வாழ்வின் அனைத்து சூழ்நிலைகளையும் கடந்து செல்ல வேண்டும். ஓரிடத்திலேயே நிற்க இயலாது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் நகர்ந்துகொண்டேதான் இருக்கும். சில சூழ்நிலைகளை நாம் அடிமைப்படுத்தி வைத்திருப்போம். இவற்றை நாம் எளிதாக கையாளலாம். சில சூழ்நிலைகள் நம்மை அடிமைப்படுத்திவிடும். இவை நமக்கு நல்லதாகவோ, தீயதாகவோ, பாடம் புகட்ட வந்ததாக இருக்கும். அவற்றின் தாக்கத்தை உணர்ந்த பின்புதான் என்ன பாடம் என்பது நமக்கு புரியும். பெரும்பாலான மனிதர்கள் பழகிய சூழ்நிலைகளுக்கு அடிமை என்றுதான் கூற வேண்டும். மிகச் சிலரே குளமாக ஓரிடத்திலேயே தேங்கி விடாமல் அனைத்து சூழ்நிலைகளையும் அனுபவித்து உணர விரும்புவர். கட்டுப்பாடுகளே இல்லாமல் இயங்கிய ஒரு அலுவலகத்தை தனது தனித்திறமையால் செம்மையாக நடத்தி பெயர் பெற்ற ஒருவருக்கு அந்த அலுவலகத்தின் மீது ஒரு தனி மதிப்பு இருக்கத்தான் செய்யும். இத்தகையவர்கள் பணியிட மாறுதலை எதிர்நோக்கும்போது பல்வேறு விதமான மனோநிலைகளை அடைகிறார்கள். இப்படி பல ஆண்டுகள் ஓர் இடத்தில் அரசுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற ஓரிரு வருடங்களே இருக்கும் நிலையில் பணியிட மாறுதலை விரும்பாத ஒருவருக்கு விருப்பமில்லா இடத்திற்கு பணியிட மாறுதல் வருகிறது. அவர் மேற்கொண்டு பணியை தொடர வேண்டாம். விருப்ப ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் எனும் நிலையில் என்னை தொடர்புகொண்டார்.
மேற்சொன்னவருக்கு பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.
கும்ப உதயத்திற்கு வேலை பாவகமான 6 ல் ஆரூடம் சந்திரன் வீட்டில் அமைந்து, அதன் அதிபதியும் மாற்றத்தின் காரகருமான சந்திரன் உதயத்தை பார்க்கிறார். இது பணியில் இடமாற்றம் தொடர்பான பிரசன்னம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. வெளிவட்டத்தில் ஜாம ஆரூடாதிபதி சந்திரன் 8 ல் அமைந்துள்ளதை கவனியுங்கள். இது இட மாற்றம் விரும்பத்தகாதது என்பதை குறிப்பிடுகிறது. உதயாதிபதி சனி உதயத்திற்கு விரயத்தில் இருப்பது பலகீனமான அமைப்பே ஆனாலும், அவர் தனது ஆட்சி வீட்டில் வக்கிர கதியில் இருப்பதால் வேலை விஷயத்தில் கேள்வியாளர் பலகீனமான நிலையில் இருந்தாலும் பிடிவாதமான நிலையில் இருக்கிறார் என்பதை குறிப்பிடுகிறது. ஜாம சனி துலாத்தில் கேதுவின் தொடர்பில் உச்சம் பெற்று நிற்கிறார். உடன் அரசாங்க கிரகம் சூரியன் நீசம் பெற்று நிற்கிறார். இதனால் கேள்வியாளருக்கு பாதிப்பான நிலையும், அரசு வகை ஆதாயங்களை அடைய தடையும் உள்ளது தெரிகிறது.
உதயத்திற்கு 2 ல், இரண்டு குருக்களும் அமைந்து உச்ச புதனின் பார்வையை பெறுகிறார்கள். உதயத்திற்கு 5 ல் 10 ஆமதிபதி செவ்வாயுடன் சூரியன் இணைவும், ஜாம உதயாதிபதி சனி, உள் வட்ட சூரியனுடன் இணைவு பெற்றுள்ளதும், ஜாதகர் தமிழக அரசின் நிதி சார்ந்த நிறுவனத்தில் பணிபுரிவதை குறிப்பிடுகிறது. 10 ஆமதிபதி 3 ல் ஆட்சி பெற்று ராகு சேர்க்கை பெற்றுள்ளதும், ஜாம சனி, கேது சேர்க்கை பெற்று அமைந்துள்ளதும், கடன் தவணைகளை வசூலிக்கும் பொறுப்பில் கேள்வியாளர் இருக்கிறார் என அவர் கூறியதை உறுதி செய்கிறது. ஜாம உதயாதிபதி சனி துலாத்தில் மேஷ செவ்வாய், ராகு/கேதுக்கள் தொடர்பில் அமைவது ஜாதகர், வேலை மாற்றத்தினால் பணியை தொடர விரும்பாத நிலையில் உள்ளதை குறிப்பிடுகிறது. பிரசன்னம் சுட்டிக்காட்டும் இத்தகைய சாதகமற்ற அமைப்புகளால் கேள்வியாளர் பணி மாற்றத்தை ஏற்க விருப்பமின்றி விருப்ப ஓய்வு பெற எண்ணியுள்ளார். பிரசன்னத்தில் கவிப்பு உதயத்திற்கு லாபத்தில் அமைந்துள்ளதை கவனியுங்கள். இது வேலை விஷயம் கேள்வியாளருக்கு சாதகமாகவே முடியும் என்பதை தெரிவிக்கிறது. 