உயர் கல்வியும் உத்தியோகமும்!

அன்பர் ஒருவர் தனது மகனின் உயர் கல்வியை தேர்ந்தெடுக்க அதிகபட்ச எச்சரிக்கையுடன் என்னை நாடி வந்தார். அதிக எச்சரிக்கைக்குக் காரணம், அவரது அண்ணன் மகனின் உயர் கல்வி விஷயத்தில் நடந்ததுதான். அண்ணன் மகனுக்கு 11 வருடங்களுக்கு முன் சிறப்பானதொரு கல்லூரியில் மிகுந்த பொருட்செலவில் இடம் வாங்கி, வாகனப் பொறியியல் (BE Automobile Engineering) படிக்க வைத்தனர். சிறப்பாகவே கல்வியை முடித்த மாணவரும் ஓரிரு வருடங்கள் அத்துறையில் பெங்களூரில் பணிபுரிந்தார். திருமணமாகி மனைவி மென்பொருள்துறையில் பணிபுரிபவராக வந்ததும், மனைவி தன்னைவிட அதிகம் சம்பாதிப்பதை பார்த்ததும், மனைவியின் முன் தான் தாழ்ந்து போவதை தவிர்க்க, அண்ணன் மகனும் மென்பொருள் துறையில் புகுந்து, பிறகு அதில் தனது திறமையை வளர்த்துக்கொண்டு தற்போது குடும்பத்துடன் கனடாவில் 6 வருடங்களாக வசிக்கிறார்கள். அன்பர் கேட்டது, அண்ணன் தனது பூர்வீக இடத்தை அடமானம் வைத்து மகனை அவர் விரும்பிய துறையிலேயே படிக்க வைத்தார். ஆனால் ஏன் அவர் அத்துறையில் நீடிக்கவில்லை? என்பதுதான். காலத்தை ஆளும் கிரகங்கள் தங்களது ஆதிக்க காலங்களில் மனித வாழ்வை தங்கள் இஷ்டப்படி மாற்றியமைக்கின்றன.  நாம் அனைவரும் காலம் விளையாடும் பொம்மைகள்தான் என்று கூறினாலும் அவர் சமாதானம் ஆகவில்லை. அண்ணன் மகன் செவ்வாய் தசையில் வாகனப் பொறியியல் பயின்றவர், அதை அடுத்து வந்த ராகு தசையில் கணினித் துறைக்கு மாறியுள்ளார். தசாம்சத்தில் அவருக்கு 1௦ ஆமிடத்தில் நீர் ராசியில் ராகு சுக்கிரன் சேர்க்கை அமைந்துள்ளது. அதனால் ராகு தசையில் மனைவியிடம் அவமானப்படுவதை தவிர்க்க கணினித் துறைக்குள் நுழைந்து வெளிநாட்டில் வசிக்கிறார். வானகத்தின் மீது அவருக்கு இருந்த ஆர்வம் மனைவிடம் அவமானப்படுவதை தவிர்க்க பலியாகியுள்ளது. இதுபோல ஒவ்வொரு கிரக ஆதிக்க காலமும் மனிதனை மாற்றியமைக்கும், எனவே காலத்துடன் இணைந்து பயணிப்பதே நல்லது என்று கூறினேன். என்னிடமிருந்த சில ஜாதகங்களை அவருக்கு உதாரணத்துடன் விளக்கினேன். அவர் பெறும் பொருட்செலவு செய்து குழந்தைகளை படிக்க வைக்கிறோம். அவர்கள் அது சார்ந்த துறையில் பயணிக்காத போது படித்த படிப்பு வீண் என ஆகிவிடுகிறது என்பது அவரது ஆதங்கம்.

உயர்கல்வி பற்றி ஏற்கனவே பல பதிவுகள் வந்திருந்தாலும் இந்தப் பதிவு கிரகங்கள் தங்களது தசா-புக்தி காலங்களில் எப்படி மாற்றங்களை கொண்டு வருகின்றன என்பது பற்றியும், அதை ஜோதிடத்தின் மூலம் முன் அனுமானிப்பது உயர் கல்வி விஷயத்தில் உதவுமா? என்பது பற்றியதும்தான்.

கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

மகர லக்ன ஜாதகத்தில் 4 ஆமதிபதி செவ்வாய் உச்சம். லக்னத்தில் அமைந்த சூரியனிடமிருந்து 10 பாகைக்கு மேல் விலகியுள்ளதால் செவ்வாய்க்கு அஸ்தங்க பாதிப்பில்லை. ஒரு ஜாதகத்தில்  வலுப்பெற்ற கிரகம் ஜாதகரை இயக்கும். சூரியனுக்கு அஷ்டமாதித்ய தோஷம் இல்லை என்பதால் லக்னத்தில் அமைந்த ராஜ கிரகம் சூரியன் ஜாதகருக்கு கௌரவமான வாழ்வுக்கும், அரசு வகை ஆதாயங்களுக்கும் ஆதரவளிப்பார். லக்னத்தில் சூரியனுடன் இணைந்த உச்ச செவ்வாய் வித்யா ஸ்தானமாகிய 4 – 11 அதிபதி என்பதை கவனிக்க. இதனால் ஜாதகருக்கு கல்வி சிறப்பாக அமையும். ஆனால் அவர் 11 ஆமதிபதியுமாகி சந்திரனின் திருவோணத்தில் நிற்க, சந்திரன் லாப ஸ்தானமான 11 ஆமிடத்தில் நின்று கும்ப சனியின் 10 ஆம் பார்வையை பெறுவதால், ஜாதகர் தனது லாப நோக்கத்திற்காக கற்ற கல்வியை கைவிட்டு வேறு துறைக்கு செல்ல வாய்ப்புண்டு என்பதை அறியலாம். சந்திரனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் உச்சம் பெறுவதால் நீச பங்கமடையும் சந்திரன் 1௦ ஆமிடத்தில் நிற்கும் குருவின் விசாக நட்சத்திரத்தில் நிற்கிறார் என்பது இதை தெளிவாக்குகிறது. லக்னத்தில் அமைந்த சூரியனும் செவ்வாயும் கால புருஷ 4 ஆமிடமான கடக ராசியாதிபதி சந்திரனின் திருவோணத்தில் நின்று கடக ராசியை பார்ப்பதால் ஜாதகருக்கு விவசாயம், மருத்துவம், கட்டுமானம் ஆகிய துறைகள் ஏற்றவையாக இருக்கும். லக்னாதிபதி சனியும் அவரோடு இணைந்த புதனும் ராகுவின் சதயத்தில் நிற்க, ராகுவின் நிழல் லக்னத்தின் மீது பதிவதாலும், சந்திரனோடு ராகு இணைந்துள்ளதாலும் இங்கு விவசாயம், கட்டுமானம் ஆகிய துறைகளில் செயல்பட ராகு அனுமதிக்க மாட்டார். எனினும் மருத்துவம், ஆரோக்கியம் ஆகியவை ராகு-கேதுக்கள் தொடர்புடைய துறை என்பதால் ராகு அதற்கு தடை செய்ய மாட்டார். லக்ன சூரியன் கால புருஷனுக்கு நோயிலிருந்து மீழ்வதை குறிக்கும் 5 ஆமதிபதி என்பது கவனிக்கத்தக்கது. இதனால் இவர் மருத்துவம் சார்ந்த துறைகளில் பயணிப்பது நன்று. லக்னாதிபதி சனியும் கணிதம், வாக்கு, மருத்துவத்துடன் தொடர்புடைய புதனுடன் இணைந்திருப்பது இதற்கு உதவும். சூரியன் சனி வீட்டில் தன் வீட்டிற்கு 6 ல் மறைவதால் ஜாதகர் நேரடியாக மருத்துவராக இயலாது. ஆனால் மருத்துவத்துறையுடன் தொடர்பாக இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் கல்லூரிக் காலத்தில் ஜாதகருக்கு நடக்கும் தசா-புக்தி கிரகங்கள் ஜாதகரின் தெரிவுகளில் தங்களது காரகங்களை திணிப்பார்கள் என்பதால் ஜாதகர் கல்லூரி சென்றபோது என்ன துறை அவரை அரவணைக்கும் என உயர் கல்வி வாய்ப்புகளை தெரிவிக்கும் சதுர்விம்சாம்ச வர்க்கம் மூலம் ஆராய்வோம் வாருங்கள்.

