென்றார். 5 ஆமதிபதி சுக்கிரன், 8 ல் பரிவர்த்தனையாகி நிற்கும் 9 ஆமதிபதி புதனின் ஆயில்யத்தில் நிற்கிறார். இதனால் ஜாதகி உயர்கல்விக்காக சீனா சென்றார். 2020ல் 5 ஆண்டு மருத்துவம் பயின்றாலும், ஒரு வருட பயிற்சியை முடிக்க கொரானா காலம் ஒரு தடையானதால் இந்தியா திரும்பினார். தற்போது இவரது கல்வி முழுமையடையாமல் நிற்கிறது. இந்தியாவில் தங்கியிருந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய மருத்துவ கழகம் நடத்திய இந்தியாவில் மருத்துவம் செய்வதற்கான அங்கீகார தேர்வை 5 முறை எழுதியும் வெற்றி கிடைக்கவில்லை. பல முறை முயன்றும் வெற்றி பெற இயலாததற்கு காரணம் 8 , 9 அதிபதிகள் பரிவர்த்தனையே. 9 ஆமதிபதி தனது பாவகத்தின் விரையாதிபதியான 8 ஆமதிபதியுடன் பரிவர்த்தனையாவது ஒருவரின் பாக்கியம் பறிபோவதை குறிக்கும். இங்கு சூரியன் என்பது அரசையும், புதன் கல்வியையும் குறிக்கிறது. அரசு தேர்வில் தோல்வியை இந்த பரிவர்த்தனை குறிக்கிறது. இத்தகைய பரிவர்த்தனை வெளிநாடு சென்று கல்வி பயில்வதை குறித்தாலும் அதற்கான அங்கீகாரம் ஒருவரது தாய்நாட்டில் மறுக்கப்படுவதையும் குறிக்கிறது.
லக்ன யோகாதிபதியே ஆனாலும் தசா நாதர் சுக்கிரன் தன்னுடன் இணைந்த பாதகாதிபதியின் காரகங்களையும் இணைத்தே செயல்படுத்துகிறார். குருவிற்கு 8ல் செவ்வாய் நிற்பதும், சூரியனுக்கு செவ்வாய், குரு தொடர்பு இல்லாததும் இவரது மருத்துவக்கல்வி இந்தியாவில் பயன்படாது என்பதை குறிக்கிறது. தற்போது ஜாதகிக்கு சூரிய தசை துவங்கியுள்ளது. இதனால் தடைப்பட்டிருந்த தனது ஓராண்டு பயிற்சியை முடிக்க சீனா சென்றுள்ளார். சூரிய தசையிலும் ஜாதகி தனது கல்விக்கான அங்கீகாரத்தை கண்காணாத தேசத்தில்தான் பெற முடியுமே தவிர இந்தியாவில் பெற முடியாது. இதனால் ஜாதகி இந்தியாவில் மருத்துவ தொழில் செய்ய முடியாது. ஆனால் அங்கீகாரம் கிடைக்கும் வெளிநாட்டில் செய்யலாம். தாய் நாட்டை குறிக்கும் சந்திரன் 12 ல் மறைவு பெறுவது தனது தாய்நாட்டில் ஜாதகியின் கல்விக்கு அங்கீகாரம் கிடைக்கா நிலையை உறுதிப்படுத்துகிறது. லக்னாதிபதி சனியும் வித்யா காரகர் புதனும் வக்கிரமாகியுள்ளது தனது கல்விக்கும் தனது தொழிலுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்க ஜாதகி கடுமையாக போராட வேண்டும் என்பதை குறிப்பிடுகிறது.
எனவே மருத்துவக் கல்விக்காக கணிசமான தொகை செலவு செய்ய இயலாமல் வெளிநாடு சென்று பயில்வோர் தங்கள் கல்வி தாய் நாட்டில் அங்கீகரிக்கப்படுமா? என்பதை அறிந்து செயல்படுவது சிறந்தது.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி:8300124501