வாழ்வு ஒவ்வொரு மனிதரையும் சக மனிதருடன் ஏதோ ஒரு வகையில் இணைத்து அவர்களது கர்மாவை கழிக்க வைக்கிறது. நல்ல கர்மா மகிழ்வையும் தீய கர்மா வேதனைகளையும் கொண்டுவருகிறது. சில லக்னங்களில் பிறந்தவர்களுக்கு எந்த வகை கர்மா வேலை செய்யும் என்று பொதுவாக கூறிவிடலாம். உதாரணமாக உபய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு களத்திர பாவகமே பாதக ஸ்தானமாக வருவது அவர்களது கர்மா வாழ்க்கைத்துணை வடிவில் வரும் எனலாம். எனினும் இது பொதுவான அமைப்புதான். அனைத்து உபய லக்னத்தவர்களுக்கும் இது பொருந்தாது. வாழ வேண்டிய வயதில் ஆரோக்கியக் குறைவு எனும் வடிவில் ஒருவருக்கு தீவினை என்றால் கடன் வகையில் மற்றொருவருக்கு தீவினை. வேறொருவருக்கு வழக்கு வகையில் அவரது தீவினை. மனிதர்க்கு மனிதர் கர்மங்கள் வேறுபடலாம் ஆனால் அனைவருக்கும் ஒரு விதத்தில் கர்மா உண்டு. தொழில் வகையில் நல்ல கர்மா உள்ள ஒருவருக்கு நட்பு வகையில் பாதக கர்மா அமையலாம். இத்தகைய ஒருவர் தனது தொழிலில் நம்பிக்கையுள்ள ஒரு கூட்டாளி தேவை எனும் நிலையில் நண்பனை தொழிலில் உதவிக்கு அழைத்தால் அங்கே அவரது தீய கர்மா நண்பன் வடிவில் வந்து அவரது நல்ல கர்மாவான தொழிலையும் முடக்கும். இன்றைய பதிவில் கூட்டாக இணைந்து நிலம் வாங்கி அதை விற்பனை செய்யும் தொழிலில் பலர் ஈடுபடுகின்றனர். இத்தகைய முடிவை எடுத்து பெரிய அளவில் இணைந்து முதலீடு செய்யுமுன், தனது ஜாதகத்தை தேர்ந்த ஒரு ஜோதிடரிடம் ஆலோசித்து அதனால் வரும் சாதக பாதகங்களை அறிந்து செயல்படுவது நல்லது. இது பற்றி ஆராய்வதே இன்றைய பதிவு.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
மேற்கண்ட ஜாதகத்தில் லக்னம் மிதுனமாக அமைந்து, லக்னத்தில் புதன் 3, 6/11 அதிபதிகளுடன் இணைந்து திக்பலம் பெற்று அமைந்துள்ளார். 2 ல் சுக்கிரன் புதனின் ஆயில்யத்திலேயே அமைந்தது சிறப்பு. 2 ஆமதிபதி சந்திரன் நீச சனியுடன் இணைந்ததால் இவருக்கு சுய தொழில் எண்ணம் மிகுந்திருக்கும். பூமி காரகர் செவ்வாய் லக்னத்தில் வந்தமர்ந்து 4 ஆமிடத்தை பார்ப்பதால் ஜாதகருக்கு வீடு வாகனங்கள் சிறப்பாக அமையும். ஆனால் 6 ஆமதிபதியான செவ்வாய் களத்திர-கூட்டாளி ஸ்தனமான 7 ஆமிடத்தை பார்ப்பதால் ஜாதகர் கூட்டுத்தொழில் செய்தால், குறிப்பாக செவ்வாயின் காராகத் தொழில்களை செய்தால் கூட்டாளி மூலம் கடன், வழக்கு உறுதியாக ஏற்படும். குரு இந்த லக்னத்திற்கு தொழில் பாவகமான 10 ஆமிடத்திற்கும், கூட்டாளி பாவகமான 7 ஆமிடத்திற்கும் அதிபதியாகி 5 ல் அமைந்தது தொழில் கூட்டாளி நல்லவர் என்பதை குறிக்கிறது. ஆனால் குரு கடன், வழக்கை குறிக்கும் 6 ஆமதிபதியும், லாபம்-நண்பனை குறிக்கும் 11 ஆமிடாதிபதியான செவ்வாயுடன் நட்சத்திர பரிவர்த்தனை ஆகியுள்ளார். (செவ்வாய்-புனர்பூஷம்-2, குரு-சித்திரை-3). இது மேற்சொன்ன கூற்றை உறுதி செய்கிறது. செவ்வாய் லக்னத்தில் அமர்ந்து 7 ஆமதியோடு நட்சத்திர தொடர்பு பெறுவது ஜாதகர் நண்பரை கூட்டாளியாக்கி பாதிப்பை அடைவது ஜாதகரது கர்மா என்பதை தெரிவிக்கிறது. 