சதுர் விம்சாம்ச லக்னமும் ராசிச் சக்கரம் போல மகரமானதால் லக்னம் வர்கோத்தமம் பெற்று, லக்னாதிபதி சனி ஆட்சி பெற்றிருப்பதால், உயர் கல்வியை பொறுத்தவரை ஜாதகர் இதைத்தான் படிக்க வேண்டும் என்ற தெளிவான முடிவில் இருப்பார். வித்யா ஸ்தனாதிபதி (4 ஆமதிபதி) செவ்வாய் ஆட்சி பெற்றுள்ளது, உயர் கல்வி பாவகமான 9 ஆமிடத்தை வித்யா காரகர் புதன், மீனத்தில் உச்ச சுக்கிரனுடன் இணைந்து நீசபங்கப்பட்டு பார்ப்பதால் உயர்கல்வி சிறப்பாகவே அமையும். 9 ஆமதிபதி புதன் இரட்டை ராசியான மீனத்தில் அமைவதால் ஜாதகர் உயர் கல்வியில் இரண்டு பட்டங்களை பெறுவார். சந்திரன் ஆட்சி பெற்றது ஜாதகர் கல்வியில் தெளிந்த அறிவுடன் இருப்பார் என உறுதியளிக்கிறது. சதுர் விம்சாம்சத்தில் லக்னத்தில் நிற்கும் சனியும் கடகத்தில் நிற்கும் சந்திரனும் நட்சத்திரப் பரிவர்த்தனை பெறுகிரார்கள் (சனி-திருவோணம், சந்திரன்-பூசம்). இதனால் ஜாதகர் சனியின் தசையில், விருட்சிகத்தில் வர்கோத்தமம் பெற்று புதனின் கேட்டை நட்சத்திரத்தில் நின்ற ராகுவின் புக்தியில், வேளாண் கல்லூரியில் இளங்கலை வேளாண் அறிவியல் கல்வியில் (Bsc-Agriculture) சேர்ந்தார். கவனிக்க தசா நாதரும் புக்தி நாதரும் நீர் ராசி, மற்றும் நீர் கிரகங்களின் தொடர்புடன் நிற்பதால் ஜாதகர் வேளாண் அறிவியல் கல்வி பயின்றார். நாம் எதிர்பார்த்தபடியே ஜாதகர் முதுகலை வேளாண் அறிவியல் கல்வியையும் (Msc-Agriculture) முடித்தார். ஜாதகர் கல்வியை முடிக்கும்போது சனி தசையும் முடிந்திருந்தது. இனி புதன் தசையில் ஜாதகரின் பணி வாய்ப்புகள் பற்றி அறிய அதற்கான வர்க்கம் தசாம்சம் மூலம் ஆராய்வோம் வாருங்கள்.

