ஜோதிடத்தில் அதிஷ்டத்தைக் குறிக்கும் பாவகம் என்பது 5 ஆவது பாவகமாகும். உழைப்பின்றி போட்டி, பந்தயம், சூதாட்டம், பரிசுச் சீட்டு போன்ற வகைகளில் அடுத்தவர் தனம் நமக்குக் கிடைப்பதை குறிக்கும் பாவகம் 8 ஆம் பாவகமாகும். கிரகங்களில் குரு, சுக்கிரன், ராகு ஆகியோர் இதன் காரக கிரகங்களாகிறார்கள். தனுசு ராசி பந்தயம், சூதாட்டம் ஆகியவற்றின் காரக ராசியாகும். ஜாதகத்தில் 5, 8 தொடர்பு இருப்பவர்கள் தங்கள் அதிஷ்டத்தை சோதித்துப் பார்க்க இது போன்றவற்றில் பொருளீட்ட இயல்பாகவே முயல்கிறார்கள். ஆனால் ஜாதகத்தில் 2, 5, 8, 11 ஆகிய பாவக தொடர்புகள் சிறப்பாக அமையப் பெற்றவர்களே இதில் செல்வம் சேர்க்கிறார்கள். மாறாக பாதிக்கப்பட்ட ஜாதக அமைப்பினர் அதிஷ்டத்தை நம்பி இத்தகைய சூதாட்டங்களில் பணத்தை இழக்கிறார்கள். சூதாட்டத்தின் தீமையைச் சொல்ல நமது முன்னோர்கள் மகாபாரதம் என்ற ஒரு பெரும் இதிகாசத்தையே இயற்றியுள்ளது அறிந்ததே. பங்கு வணிகத்தில் திட்டமிடல் தேவை என்பதால் அதிஷ்டத்தில் பங்கு வணிகம் சேராது என்றாலும் அதுவும் ஒருவகை சூதாட்டமே. பல நாடுகளில், ஏன் கேரளா, மணிப்பூர் போன்ற நமது இந்திய மாநிலங்களில் பரிசுச் சீட்டை அரசே நடத்துகிறது. சூதாட்ட விடுதிகள் மும்பை, கோவா போன்ற சில மாநிலங்களில் பிரபலம். சூதாட்டத்தின் மூலம் முக்கிய வருவாயை பல அமெரிக்க மாகாணங்களும், பல குட்டித் தீவு நாடுகளும் பெறுகின்றன. இன்றைய நவீன உலகில் சூதாட்டங்கள் கைபேசி மூலமாக நமது வீட்டிற்குள் நுழைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. பலரது இழப்பு ஒருவரை கோடீஷ்வரனாக்கும் என்பதால் இப்படி அடையப்படும் வருவாய் சிறப்பித்துச் சொல்லப்படவில்லை என்பதுடன் இழப்பை அடைந்தவர்களின் பாதிப்புகள் சாபமாக இவற்றால் தனமீட்டியவர்களை பாதிக்கும் என்பதும் உண்மையே. இத்தகைய சூதாட்டங்களால் செல்வந்தர்களானவர்களில் அபூர்வமாக மிகச் சிறந்த யோக வலுப் பெற்ற ஒரு சில ஜாதகர்கள் இத்தகைய சாப தோஷங்களை அனுபவிக்காமல் தனமீட்டி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறப்பாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இவற்றில் பொருளீட்டிய பலரது குடும்பம் பாதிக்கப்படுவதை காண முடிகிறது. காரணம், தன பாவகம் எனும் 2 ஆம் பாவகத்தின் அஸ்தமான பாவகமாக அதிஷ்ட வரவை குறிக்கும் 8 ஆம் பாவகம் அமைகிறது. 8 ஆம் பாவகம் வலுவடைந்து அதிஷ்ட வரவு வந்தால் 8 ன் அஸ்தமன பாவகமான 2 ன் உயிர் காரகத்துவமான குடும்பம் பாதிக்கப்படுகிறது. குடும்ப பாதிப்பு இல்லாமல் வாழ்ந்துவிட்டுச் செல்பவர்கள் கூட இந்த தோஷத்தை தங்கள் குடும்பத்திற்கு விட்டுச் செல்கிறார்கள் என்பதே உண்மை. இது பற்றி ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வதே இன்றைய பதிவு.
மேலே நீங்கள் காண்பது 1930 ல் பிறந்த ஒரு ஆணின் ஜாதகம். மீன லக்னத்தில் 8 ஆமதிபதி சுக்கிரன் உச்சமாகி 3 ஆமிட குருவோடு பரிவர்த்தனையில் உள்ளார். 2 ஆமிட செவ்வாய் 12 ஆமிடத்தில் அமைந்துள்ளார். 2 ஆமிடத்தில் ராகு அமைந்துள்ளார். இவை நல்ல பொருளாதாரம் வேண்டி ஜாதகம் தனது சொந்த ஊரை விட்டு கடல் தாண்டி வெளிநாடு சென்று தனது வாழ்க்கை வளமையை எதிர்நோக்குவதை குறிக்கிறது. லக்னத்தில் 8 ஆமதிபதி சுக்கிரன் மாளவ்ய யோகத்தில் அமைந்துள்ளார். இது ஜாதகர் பொருளாதாரத்தை பொறுத்தவரை மாற்றுச் சிந்தனையுடையவர் என்பதை குறிப்பிடும். பரிவர்த்தனை ஜாதகர் இடம் மாறி வெளிநாடு சென்று பிறகே வளமையை பெறுவார் என்பதை குறிப்பிடுகிறது.