6 ஆமதிபதி செவ்வாயின் கடுமையான 8 ஆம் பார்வை கூட்டாளியை குறிக்கும் குருவிற்கு 4 ஆமிடத்தில் விழுவதால் நண்பர் நல்லவராக இருந்தாலும் அவரை முடக்கி வைக்கும். 4 ஆமிடம் சுகம், 8 ஆமிடம் முடக்கம் என்பதால் முடக்கம் நண்பருக்கு ஆயுள், ஆரோக்கிய வகையில் வரலாம். குருவுடன் மாந்தி இணைத்துள்ளது நண்பருக்கு ஆரோக்கிய குறைவும் ஆயுள் தோஷம் உள்ளதையும் தெரிவிக்கிறது. 5 ஆமிட குரு 11 ஆமிட சனியை பார்ப்பதால் நண்பரால் லாபமும் உறுதியாக வரும். நண்பரால் ஜாதகர் ஏமாற்றப்பட வேண்டும் என்றால் இருவரும் இணைந்து குரு-செவ்வாய் தொடர்புள்ள தொழிலை செய்ய வேண்டும். அவற்றின் தசா-புக்திகள் வர வேண்டும் அப்போதுதான் இவ்வமைப்பு செயல்படும். நண்பர் ஜாதகரை தொழில் வகையில் ஏமாற்ற ஜாதகத்தில் சனி-புதன் தொடர்பு இருக்க வேண்டும். நண்பரின் விபரங்களை ராசியைவிட நவாம்சம் தெளிவாக கூறும்.
நவாம்சத்தை கிரக வலுவை அறியவும் பயன்படுத்துகின்றனர். ராசியில் குழப்பம் ஏற்படுத்தும் சில விஷயங்களை நவாம்சத்தை ராசி போன்றே பயன்படுத்தி ஆராய்ந்து தெளியலாம். இதனால்தான் நவாம்சத்தை ராசிக்கு துணை புரியும் ராசிக்கு அடுத்த முக்கிய வர்க்கமாக மதிப்பிடுகின்றனர். நவாம்சத்தில் வாழ்க்கை துணைவரை காரக, பாவக கிரகங்களைக்கொண்டும், நண்பரையும் கூட்டாளியையும் புதனைக்கொண்டும் ஆராய வேண்டும். புதனே நண்பன், கூட்டாளி, காதலன்-காதலி, தரகர் ஆகியோரை குறிப்பிடும் காரக கிரகமாகும். சனி-புதன் சேர்க்கை நவாம்சத்தில் கும்ப லக்னத்திற்கு 10 ஆமிடத்தில் 10 ஆமதிபதி செவ்வாயின் பார்வையிலேயே உள்ளதை கவனியுங்கள். லக்னாதிபதியான சனியுடன் நண்பனை குறிக்கும் புதன் 5, 8 பாவக தொடர்பில் இணைவதால் நண்பரால் இனிமையும், கசப்பும் இணைந்தே கிடைக்கும். 10 இவர்கள் இணைவு நண்பரால் தொழிலில் ஏமாற்றம் ஏற்படும் என்பதை குறிப்பிடுகிறது. கால புருஷனுக்கு கூட்டாளி பாவகமான துலாத்தில் குரு வர்கோத்தமம் பெற்றது கூட்டாளி வகையில் ஜாதகர் பொருளாதார சாதக-பாதகங்களை அடைய வேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது. குருவிற்கு வீடு கொடுத்த சுக்கிரன் ராகுவுடன் இணைந்து லக்னத்திற்கு 12 ல் மறைந்ததால் நண்பரால் ஜாதகர் இழப்பை சந்திப்பார் என்பதை அறிய முடிகிறது. எப்போது தொழில் வகையில் நண்பரால் சம்பவங்கள் ஏற்படும் என்பதை தொடர்புடைய வர்க்கச் சக்கரங்களில் தொடர்புடைய தசா-புக்திகளை ஆராய்வதன் மூலம் அறியலாம்.
நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களுக்கு ஆராய வேண்டிய சதுர்தாம்சப்படி ராகு தசையில் புதன் புக்தியில் நண்பர்கள் இருவரும் கூட்டாக நிலம் வாங்கினார்கள். ஜோதிடத்தில் ராகு தசை, புதன் புக்தி காலப்பகை காலமாகும் புதன் தனுசு லக்னத்திற்கு பாதகாதிபதியாவார். அவர் பாதக ஸ்தானத்திலே வலுவாக ஆட்சியில் உள்ளார். தசாநாதரும் புக்திநாதரும் 2/12 ஆக உள்ளதை கவனிக்கவும். மேலும் சதுர் விம்சாம்சத்தில் ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் புக்தி நாதரும் காலிமனைகள், கூட்டாளியை குறிப்பவருமான புதன் நிற்பதால் ராகு-புதன் தொடர்பு நண்பருடன் இணைந்து கூட்டாக காலி நிலம் வாங்க தசா-புக்தி ஒத்துழைப்பு தருகிறது. ராசியில் 1, 4 ஆமதிபதி புதனோடு இணைந்து 4 ஆமிடத்தை பார்வை செய்யும் செவ்வாய் சதுர் விம்சாம்சத்திலும் 4 ல் நிற்பதை கவனியுங்கள்.
இப்போது மீண்டும் நண்பரை ஆராய நவாம்சத்திற்கு வருவோம். நவாம்சப்படி நண்பரை குறிக்கும் 11 ஆமிடம் தனுசுவிற்கு பாவ கர்த்தாரி யோகம் உள்ளது. தனுசுவிற்கு மாரக ஸ்தானத்தில் நிற்கும் ராகு தசையின் சுக்கிரனின் புக்தியில் நண்பர் மரணமடைகிறார். ராசிச் சக்கரத்தில் சுக்கிரன் நண்பரை குறிக்கும் புதனின் ஆயில்ய நட்சத்திரத்திலேயே நிற்பது கவனிக்கத்தக்கது. நண்பரின் மரணத்திற்குப் பிறகு நண்பர்கள் இருவரும் இணைந்து வாங்கிய நிலத்தின் பத்திரம் தொடர்பான விபரங்கள் எதுவும் தங்களுக்கு தெரியாது என நண்பரின் வீட்டார் கைவிரித்துவிட்டனர். இதனால் நண்பர் இறந்து ஏறக்குறைய 5 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் தான் கூட்டாக வாங்கிய நிலத்தினால் எந்த பயனையும் அடைய இயலாமல் ஜாதகரின் முதலீடு முடங்கியுள்ளது. நிலத்தை வீட்டு மனைகளாக விற்று லாபம் பார்க்கும் வியாபார நோக்கத்தில்தான் இருவரும் நிலம் வாங்கினர். இதனால் வியாபார நோக்கில் வாங்கிய நிலம் ஏன் இப்படி விற்பனை செய்ய இயலாமல் முடங்கிப்போயுள்ளது என்பதை தொழிலுக்கான தசாம்சம் மூலம் ஆராய்ந்து அறியலாம்.
விருட்சிக லக்னாதிபதியும் பூமி காரகருமான செவ்வாய் லக்னத்திற்கு 4 ல் இருந்து 10 ஆமிடத்தை நேர் பார்வை செய்கிறார். இதனால் நிலத்தை முன்னிட்டான தொழில் நோக்கம் ஜாதகருக்கு ஏற்படும். 4 ஆமிட செவ்வாய் தனது திக்பல வீட்டிற்கு 7 ல் நிஷ் பலத்தில் நிற்கிறார் என்பதை அறியவும். 2 ல் கேதுவுடன் இணைந்த சனியின் 3 ஆம் பார்வையை பெறும் செவ்வாயால் பூமியை முன்னிட்டான தொழிலில் ஜாதகருக்கு கடன், வழக்கு ஏற்பட்டு முதலீடு பாதிக்கப்படும். 10 ஆமதிபதி சூரியன் நீசமானதும், பாதக ஸ்தானமான 9 ஆமிடத்திலேயே நண்பரை குறிக்கும் புதன் அமைந்ததும், கூட்டாளி பாவகமான 7 ன் அதிபதி சுக்கிரன் நீசம் பெற்றுவிட்டதும், தசாநாதர் ராகு, செவ்வாய்க்கு திரிகோணத்தில், லக்னத்திற்கு 8 ல் நின்று தசை நடத்திய நிலையில் பூமி தொடர்பான தொழிலில் பாதகம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஜாதகர் குரு தசையில் உள்ளார். குருவும் 12 ல் மறைந்தது சாதகமான அமைப்பல்ல. இதனால் தனது பாதிப்பிற்கு தீர்வுண்டா என ஏங்குகிறார்.
“எண்ணித் துணிக” என்று கடந்த பதிவிற்கு தலைப்பிட்டிருந்தேன். அது அனைத்து தொழில்களுக்கும் பொருந்தும். துணிவதற்கு முன் அனைத்தையும் எண்ணி ஆராய வேண்டும்.
விரைவில் மீண்டும் மற்றொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501