தசாம்ச லக்னத்தில் ராசிச் சக்கரத்தைப் போலவே மேஷ லக்னத்தில் சூரியன் உச்சம் பெற்று நிற்கிறார். எனவே ஜாதகருக்கு உறுதியாக சூரியன் குறிக்கும் அரசுத்துறையில் பணி அமையும். உச்ச சூரியனுடன் இணைந்து நீச பங்கமடைந்து குருவுடன் சனி லக்னத்தில் அமைந்திருப்பதால் ஜாதகர் தனது பணியில் சிறப்படைவது உறுதி. நடப்பு தசாநாதர் புதன் விவசாய பாவகமான 4 ஆமிடத்திற்கு பாதகத்தில் சூரியன் சாரத்தில் (கார்த்திகை-3) அமைந்துவிட்டதாலும் விவசாயப்பணி என்பது இங்கு அடிபட்டுப் போகிறது. விவசாயத்தை குறிப்பிடம் 4 ஆமிடத்தில் சந்திரன் ஆட்சி பெற்றிந்தாலும் அவர் சனி சாரம் பெற்றுவிட்டதாலும் (பூசம்-1), குருவுடனான பரிவர்த்தனைக்குப் பிறகு பூமி காரகர் செவ்வாய் சனியோடு தொடர்பாவதாலும் விவசாயம் ஜாதகருக்கு வாழ்வை வழங்காது. சூரியனின் உத்திரம்-2 ல் புதனின் கன்னி ராசியில் மருத்துவக் கிரகம் ராகு அமைந்துள்ளதாலும், சூரியன் தொடர்பு பெற்ற  தசாநாதர் புதன் விவசாயத்தை விடுத்து மருத்துவத்தையே பிரதானமாகக்கொண்டு பலனளிப்பார். ஜாதகருக்கு நடப்பது கால புருஷ 6 ஆமதிபதி புதனின் தசை என்பதால் புதன் தசையில் மருத்துவத்துடன் தொடர்புடைய அரசுப்பணி அமைந்துவிடும்.

நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் ஆரோக்யத்துடன் தொடர்புடையவை. குருவுடனான பரிவர்த்தனைக்குப் பிறகு தனுசுச் செவ்வாய் மேஷத்தில் ஆட்சி பெற்று சூரியன், சனியுடன் இணைவது ஜாதகர் மருத்துவம் சார்ந்த துறையில் ஈடுபடுவார் என்பதைக் குறிக்கிறது. கால புருஷ 1 , 5, 9 ஆகிய நெருப்பு ராசியில் அமையும்  நெருப்பு கிரகங்கள் சூரியன், செவ்வாய், குரு ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்பாவது ஒருவரை மருத்துவத் துறையில் ஈடுபடுத்தும் அமைப்பாகும். லக்னத்திற்கு 1, 5, 9 ல் அமையும் சூரியன், செவ்வாய், குருவினாலும் மருத்துவத்துறை ஒருவரை அரவணைக்கும் என்றாலும் ராசித் தந்துவத்திற்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும். தசாநாதரும் வாக்கு காரகருமான புதன், உச்ச சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் தன, வாக்கு வாக்கு ஸ்தானத்தில் அமைவதால், ஜாதகருக்கு மருத்துவத்துறையில் ஆலோசனை, நிதித்துறையில் பணி அமையும் வாய்ப்பு அதிகம்.

இந்த ஜாதகர் முதுகலை வேளாண் அறிவியலில் பட்டம் பெற்றிருந்தாலும் இவருக்கு தமிழக அரசின் மருத்துவத்துறையில் அதிர்ச்சி மற்றும் மனச்சோர்வு பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆலோசனைப் பிரிவில் பணி கிடைத்துள்ளது. 

ஜாதகத்தில் லக்னத்துடனும், லக்னாதிபதியுடன் தொடர்பாகும் கிரக காரகங்கள் ஒருவரது வாழ்வில் ஆத்மார்த்தமாக உடன் பயணிக்கும் என்ற வகையில் கல்வியை தேர்ந்தெடுப்பது சிறப்பாக இருக்கும் என்றாலும், அப்படி தொடர்பாகாத தசா-புக்தி கிரகங்கள் ஜாதகரை தங்களிஷ்டப்படி இயக்குகின்றன என்பது நிதர்சனமான உண்மை. கல்லூரிக் காலத்திலும், பணியாற்றும் 6௦ வயது வரையிலும், லக்னத்துடனும் லக்னாதிபதி கிரகத்துடனும் தசாபுக்தி கிரகங்கள் தொடர்பாகி இருப்பது அபூர்வமே. எந்தக்காலத்தில் எவ்வித மாறுதல் ஏற்படும் என தேர்ந்த ஜோதிடரால் ஆலோசனை வழங்க இயலும் என்றாலும் வாழ்வு தரும் மாறுதல்களை வாய்ப்பாகவும், புதிய அனுபவங்களாகவும் பார்ப்பவர்களே வாழ்வை முழுமையாக வாழ்கிறார்கள். வாழ்க்கையில் கோடு போட்டுக்கொண்டு வாழ்பவர்கள் வாழ்வை இழக்கிறார்கள். எனவே பரந்த மனப்பான்மையுடன் வாழ்வை எதிர் நோக்குங்கள். எந்தக் கல்வியாயினும் அடிப்படையாக ஒரு நல்ல கல்வித்தகுதி பெற்றிருப்பது அவசியம். கால மாற்றங்களில் புதிய துறைகளில் ஈடுபடுகையில் அதற்கான அறிவை வளர்த்துக்கொள்வது நம்மை நிலை நிறுத்திக்கொள்ள உதவும்.