11 ஆமிட கவிப்பு உதயத்தில் 9 ஆமதிபதி சுக்கிரனோடு இணைந்து சனி, சூரியன், செவ்வாய், ஆகியோரின் பார்வையை பெறுகிறது. வேலை பாவகமான 6 ஆவது பாவகத்திற்கும் ஜாம 6 ஆமதிபதி கன்னி சந்திரனும், 10 ஆவது பாவகமும், இரு குருக்களின் பார்வையை பெறுகிறார்கள். உதயம் 2 குருக்களையும் நோக்கியே நகர்வது சாதகமான அமைப்பே. இவை அனைத்தும் கேள்வியாளர் பொறுமையாக முயன்றால் வேலை விஷயத்தில் நல்ல பலன்களை அடையலாம் என்பதை தெரிவிக்கின்றன. மேலும் உதயாதிபதி சனி வரும் தை மாதம் உதயத்திற்கு வந்து பலமடையவுள்ளது. அரசுக்கோள் சூரியன் நீசமானாலும் அவர் அடுத்து விருட்சிகத்திற்கு வந்து திக் பலமடையவுள்ளார். எனவே விருப்ப ஓய்வு பெறுவதற்கு பதிலாக இடமாறுதலை உங்களுக்கு சாதகமானதாக மாற்றிக்கொள்ள உரிய உயரதிகாரிகளை அணுகி முயற்சி செய்யுங்கள் என்று அறிவுரை வழங்கப்பட்டது.
மாறுதலின் அதிபதியான ஜாம சந்திரன் உதயத்திற்கு 8 ல் அதன் அதிபதி புதனோடு இணைந்து மறைந்துள்ளார். பாவகாதிபதி பாவத்திற்கு வரும் வேலையில்தான் பாவக பலன்கள் சிறப்பை தரும். ஜாம சந்திரன் பின்னோக்கி செல்பவர். அவர் கடகத்தை தொட இடையில் உள்ள சிம்ம ராசியை கடக்க வேண்டும். அதுவும் கடகத்தில் உள்ள உதயாதிபதியின் நட்சத்திரமான பூசத்தை ஜாம சந்திரன் அடையும்போது கேள்வியாளருக்கு பணிமாற்ற பாதிப்புக்கு ஒரு தீர்வு கிடைக்கக்கூடும். ஜாமக்கோளில் சந்திரனின் கதிர் வீச்சு 21 ஆகும். இதனடிப்படையில் பார்த்தால் ஜாம சந்திரன் பூசத்தை அடைய ஒன்றரை மாதங்களாகலாம். ஒன்றரை மாதத்தில் உள்வட்டத்தில் நீச நிலையில் இருக்கும் அரச கிரகம் சூரியன், உதயத்திற்கு 10 ல் விருட்சிகத்தில் திக் பலம் பெற்று விடுவார். எனவே இரு மாதங்களுக்குள் கேள்வியாளரின் வேலை சூழல் ஜாதகருக்கு சாதகமாக மாறும். அதுவரை பணியில் சாதக பலன்கள் தடைபடுகின்றன.
மேற்சொன்ன அறிவுரையின்படி கேள்வியாளர் விருப்ப ஓய்வு எண்ணத்தை கைவிட்டு, பணியில் விடுப்பு எடுத்துக்கொண்டு பணி மாற்ற சூழலை சமாளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். நாம் கணித்தது போலவே கடந்த கார்த்திகை மாத இறுதியில் சூரியன் புதனின் கேட்டை நட்சத்திரத்தில் திக் பலம் பெற்று நின்ற காலத்தில், ஜாம சந்திரன் கடகத்தில் சனியின் பூசத்தில் ஆட்சி பெற்றபோது, உள்வட்ட சந்திரன் சூரியனின் கார்த்திகை-4 ல் உச்சமாகி 10 ஆமதிபதி செவ்வாயோடு ரிஷபத்தில் இணைந்து 10 ஆமிடத்தை பார்வை செய்த நாளில் கேள்வியாளருக்கு ஏற்புடைய வேறொரு இடத்தில் பணி மாற்றம் கிடைத்து பணியில் இணைந்தார். இடையில் 41 நாட்கள் விடுப்பில் இருந்தார். பிரசன்னத்தில் கன்னி புதன், சந்திரனின் ஹஸ்தத்திலும், ஜாம புதன் மகரத்தில் சூரியனின் உத்திராடத்திலும் நிற்பதால் கோட்சார சூரிய சந்திரனின் வலு பிரசன்ன புதனை கட்டுப்படுத்தியுள்ளது தெரிய வருகிறது. அதே சமயம் பிரசன்ன காலத்தில் உதயத்திற்கு 8, 12 ல் மறைந்த புதன் கோட்சாரத்தில் பிரசன்ன உதயத்திற்கு லாப பாவகமான தனுசுவில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கையின் பெரிய முடிவுகளை அவசரப்பட்டு அணுகாமல் பொறுமையுடன் அணுகினால் நமக்கு வரும் சிரமங்களிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம். அதற்கு ஜோதிடம் உதவ காத்துள்ளது.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆட்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501