
வாழ்க்கைச் சூழல் இந்த நவீன உலகில் விரைவாக மாறி வருகிறது. குறிப்பாக மென்பொருள் நிறுவனங்களில் AI போன்ற புதிய கண்டுபிடிப்புகள் கணினி நிரல்கள் (Coding) எழுதுபவர்களுக்கும், Developers களுக்கும் முதல் கட்ட பாதிப்பை வழங்கும் என்று கூறுகிறார்கள். உலக நிகழ்வுகள் பல வேலைகளுக்கு சாதகமற்ற சூழலை தற்காலிகமாக ஏற்படுத்திக்கொண்டுள்ளன. இந்நிலையில் பணியிழப்பு, பணி மாறுதல் என்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. பணியிழப்பு எனும் சூழலில் புதிய நிறுவனங்களுக்கு பணிக்கு செல்லும் நபர்கள் பணி எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் கட்டாயத்தில் இருப்பார். இரண்டாவது வகையினர் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து தங்கள் திறமைக்கு அதிக ஊதியம் தரும் நிறுவனத்திற்கு மாற விரும்புபவர்கள். மூன்றாவது வகையினர் பணியிடத்தில் தங்களது வேலைக்கான முக்கியத்துவம் குறைந்துவரும் சூழலில் முன்னெச்சரிக்கையாக தங்களது திறமையை பயன்படுத்திக்கொள்ளும் புதிய நிறுவனங்களை நாடுபவர்களாக இருக்கின்றனர். முதல் வகையினருக்கு இல்லாத ஒரு வாய்ப்பு மற்ற இரு வகையினருக்கு உண்டு. இரண்டு மற்றும் மூன்றாம் வகையினருக்கு அவசரமாக வேலை மாறவேண்டிய கட்டாயமில்லை. இவர்களுக்கு பொறுமையும், முன்னெச்சரிக்கையும் அதிகம். புதிய வேலை, அதை தரும் நிறுவனம் பற்றி அலசுவது ஆகியவற்றில் கவனம் காட்டுவர். இது பற்றி ஆராய்வதே இன்றைய பதிவு.
வெளிநாட்டில் பணிபுரியும் தனது மகன் புதிய நிறுவனத்திற்கு பணிமாறுதலில் செல்வதாகவும். புதிய இடத்தில் வேலை மகனுக்கு எப்படி இருக்கும்? எனவும் ஜாதகரின் சார்பாக இந்தியாவிலுள்ள அவரது தாயார் எனது நெருங்கிய வட்டத்தில் இருந்து கேட்டுக்கொண்டனர். கீழே தொடர்புடைய ஜாதகம்.

வெளிநாட்டு வேலையா?
விருட்சிக லக்னமும், லக்னாதிபதி செவ்வாய் அமர்ந்த கடகமும் நீர் ராசிகளாவதால் ஜாதகருக்கு இயல்பாகவே வெளிநாட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும். லக்னத்துடன் ராகு-கேதுக்கள் தொடர்புகொள்வதால் அந்நிய தேசம் ஜாதகரை அரவணைக்கும் வாய்ப்புகளே ஜாதகருக்கு உள்ளது. லக்னத்தை லக்னாதிபதி நின்ற வீட்டோனும், பாக்யாதிபதியுமான சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெற்று பார்க்கிறார். இதனால் ஜாதகருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் தேடி வரும். 8, 11 அதிபதி புதன் லக்னத்தில் வந்து அமர்வதால் ஜாதகரது திறமைக்கு அங்கீகாரமும் சம்பாத்தியமும் கண்காணாத வெளிநாட்டில்தான் அமையும் என்பது புரிகிறது. லக்னத்தில் 1௦ ஆமதிபதி சூரியன் வந்து அமர்ந்துள்ளதால் ஜாதகர் உலகின் முதன்மையான அமெரிக்க தேசத்தில் பணியில் உள்ளார். லக்னத்தில் 1௦ ஆமதிபதி சூரியன் புதன், ராகுவுடன் இணைந்து அமர்வதால் ஜாதகர் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிகிறார்.
பணி மாறுதல் ஏன்?
ஜாதகர் தற்போது ராகு தசையில் சந்திர புக்தியில் உள்ளார். சனி அந்தரம் நடக்கிறது. புக்திநாதரும் பாக்யாதிபதியுமான சந்திரன் ரிஷபத்தில் ரோஹிணி-1 சுய சாரத்தில் உச்சம் பெற்று அமைந்துள்ளார். ஜீவன காரகர் சனி புக்திநாதர் சந்திரனின் திருவோணம்-4 ல் புக்திநாதருக்கு திரிகோணத்தில் அவர் சாரத்திலேயே நிற்கிறார். இப்படி மாற்றத்தின் காரகர் சந்திரனும் ஜீவன காரகர் சனியும் தொடர்பாவதால், சந்திர புக்தியில் ஜாதகருக்கு பணி மாறுதல் வருகிறது. புக்திநாதர் சந்திரன் வாழ்வில் உயர்வைத்தரும் பாக்கிய ஸ்தானாதிபதி என்பதால் பாக்கியத்தை தனது புக்தியில் ஜாதகருக்கு வழங்கியாக வேண்டும். அதனால் ஜாதகருக்கு வந்துள்ள பணி மாறுதல் ஜாதகருக்கு உயர்வைத் தருவதாகவே இருக்கும். ஆனால் சந்திரன் பாதகாதிபதியும் கூட என்பதால் ஜாதகருக்கு மாறுதல் தவறானால் என்ன செய்வது என்ற மனக்குழப்பமும் இருக்கும். இதற்கு மனோ காரகர் சந்திரனுடன் குழப்ப காரகர் கேது இணைந்துள்ளதும் காரணம். பொதுவாகவே பெரிய முடிவுகள் எடுக்க ரிஷப ராசியினர் மிகுந்த நிதானம் காட்டுவர் என்பது நிதர்சனம். ஜாதகத்தில் 11 ஆமிட கன்னி குரு, சந்திரனின் மற்றொரு நட்சத்திரம் ஹஸ்தத்தில் நின்று 9 ஆம் பார்வையாக சந்திரனை பார்ப்பதால் ஜாதகருக்கு குழப்பத்தை மீறிய மனத்தெளிவு கிடைக்கும்.