மீண்டுமொரு பதிவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501. 

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

6 ஆம் பாவகம்

வெளிநாட்டு வேலைக்கு வருட கிரகப் பெயர்ச்சிகளால் பாதிப்பு வருமா? 

தற்போதைய உலகளாவிய சூழல்களில் வெளிநாட்டில் பணிபுரிந்துகொண்டிருக்கும் அன்பர்களுக்கு தங்கள் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியுமா? என்பது கவலைக்குரிய விஷயமாகவுள்ளது. வருடாந்திர கிரகப் பெயர்ச்சிகள் பொதுவாக அனைவர் வாழ்விலும் மாறுதல்களைக் கொண்டுவரும் பொதுவான நிகழ்வுகளே. இந்நிகழ்வுகள் தற்காலிகமானவையா?

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு…

அடித்தட்டு மக்கள் பணம் சம்பாதிக்க நாய் படாத பாடு படுகிறார்கள் என்றால், தனவந்தர்கள் பணத்தை வைத்து அடிக்கும் கூத்துக்களை பார்த்தால் சில நேரங்களில் அட கொடுமையே என்று இருக்கும். சமீபத்தில் என்னிடம் ஒரு அன்பர்

மேலும் படிக்க »
சந்திரன்

ஜாதகம் சரியானதா?

கால்குலேட்டர் வந்த பிறகு கணக்குப் போடுவது மறந்துவிட்டதா? என்றால் அதில் ஓரளவு உண்மையும் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. பெரும்பாலோருக்கு வாய்ப்பாடுகள் மறந்துவிட்டிருக்கும்.  இன்று கூகிள் ஜெமினி போன்ற கைபேசி சேவகர்கள் வந்துவிட்ட பிறகு

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

மூன்றாமிடமும் காமமும்!

பல்வேறு ஊர்களில் இருந்து என்னை தொடர்புகொள்ளும் மனிதர்களை அவர்களது ஜாதகங்கள் மூலம் படிக்கிறேன் என்றால் அது மிகையல்ல. நம் பார்வையில் கடந்து செல்லும் பல மனித முகங்களில் ஒரு சிநேகப் புன்னகையை நாம் கண்டாலும்

மேலும் படிக்க »
கல்வி

நீச புதன் மருத்துவராக்குமா?

ஒரு கிரகத்தின் செயல்பாடு அதை மட்டும் சார்ந்திருப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பல்வேறு காரணிகளை ஆராய்ந்தே அதன் செயல்பாட்டை அறிய இயலும். உதாரணமாக ஒரு  கிரகம் ஜாதகத்தில் சாதகமற்ற நிலையில் இருந்தாலும்கூட அது நின்ற ராசி,

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

நிலாச் சோறு!

வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு எளிதில் வாய்த்துவிடும். சில விஷயங்கள் நம்மைத் தேடி வரும் என்று கூடச் சொல்லலாம். சில விஷயங்கள் எவ்வளவு தேடிச் சென்றாலும்  கிடைக்காமல் நம்மை ஏங்க வைத்துவிடும். கல்வி, வேலை,

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil