எண்பதுகளில் இரும்பு, பூமி, நீர், அரசுத்துறை, கட்டுமானம், வாகனம், வெளிநாடு, கல்வி, சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பொருளாதாரம் ஆகியவைகளே முக்கிய துறைகளாக இருந்தன. இன்று ஒவ்வொரு துறையும் பல்வேறு நுட்பமான பிரிவுகளாக வளர்ந்து வருகிறது. சாதாரணமான கணினிக்கல்வி என்பது அடிப்படைக் கல்வியின் ஒரு அங்கம் என்ற நிலை இன்று வந்துவிட்டது. இந்நிலையில் தகுந்த கல்வியை தேர்ந்தெடுப்பதற்கு நுட்பமான ஜாதக அலசல் தேவைப்படுகிறது. ஒருவரது ஜாதக சந்திரனை ராசி, நவாம்சம், சதுர்விம்சாம்சம் (உயர்கல்விக்கு ஆராய வேண்டிய வர்க்கச் சக்கரம்) ஆகியவற்றில் ஆராய்ந்தால் ஒருவரது கல்விச் சிந்தனை, கிரகிக்கும் திறன் ஆகியவற்றை அறியலாம். லக்னத்தோடும் லக்னாதிபதியோடும் தொடர்புகொண்ட கிரகங்களை வைத்து ஒருவர் என்ன வகையான அனுபவங்களை அடையவிருக்கிறார் என்பதையும், தசா-புக்திகள் அந்த அனுபவங்களை எப்போது அனுபவிப்பார் என்பதையும் சுட்டிக்காட்டும். தசா-புக்திகள் தொடர்பாகாத அனுபவங்களை ஒரு ஜாதகர் அனுபவிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவர் தான் கற்ற கல்வியை பொருள் ஈட்டுவதற்கு பயன்படுத்துவாரா? இல்லையா? என்பதை அவரது தசாம்சம் சுட்டிக்காட்டும். இன்றைய காலத்தில் கல்வி என்பது அறிவை பெருக்கிக்கொள்ள என்பதை தாண்டி பணம் சம்பாதிப்பற்குத்தான் என்ற நிலையில் நாம் இருக்கிறோம் . எனவே ஒருவரது கல்வியை ஆராய ராசி, நவாம்சம், சதுர்விம்சாம்சம் ஆகியவற்றோடு தசாம்சத்தையும் ஒப்பிட்டு ஆராய்வது அவசியம். இன்றைய பதிவில் நாம் தடய அறிவியல்துறை கல்வி மற்றும் வேலைவாய்ப்பு காரணிகளை ஒரு உதாரண ஜாதகம் மூலம் அலசவிருக்கிறோம்.
தடய அறிவியல் துறையின் காரக கிரகங்கள்.
தடய அறிவியல் துறை என்பது ஒரு குற்றவியல் சார்ந்த துறையாகும். இத்துறைக்கு காரக கிரகங்கள் ராகு-கேதுக்களாகும். காவல்துறையோடு இணைந்து செயல்படும் துறை என்பதால் இவற்றிற்கு செவ்வாயின் தொடர்பு இன்றியமையாததாகும். திரட்டப்படும் தகவல்களின் அடிப்படையில் செயல்படும் துறை என்பதால், தகவல் காரகர் புதனை நம்பியே இந்தத்துறை செயல்படுகிறது. அறிவியலின் ஒரு அங்கமானது இத்துறை என்பதால், அறிவியலின் காரக கிரகம் சுக்கிரன் தொடர்பும் அவசியமாகும். எனவே இத்துறையில் ஒருவர் ஈடுபட புதன், சுக்கிரன்,செவ்வாய்,ராகு-கேதுக்கள் ஏதோ ஒருவகையில் ஜாதகத்தில் தொடர்பு பெற்றிருக்க வேண்டும்.
கீழே நீங்கள் காண்பது, தடய அறிவியல் கல்வி பயின்று அதிலேயே பணிபுரிந்துகொண்டிருக்கும் ஒரு ஆணின் ஜாதகம்.
இந்த ஜாதகருக்கு கல்லூரி செல்லும் காலத்தில் ராகு தசை துவங்கியது. ராகு நவீன மின்னணு மென்பொருள்களுக்கு காரக கிரகம் என்பதால் தசை துவங்கியதுமே இயல்பாகவே இவரது நாட்டம் கணினித்துறை மீது ஏற்படுகிறது. இளங்கலையை குறிக்கும் 4 ஆம் பாவத்தில் தரவுகளை குறிக்கும் புதன், அறிவியலை குறிக்கும் சுக்கிரனுடன் இணைந்து உச்சம் பெற்றுள்ளது. இதனால் இவர் இளங்கலையில் கணினி அறிவியல் படித்தார்.
முதுகலை கல்வியை குறிக்கும் 9 ஆமிடத்தில் உள்ள ராகுவிற்கும், 9 அதிபதி சனிக்கும் காலபுருஷ 9, 12 ஆமதிபதி குருவின் தொடர்பு ஏற்படுவதால் இவர் உயர்கல்விக்கு கடல் தாண்டிச் செல்ல வேண்டும். உயர்கல்விக்கு ஆராயவேண்டிய சதுர்விம்சாம்சத்தில் வெளிநாட்டுக்கல்வியை குறிக்கும் 12 ஆமிடத்தில் தசாநாதன் ராகு, புதன் மற்றும் கேதுவுடன் இணைந்துள்ளதால் ஜாதகர் வெளிநாடு சென்று தடய அறிவியலில் முதுகலைப்பட்டம் பெற்றார்.
கடல்தாண்டி செல்வதை குறிக்கும் கால புருஷனின் 12 ஆமிட அதிபதியும் ஜீவன பாவாதிபதியுமான குரு, லக்னத்தில் திக்பலத்தில் அமைந்து, 7ல் திக்பலம் பெற்று, லக்ன 12 ஆமதிபதி சுக்கிரனின் சாரத்தில் நிற்கும் சனியின் பார்வையை பெறுகிறார். இவர்களோடு தசா நாதன் இணைந்தால் ஒருவரது ஜீவன கர்மா வெளிநாடு சார்ந்ததாக அமையும். இந்த ஜாதகத்தில் குரு, ராகு சாரத்தில் நிற்கிறார். பாக்ய ஸ்தானத்தில் நின்று தசை நடத்தும் ராகு வேலை பாவமான 6 மற்றும் 11 ஆமதிபதி செவ்வாயின் சாரம் பெறுகிறார். 1௦ ஆமதிபதி குரு, 9 ல் நிற்கும் ராகு சாரத்தில் அமைந்து 9 ஆமதிபதியை பார்ப்பது தர்ம கர்மாதிபதி யோகத்தின் ஒரு வகை ஆகும். இந்த அமைப்பால் இந்த ஜாதகருக்கு தான் படித்த வெளிநாட்டிலேயே தடய அறிவியல் துறையில் அரசுப்பணி கிடைத்தது. தசா நாதனுக்கு சூரியனின் தொடர்பு அரசுப்பணியை பெற்றுத்தந்துள்ளது.
மேற்சொன்னபடி இத்துறைக்கு கிரக அமைப்பு இருந்து தசா-புக்திகள் வந்தால் மட்டுமே இத்துறை சார்ந்த கல்வி பயில்வது பயன்தரும். எனவே எந்தக்கல்வி பயின்றாலும் தசா-புக்திகளின் தொடர்பை கவனிப்பது அவசியமாகும்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501.