
ஜோதிடத்தில் இயல்புக்கு மாறான கிரகங்கள் என்று ராகு-கேதுக்களையும், அவற்றைப் போலவே செயல்படும் வக்கிர கிரகங்களையும் குறிப்பிடலாம். இதில் வக்கிரமடையாமல் நேர்கதியிலேயே இயல்புக்கு மாறான குணத்தை பெற்றிருக்கும் ஒரே கிரகம் சுக்கிரனாகும். சுக்கிரன் வக்கிரமானால் இயல்புக்கு மாறான குணம் மேலும் கூடுதலாகும். பாவகத்தில் இயல்புக்கு மாறானது 8 ஆமிடமாகும். மாற்றுச் சிந்தனையை தூண்டும் 8 ஆமதிபதி ஆட்சி, உச்சம் பெற்றிருப்பது, 8 ல் நின்றோன் வலுப்பெறுவது, 8 ஆமதிபதிக்கு, 8 ஆமிடத்திற்கு வலுவான குரு பார்வை கிடைப்பது போன்ற வகையில் அவ்விடம் சுபத்துவம் பெற்றிருந்தால் ஜாதகருக்கு பல மாறுபட்ட சிந்தனைகளால் புதையல் யோகமும், பிறர் உழைப்பின் பணம் ஜாதகருக்கு உழைப்பின்றியே கிடைப்பது ஆகியவை ஏற்படும். இவ்வமைப்பிற்கு மாறுபட்டு 8 ஆமதிபதியும், 8 ஆமிடமும் அமைந்திருப்பின் ஜாதகருக்கு கண்டம், பிரிவினை, மறைந்து வாழ்தல், தீராத வியாதி ஆகியவற்றைத் தரும். ஆனால் பொதுவாக 8 ஆமிட கிரகம் மாறுபட்ட சிந்தனையை தரும் என்பது மறுக்க முடியாதது. 8 ல் லக்னாதிபதி நின்றால் ஜாதகருக்கு இயல்பாகவே மாறுபட்ட சிந்தனையும், குற்றம், குறைகளை தேர்வு செய்யும் மன நிலையும் ஏற்படும். ஆனால் இவை யாவும் 8 ஆமிட கிரக தசா-புக்திகளில்தான் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மாறுபட்ட சிந்தனையால் வாழ்வில் வெல்பவர்களும் உண்டு. அதனால் உலகத்தாரின் ஏளனத்திற்கு ஆளாகுபவர்களும் உண்டு. கால புருஷனுக்கு 8 ஆவது ராசியான விருட்சிக ராசி மாறுபட்ட சிந்தனையை குறிப்பிடும் காரக ராசியாகும். விருட்சிகத்தில் அமைந்துள்ள கேட்டை நட்சத்திரம் மாறுபட்ட சிந்தனையை அதிகம் தூண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் என்னிடம் ஆய்வுக்கு வந்த ஒரு ஜாதகம் மிக மாறுபட்ட சிந்தனைகளை உடையதாகவிருந்தது. அதன் சுவாரஸ்யமான பகுதிகளை இங்கு வாசகர்களுடன் பகிர்வதில் மகிழ்வடைகிறேன்.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

கன்னி லக்ன ஜாதகம். லக்னத்திலேயே அமைந்த ராகு-கேதுக்கள் இயல்பாகவே ஜாதகருக்கு மாற்றுச் சிந்தனையை வழங்கும். கால புருஷனுக்கு இரண்டாமிடமான ரிஷபத்தின் திரிகோணம் கன்னி லக்னமாகி அங்கு ராகு அமர்ந்ததால் ஜாதகருக்கு பொருளாதார வகையில் மாற்றுச் சிந்தனைகள் அதிகம் ஏற்பட வேண்டும். லக்னாதிபதி புதன் நீசம் பெற்றாலும் அவர் நின்ற மீனாதிபதி குரு ஆட்சி பெற்றதால் நீச பங்கப்படுகிறார். ஆனால் லக்னமும், லக்னாதிபதி புதனும் ராகு-கேதுக்கள் தொடர்பில் நிற்பதால் ஜாதகருக்கு மாற்றுச் சிந்தனைகள் தவிர்க்க முடியாததாக அமையும். பெரும்பாலான கிரகங்கள் 7 ஆமிடத்தில் நிற்பதால், இவரது எண்ணங்களின் தாக்கம் ஏழாமிட விஷயங்களில் எதிரொலிக்கும். 7 ஆமிடம் களத்திர பாவகமாகும் என்பதால் திருமண விஷயங்களில் மாறுபட்ட சிந்தனையை ஜாதகர் கொண்டிருப்பார். லக்னாதிபதியே தொழில் ஸ்தானமான 1௦ ஆமிடத்திற்கும் அதிபதியாவதால் தொழில் விஷயங்களில் பிறரைவிட மாறுபட்ட சிந்தனைகளை உடையவராக இருப்பார். ஜீவன காரகர் சனி திக்பலம் பெற்ற நிலையில் ராகு கேதுக்கள் தொடர்பில் 7 ல் நிற்பதால் ஜீவன விஷயங்களில் ஜாதகர் மாறுபட்ட சிந்தனை உடையவராக இருப்பது தெளிவாகிறது. சனியின் திக்பலம் அதில் ஜாதகருக்கு உள்ள உறுதியான நிலைப்பாட்டை குறிப்பிடுகிறது. சூரியனும் செவ்வாயும் 7 ஆமிடத்தில் ராகு-கேதுக்கள் தொடர்பில் நிற்பது ஜாதகர் முறையே தனது ஆளுமையிலும், வைராக்கியத்திலும் மாறுபட்ட நிலையுடையவராக இருப்பதை குறிப்பிடுகிறது.
ஜாதகருக்கு நடப்பது சுக்கிர தசையாகும். மாறுபட்ட சிந்தனைகளை வழங்கும் சுக்கிரன் மாறுபட்ட சிந்தனைகளை குறிப்பிடும் 8 ஆம் பாவகத்தில் நின்று தசை நடத்துகிறார். ஒரு ஜாதகரின் பொதுவான எண்ணங்களை ராசிச் சக்கரம் காட்டினால் அவரின் செயல்களை நவாம்சம் குறிப்பிடும். ராசியில் 8 ஆமிடத்தில் நிற்கும் தசா நாதர் சுக்கிரன் நவாம்சத்தில் மாறுபட்ட சிந்தனைகளின் காரக ராசியான விருட்சிகத்தில் நிற்பது சுக்கிர தசையில் இவர் தனது எண்ணங்களை செயலாக்குவார் என்பதை குறிப்பிடுகிறது. சுக்கிரனை குரு மட்டுமே பார்ப்பதாலும் சுக்கிரனுக்கு திரிகோணத்திலும் குரு மட்டுமே இருப்பதாலும் சுக்கிர தசையில் ஜாதகருக்கு ஏற்படும் இயல்புக்கு மாறான குணங்களில் குருவின் தாக்கம் நிச்சயம் இருக்கும். களத்திர காரகர் சுக்கிரன் மாற்றுச் சிந்தனையை குறிப்பிடும் எட்டில் நின்று குரு பார்வை பெறுவதால் ஜாதகரின் மாற்றுச் சிந்தனைகள் அனைத்தும் திருமணம், குடும்பம், பொருளாதாரம் ஆகியவை சார்ந்த வகையில் மட்டுமே இருக்கும். பிற வகையில் இருக்காது என்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது.
28 வயதான இந்த இளைஞர் திருமணம் பற்றி சாதாரணமாக அனைவருக்கும் இருக்கும் ஆசைகளற்ற மாற்றுச் சிந்தனையாளராக உள்ளார். அதாவது மோட்சப் பாதையை தேர்வு செய்து சந்நியாசியாக வாழவிருப்பதாக கூறுகிறார். மோட்ச ராசியான மீனத்தில் அதிக கிரகங்கள் அமைந்தது ஜாதகரின் இத்தகைய எண்ணங்களுக்கு உறுதுணை புரிகிறது. மின்னணுப் பொறியியல் படித்தவர் பணிபுரிய விருப்பமின்றி சம்பாத்தியத்திற்கு கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறுகிறார். கூடுதலாக Betting App தயார் செய்து online சூதாட்டம் மூலம் பணமீட்டும் முயற்சிகளில் இருப்பதாகக் கூறுகிறார். சுக்கிரன் ரசாயனங்களை குறிப்பிடும் கிரகம் என்பதால் ஜாதகர் ரசவாதம் தொடர்பான விஷயங்களிலும் ஈடுபட்டுள்ளார். சரி, தவறு என்பதை மீறி இவை அனைத்துமே ஒரு சராசரி மனிதனின் எண்ணங்களுக்கு மாறுபட்டவைகளே. 8 ஆமிடத்தின் திரிகோணமான 4 ஆமிடமும் சுக ஸ்தானமுமான தனுசில் ஆட்சி பெற்ற குருவும், 8 ல் நிற்கும் சுக்கிரனும் சுக்கிரனின் நட்சத்திரத்திரங்களான முறையே பூராடம், பரணியில் நிற்பதால் ஜாதகருக்கு பொருளாதாரம் சார்ந்த வகைகளில் கஷ்டப்படாமல் உழைப்பின்றி பொருளாதாரங்களை அடையும்படி தொடர்புடைய தசை ஜாதகரை யோசிக்க வைக்கிறது.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501