
வேலை செய்யுமிடத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான சூழல் அமைந்துவிடுவதில்லை. ஒரே சூழலில் பணிபுரிபவர்களுக்கும் பொறுப்புகள் வெவ்வேறாக இருக்கும். இதனால் அவர்கள் பணி அனுபவமும் வெவ்வேறாகவே இருக்கும். பணியாளர்கள் அனைவருமே ஏதோ ஒரு மனக்குறையை வெளிப்படுதுபவர்களாகவே உள்ளனர். ஒருவருக்கு சம்பாத்தியம் அதிகம் ஆனால் பணி நேரமும் அதிகம். மற்றொருவருக்கு திறமையுள்ள அல்லது விருப்பதுறையில் வேலை கிடைப்பதில்லை இப்படி பல. கிடைக்கும் வேலையை மனதார நேசித்து செய்பவர்கள் அதில் மிளிர்கின்றனர். கிடைக்கும் வேலையில் இருந்துகொண்டு தங்களுக்கான இடைத்தை தேடிக்கொண்டே இருப்பவர்கள் அதை நோக்கிய பயணத்தில் ஒருநாள் தங்களுக்கான இடத்தை அடைந்துவிடுகின்றனர். பணிபுரியும் அனைவரும் ஒரு கட்டத்தில் விரும்புவது சுய தொழிலே. அதில் யாருக்கும் கட்டுப்பட்டு வேலைசெய்ய வேண்டிய நிர்பந்தமில்லை. தங்களது திறமை, விருப்பம், தேவை, பலம், பலவீனம் ஆகியவற்றை அறிந்துகொண்டு சரியான திட்டமிடலோடு சுயதொழிலில் ஈடுபடுபவர்கள் அதில் ஜொலிக்கிறார்கள். ஏனைய கணிசமானவர்கள் சுயதொழிலிலும் தோற்கிறார்கள். பணியாளர்கள் அனைவரும் தங்கள் திறமைக்கும் உழைப்பிற்கும் தக்கபடி தங்களுக்கு முன்னேற வாய்ப்புகளும் ஊதியமும் வழங்கப்பட வேண்டும் என்று எதிர் பார்ப்பது இயல்பு. ஆனால் தகுதி மற்றும் திறமை மட்டுமே பணி உயர்வில் பரிசீலிக்கப்படுகிறதா? என்று பார்த்தால் பல்வேறு காரணங்களால் அது தடைபடும் அல்லது மறுக்கப்படும். சிலருக்கு எளிதாக கிடைக்கும் பணி உயர்வு மற்றொருவருக்கு எட்டாக் கனியாகிறது. ஒருவரின் துறை சார்ந்த அறிவு மற்றும் அனுபவத்துடன் மற்றவர்களுடன் அவர் இணைத்து செயல்படும் பண்பும் பணி உயர்வில் முக்கியமாக பரிசீலிக்கப்படுகிறது.
ஜாதகத்தில் சனி வக்கிரமானவர்கள் எளிதில் வேலை விஷயத்தில் மற்றவர்களுடன் இணைந்து செயல்பட மாட்டார்கள். இதனால் அவர்களுக்கு நல்ல அறிவும் திறமையும் இருந்தும் பணி உயர்வுகள் மறுக்கப்படுகின்றன. அத்தகையோருக்கு வேலையில் அங்கீகாரமே கிடைப்பதில்லை. அவரைப்போன்றே சனி வக்கிரமான மற்றொருவரால் மட்டுமே அவரது திறமையை புரிந்துகொள்ள முடியும். சனி வக்கிரமானோர் சுய தொழில் செய்வது சிறப்பு. இல்லையேல் தனது ஜாதகத்தைப் போன்றே சனி வக்கிரம் பெற்ற முதலாளியிடம் மட்டுமே தனது திறமைக்கான அங்கீகாரத்தையும் உயர்வையும் பெற முடியும். இன்றைய பதிவில் பணி உயர்வை வழங்கும் மற்றும் தடை செய்யும் அமைப்புகளை ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆய்வு செய்யவிருக்கிறோம்.

மேலே நீங்கள் காண்பது தனது ஐம்பதுகளில் இருக்கும் ஒரு ஆணின் ஜாதகம். சர லக்னம் கடகம். வேகமான லக்னம். கால புருஷ 4 ஆமிடம் லக்னமாக அமைந்தால் இயல்பாகவே விரைந்த முன்னேற்றமும், வீடு, வாகன வசதிகளையும் பெற்றுவிடும். ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் லாப ஸ்தானத்தில் உச்சம். எனவே சந்திரனே இந்த ஜாதகத்தை இயக்குகிறார். உச்ச வலுப்பெற்ற கிரகம் அதன் நட்சத்திர நாதன் வகையிலேயே ஜாதகரை இயக்குவார். சந்திரன் கார்த்திகை-3 ல் உள்ளார். லக்னாதிபதியை சூரியனோடு இணைந்த புதன் பார்க்கிறார். பரிவர்த்தனைக்குப் பிறகு சூரியனோடு இணைந்த செவ்வாய் ஜாதகரை பார்க்கிறார். லக்னம், லக்னாதிபதியை தொடர்புகொள்ளும் கிரகங்கள் ஒருவரது பிறப்பின் நோக்கத்தை தெரிவிக்கும். அதாவது அவற்றின் வழி கர்மாவை ஜாதகர் அனுபவிப்பார். இந்த ஜாதகத்தில் சூரியன் லக்னாதிபதியை பார்க்கிறார். இதனால் ஜாதகருக்கு அரசாங்க தொடர்பு ஏற்படும். பரிவர்த்தனைக்கு முன் புதனும் பரிவர்த்தனைக்கு பிறகு செவ்வாயும் லக்னாதிபதியை தொடர்புகொள்கிறார்கள். கால புருஷனுக்கு 6, 8 ல் இந்த பரிவர்த்தனை அமைகிறது. 6 ஆமிடம் கடன், வழக்கு, வியாதியை குறிப்பிடும். 8 ஆமிடம் ஆயுள், கண்டம், விபத்து, அவமானம் போன்றவற்றை குறிக்கும். இங்கு 6 ஆமிடம் வேலையை தந்தால் அது அரசு வேலையாக இருக்கும். ஆனால் வேலையில் வழக்கும் அவமானமும் வரும். பரிவர்த்தனை தொடர்பு உடன் பணிபுரிபவர்களின் செயல்கள் ஜாதகரையும் பாதிக்கும் என எடுத்துக்கொள்ளலாம். இங்கு 6 ஆமிடம் வியாதியை தந்தால் அது சரிசெய்ய இயலாத வியாதியாக இருக்கும். செவ்வாய் ரத்த அணுக்களை குறிப்பதால் வியாதி பரம்பரை ரத்த தொடர்பு மூலம் வரும் வியாதியாக இருக்கும். ஜாதகர் அரசின் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரிகிறார். ஜாதகருக்கு சர்க்கரை வியாதி உண்டு.
தசாம்சம் காட்டும் பணிச்சூழல்.
ராசியைக்கொண்டு ஜாதகத்தை ஆராய்வது மேலோட்டமானது என்றால் வர்க்கச் சக்கரங்களைக்கொண்டு ஆராய்வதே நுட்பமான பலனை தெரிவிக்கும். ராசி சுட்டிக்காட்டாத விஷயங்களை வர்க்கச்சக்கரங்கள் செயல்படுத்தாது. வர்க்கச்சக்கரங்கள் என்பது ராசியின் Microscopic view என்று கூறலாம். ஒரு விஷயத்தில் பொதுவான கண்ணோட்டத்தை ராசி சுட்டிக் காட்டுமென்றால் அது தொடர்புடைய வர்க்கச்சக்கரம் அந்த விஷயத்தின் சூழல், அதற்கு கிடைக்கும் உதவிகள், எதிர்ப்புகள், அதனால் விளையும் சாதகங்கள், அதனால் ஜாதகர் அடையும் பாதகங்கள், அவ்விஷயம் நடக்கும் இடம், காலம் போன்ற பல்வேறு காரணிகளை ராசியைவிட வர்க்கச்சக்கரமே தெளிவாக கூறும்.
இப்போது இவரது பணியின் சூழலை தசாம்சம் மூலம் ஆராய்வோம்.

கன்னி கால புருஷனுக்கு 6 ஆவது லக்னம். வேலையையும் உடன் வியாதியையும் கடன், வழக்கையும் தரும் லக்னம் என்றுகூட கன்னி லக்னத்திற்கு பெயருண்டு. லக்னதிலேயே வாகன காரகர்களுள் ஒருவரான சுக்கிரன் கேதுவுடன் சேர்க்கை பெற்றுள்ளார். மற்றொரு வாகன காரகர் செவ்வாய் லக்னாதிபதி புதனோடு இணைந்து வாகன பாவகம் 4 ஆமிடத்திலேயே அமைந்துள்ளார். அரசு வகை ஆதாயங்களை குறிக்கும் சூரியன் ராசியைப் போன்றே தசாம்சத்திலும் 5 ல் அமைந்துள்ளார். இவை ஜாதகர் செய்யும் பணியை தெளிவாக குறிப்பிடுகிறது. 7 ஆமிட ராகுவை 10 ஆமதிபதி புதனோடு இணைந்த செவ்வாயும் கேதுவோடு இணைந்த சுக்கிரனும் பார்வை செய்கின்றனர். ராசியில் சனியோடு சனி சாரத்தில் அமைந்த ராகு அமைந்துள்ளார். இதனால் ராகு தனது தசையில் ஜாதகருக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணி கிடைக்க வைத்தார் எனலாம்.