பணி மாறுதலால் நன்மையா தீமையா?
எனும் கேள்வி எழுகையில் தசா-புக்தி கிரகங்களின் கோட்சார சஞ்சார நிலைகளை கவனித்தால் தெரிந்துவிடும். கோட்சாரத்தில் தசாநாதர் ராகு லக்னத்திற்கு 4 ஆமிடமான கும்பத்திற்கு அடுத்த சில மாதங்களில் பெயர்ச்சியாகி வரவுள்ளார். கும்பம் ராசிக்கு 1௦ ஆமிடம் என்பதாலும் ஜனன காலத்தில் கிரகமில்லா வீட்டிக்கு ராகு வருவதாலும் தீமையில்லை. மேலும் கும்ப ராகுவிற்கு வைகாசி மாதம் மிதுனத்திற்கு பெயர்ச்சியாகும் குருவின் 9 ஆம் பார்வையும் கிடைப்பது நன்மையே. மிதுனம் ராசிக்கு 2 ஆமிடம் என்பதும் பணிமாறுதலால் ஜாதகருக்கு நல்ல பலன்கள் கிடைப்பது உறுதியாகிறது. சந்திர புக்தியை அடுத்து வரும் செவ்வாய் புக்தியும் செவ்வாய் நீசபங்கப்பட்டதால் ஜாதகருக்கு நன்மையே செய்யும். செவ்வாய் புக்தியுடன் ராகு தசை ஜாதகருக்கு முடிவடையும். பிறகு குரு தசை துவங்கியதும் ஜாதகருக்கு மீண்டும் ஒரு பணி மாறுதல் என்பது தவிர்க்க முடியாததாக இருக்கும். காரணம் ராகு தசை கொடுத்த பலனிலிருந்து குரு மாறுபட்ட பலன்களை வழங்கியாக வேண்டும். தன காரகர் குரு லாப ஸ்தானத்தில் இருப்பதால் வருமான ரீதியாக ஜாதகரை லாபகரமான நிலைக்கு உயர்த்துவார். காரணம் குருவும் மாற்றத்தின் காரகர் சந்திரனின் சாரத்தில் நிற்பதுதான். சனியும் குருவும் சந்திரனின் சாரத்தில் சந்திரனுக்கு திரிகோணத்தில் நின்று, குரு தசை துவங்குவதால் பணி மாறுதல் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதற்கு ராகு தசையின் இறுதியில் பாதக ஸ்தானத்தில் நிற்கும் செவ்வாயின் புக்தியில் நடக்கும் கசப்பான ஒரு சம்பவம் காரணமாக இருக்கும். அதே காலத்தில் ராகு ஜனன சனியின் மீது வருவதால் வேலையில் பாதிப்பை எதிர்கொண்டு பிறகே நல்ல ஒரு இடத்திற்கு மாறுதலாகிச் செல்வார். செவ்வாய் புக்தியில் கசப்பான நிகழ்வை சந்திக்காவிட்டால் ஜாதகர் பணிமாறுதல் பற்றி சிந்திக்க மாட்டார். ராசிக்கு 8, 11 அதிபதி குரு என்பதாLலும், லக்னத்திற்கு வேலை பாவகமான 6 ன் விரைய பாவமான 5 ஆமதிபதியாகி 11 இல் இருந்து 5 ஆமிடத்தை பார்ப்பதால் முதலில் வேலைக்கு பாதிப்பை தந்துவிட்டே பிறகு நற்பலன்களை அளிப்பார் எனலாம். லக்னத்திற்கு 5 ஆமதிபதியான குரு தசை துவங்கியதும் வேலைக்கு முதலில் பாதிப்பை கொடுத்தாலும், சில மாதங்களுக்கு முன் திருமணமான ஜாதகருக்கு குழந்தை வகையில் குறைவற்ற பாக்கியத்தை தந்துவிடுவார் எனலாம்.
எனவே தற்போதைய வேலை மாறுதல் ஜாதகருக்கு நன்மை செய்யும். பிறகு அடுத்த ஆண்டு இறுதியில் பணியில் மீண்டும் ஒரு மாறுதல் வரும். எனவே இப்போதைய பணிமாறுதலை தயங்காமல் ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறினேன்.
விரைவில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501