5 ஆமிடாதிபதி சந்திரன் 4 ல் திக்பலம் பெற்று 12 ஆமிடாதிபதி சனியால் பார்க்கப்படுவது ஜாதகர் வெளிநாடு சென்று சம்பாதிக்கத் தூண்டும் அமைப்பாகும். அதன்படி ஜாதகர் சனி தசையில் வெளிநாடு சென்று தொழில் செய்தார். ஜீவன காரகர் சனியை உணவு காரகர் சந்திரன் பார்ப்பதால் ஜாதகர் வெளிநாட்டில் உணவகத் தொழிலில் ஈடுபட்டார். மீனமும் மிதுனமும் இரட்டை ராசிகளாகும். குறிப்பாக வியாபார ராசியான மிதுனம் இரண்டுக்கும் மேற்பட்ட பல தொழில்களில் ஈடுபட வைக்கும். லக்னத்தில் நீர்க்கோள் சுக்கிரன் உச்சம் பெற்று நிற்க, பண்ணையை குறிக்கும் 4 ஆம் பாவகத்தில் பாலை குறிக்கும் சந்திரன் வலுப்பெற்றதால் கடல் கடந்து சென்ற தேசத்தில் 1௦௦ க்கும் மேற்பட்ட மாடுகளைக்கொண்ட பால் பண்ணைத் தொழிலிலும் ஜாதகர் ஈடுபட்டார். உணவு காரகர் சந்திரன் வலுப்பெற்றதால் ஏறக்குறைய 27 உணவகங்களை தாய் நாடான இந்தியாவிலும், தான் வசித்த வெளிநாட்டிலும் நடத்தினார்.
ராசிப்படி களத்திர காரகர் சுக்கிரன் லக்னத்தில் உச்சம் பெற்று மாளவ்ய யோகத்துடன் போக ஸ்தானமான 3 ஆமிடத்துடன் பரிவர்த்தனை பெற்று நிற்கிறார். 2 ஆமதிபதி செவ்வாய் 2 க்கு லாபத்தில் கும்பத்தில் நிற்கிறார். 2 ல் வளர்ச்சி காரகர் ராகு அமைந்துள்ளார். இதனால் ஜாதகர் இந்தியாவிலும் வெளிநாட்டிலுமாக 3 மனைவியரை மணந்து குடும்பம் நடத்தினார். 2 ஆமிட ராகு பொருளாதாரத்துடன் குடும்பத்தையும் வளர்த்தியுள்ளார். ராஜ வாழ்க்கை எனலாம். நவாம்சத்தில் 9 ல் அமைந்த குரு, போக ஸ்தானமான 3 ல் லக்னாதிபதி புதனுடன் இணைந்த 11 ஆமதி சந்திரனை பார்ப்பதும், 11 ல் ராகுவுடன் களத்திர காரகர் சுக்கிரன் இணைந்ததும் ஜாதகரை 11 மிடம் குறிக்கும் தனது மகிழ்ச்சிக்காக பல திருமணங்கள் செய்து இல்லறத்தில் ராஜ வாழ்வு வாழ வைக்கும் அமைப்பாகும். 2 ல் அமைந்த அஷ்டமாதிபதி செவ்வாய் 8 ஆமிடத்தை பார்ப்பது பல தார அமைப்பாகும்.
தொழிலுக்கான தசாம்சத்தில் லக்னத்திலும் 7 லும் ராகு-கேதுக்கள் அமைந்தது ஜாதகர் ராகு-கேதுக்கள் குறிக்கும் நூதன வகை சம்பாத்தியத்தில் ஈடுபடுவதை குறிக்கும். சூரியன் 10 ஆமிடத்தில் நீச நிலையில் திக்பலம் பெற்று அமைந்தது செய்தொழில் கௌரவக் குறையுடையதாக இருக்கும். ஆனால் ஜாதகர் அத்தொழிலில் முதன்மையானவராக இருப்பார் என்பதை குறிக்கும். லாபஸ்தானமான விருட்சிகத்தில் 5, 10 ஆமதிபதி சுக்கிரன் அமைந்து , 5 ல் அமைந்த லக்னாதிபதி சனி பார்வை பெறுகிறார். அதே சமயம் லாபாதிபதி செவ்வாய் லாப ஸ்தான சுக்கிரனுக்கு சதுர்த்த கேந்திரத்தில் லக்னத்திற்கு 2 ல் அமைகிறார். இது செய்தொழில் லாபத்திற்கு சிறப்பான அமைப்பாகும். வாடிக்கையாளர்களை குறிக்கும் 7 ஆமதிபதியும் உணவு காரகருமான சந்திரன் 8 ல் அமைந்து 2 ஆமிட செவ்வாயை பார்ப்பது இவர் செய்த உணவுத் தொழிலையும், 8 ஆமிடம் குறிக்கும் அதிஷ்டத்தை நம்புபவர்களாக இவரது வாடிக்கையாளர்கள் இருப்பதை குறிப்பதோடு, மனோ காரகர் சந்திரனின் 8 ஆமிட நிலையால், ஜாதகரும் அதிஷ்டம் மூலம் பணம் சம்பாதிக்க எண்ணுவதையும் குறிப்பிடும். அதிஷ்ட ஸ்தானமான 5 ல் அமைந்த லக்னாதிபதி சனியை 5 ஆமதிபதி சுக்கிரன் காலபுருஷனுக்கு 8 ஆமிடமான விருட்சிகத்தில் இருந்து நேர் பார்வை பார்ப்பது ஜாதகருக்கு அதிஷ்டத்தின் மூலமும் தனமும் வரும் என்பதை குறிக்கிறது.
சூதாட்டத்திற்கு ஈடுபட்டு தனம் ஈட்ட 2, 5, 8, 11 ஆகிய பாவகங்களும் குரு, சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்களும், தனுசு ராசியும் காரணம் என்று பார்த்தோம். சூதாட்டத்தை தொழிலாக செய்ய இவ்வமைப்புகளுடன் 10 ஆமிடம் வலுப் பெற்றிருக்க வேண்டும். இங்கு 2 ஆமதிபதி சனி 5 ஆமிடமான ரிஷபத்தில் செவ்வாயின் மிருக சீரிஷத்தில் நின்று 2 ஆமிடத்தையும் அங்கு ராகுவின் சதயத்தில் நிற்கும் செவ்வாயை பார்க்கும் அதே சமயம் செவ்வாயும் சனியை நான்காம் பார்வை செய்கிறார் 11 ஆமிடத்திற்குரிய செவ்வாய். 8 ஆமிடத்தில் கேதுவின் மக நட்சத்திரத்தில் நிற்கும் சந்திரனை நேர் பார்வை பார்க்கிறார். 10 ஆமிட சூரியன் 7 ஆமிட ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் நின்று திக்பலம் பெறுகிறார். லக்ன கேது 8 ல் அமைந்த சந்திரனின் திருவோணத்தில் நிற்கிறார். சந்திரனுக்குப் 10 ல் லக்னாதிபதி சனி நிற்கிறார். இத்தகைய அமைப்புகளால் ஜாதகர் தான் வசித்த வெளிநாட்டில் சூதாட்ட விடுதி நடத்தினார். அதனால் பெரும் செல்வந்தரானார். அரசை குறிக்கும் சூரியனும் காவல் துறையை குறிக்கும் செவ்வாயும் ராகு சாரத்தில் அமைந்ததால் இவர் அரசின் மேல்மட்டத் தலைவர்களுடனும், காவல் துறையின் உயர்மட்டத் தலைவர்களுடன் நெருக்கமாக பழகி பணம் கொடுத்து தனது தொழிலுக்கு பாதிப்பு வராமல் பார்த்துக்கொண்டார். இதர தொழில் பிரச்சனைகளை சமாளிக்க ஒரு தனிப் படையை உருவாக்கி வைத்திருந்தார். சூதாட்டத்தில் மூலம் அடைந்த பொருளாதாரத்தால் தான் வசித்த நாட்டில் சூதாட்ட உலகின் ராஜாவாக வலம் வந்தார்.
தசாம்சத்தில் 3 ஆமிட புதனும், 6 ஆமிட குருவும் பரிவர்தனையாவதை கவனிக்க. இதனால் ஜாதகர் சனி தசையின் இறுதி புக்தியான குரு புக்தியில் இவர் வசித்த வெளிநாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தால் தனது தொழில்களை இழந்து இந்தியா திரும்பினார். சண்டை நடந்த இடத்தை குறிப்பிடும் ராசி மீன ராசியாகும். தசாநாதர் சனி, புக்தி நாதர் குரு இருவருமே கலகத்தின் காரகர் செவ்வாயின் மிருகசீரிஷத்தில் நின்றதால் கலகத்தில் ஏற்பட்ட பாதிப்பால் தொழிலை இழந்து இந்தியா திரும்பினார். பிறகு இந்தியாவில் உணவகத் தொழிலை வெற்றிகரமாக நடத்தி தனது வாரிசுகளிடம் கொடுத்தார். ராஜ வாழ்வு என்று கூறுமளவு வாழ்ந்தவரானாலும் ஜாதகர் கடும் உழைப்பாளி, விடா முயற்சியுடயவர் என்பதை ஜாதக வலுவிலிருந்து அறியலாம். தனது 9௦ ஆவது வயதில் கொரான காலத்தில் ஜாதகர் மரணமடைந்தார்.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501