ஜாதகருக்கு குரு தசையில் புதன் புக்தி துவங்கியது. குரு தசாம்சத்தில் 12ல் அமைந்துள்ளார். 12 என்பது இரண்டிற்கு பாதகம் என்று கன்னி லக்னத்திற்கு அமையும். குருவிற்கு பாவ கர்தாரி யோகம் உள்ளது. குருவை நோக்கி கன்னியிலமைந்த வழக்கு காரகர் கேது வருகிறார். சந்திரனுடனான பரிவர்தனைக்குப் பிறகு வழக்கு பாவகம் 6 ஆமிடத்திற்கு வரும் சனியின் பார்வை தசாநாதர் குருவிற்கு கிடைக்கிறது. இப்படி தசாநாதர் குருவிற்கு கேது மற்றும் 6 ஆமிட சனி தொடர்பு கிடைப்பதால் இவரது அலுவலக பணியாளர்கள் அனைவர் மீதும் விதிகளை மீறி செயல்பட்டதாக அரசு வழக்கு தொடர்ந்தது. குரு தசையில் அரசு வழக்கு தொடர காரணம் சூரியனுக்கு 8 ல் தசாநாதர் குரு அமைந்ததுதான். ஏறக்குறைய பத்து ஆண்டுகள் இந்த வழக்கு நடந்தது இவ்வழக்கில் ஜாதகருக்கு தொடர்பில்லை என அறிவிக்கப்பட்டுவிட்டாலும் இவ்வழக்கால் ஜாதகருக்கு பணியில் பாதிப்பு ஏற்பட்டது. உத்தியோக உயர்வுகள் உள்ளிட்டவை தடைபட்டது. ஜாதகத்தில் சனி வக்கிரமாகியுள்ளதை கவனியுங்கள். இவர் பணியில் மற்றவர்களுடன் இணைந்து செயல்படாததும் இவர் வழக்கில் மற்றவர்களால் கோர்த்துவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
குரு தசையில் ராகு புக்தியில் ஜாதகருக்கு பணி உயர்வு கிடைத்தது. காரணம் கேது துவக்கும் பாதிப்புகளை முடித்து வைப்பவர் ராகு ஆவார். அவர் தசாநாதார் குருவிற்கு 8 ல் அமைந்து 6 ஆமிடத்தை முதலில் தொடுகிறார். ராகு, தான் அடுத்து தொடும் ராசியில் ஒரு கிரகமிருந்தால் தான் இருக்கும் இடத்தோடு அந்த ராசியிலும் நின்று செயல்படும் தன்மை வாய்ந்தது. 6 ஆமிடம் உப ஜெய பாவகம் என்பதால் அங்கு அமரும் கிரகங்கள் தடைகளுக்குப் பிறகு வெற்றியை தரும். மேலும் 6 ல் ராகு, சனி போன்ற பாவிகள் அமர்வது சிறப்பான யோக அமைப்பாகும். அங்கு ராகு சந்திரனுடனான பரிவர்த்தனைக்கு பிறகு வந்து அமரும் சனியுடன் இணைகிறார். இதனால் பணியிட வழக்கை ராகு முடித்து வைத்து ஜாதகருக்கு பணி உயர்வை வழங்குகிறார். சந்திரன் சனி பரிவர்த்தனை இடமாற்றத்துடன் கூடிய உத்தியோக உயர்வை ஜாதகருக்கு வழங்கியுள்ளது. தற்போது ஜாதகருக்கு சனி தசை துவங்கியுள்ளது. சனியும் 6 ல் தான் உள்ளார். இதனால் சனி தசை துவங்கியதும் ஜாதகருக்கு மீண்டும் ஒரு உத்தியோக உயர்வு கிடைத்தது. ராகுவும், சனியும் ராசியில் 9 ல் அமர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது. 9 ஆமிடம் உயர்வை தர வேண்டிய பாக்கிய ஸ்தானமாகும். ராசியில் உறுதியளிக்கப்பட்ட ஒரு விஷயத்தை தசாம்சம் நடத்திவைக்கிறது. மேலும் சம்பவ காலத்தையும் தெளிவாக கூறுகிறது.
முதல் பணி உயர்வுக்கும் இரண்டாவது பணி உயர்வுக்கும் ஓரிரு ஆண்டுகளே வித்தியாசங்கள். ஒரு பதவியில் குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய பிறகே அடுத்த உயர்நிலைக்கு செல்ல முடியும் என்பதே பொதுவான நடைமுறை. ஆனால் இங்கு 6 ஆமிட தொடர்பு பெறும் கிரகங்கள் தங்கள் தசா-புக்தி காலங்களில் உறுதியான பலன்களை வழங்குகின்றன. இப்படி கிரகங்கள் செயல்படுகையில் அங்கு இயல்பான நடைமுறைகள் செயல்படாது. அதாவது மிகச் சிறப்பாக பயிலும் மாணவருக்கு இரட்டை வகுப்புகள் உயர்வை அபூர்வமாக பள்ளிகளில் அன்றைய காலத்தில் அளிப்பார்கள் அதுபோல.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
உங்கள் ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501