ஜோதிடத்தில் பஞ்சாங்கத்தில் உள்ளவை போன்று எண்ணிலடங்கா சிறு சிறு விஷயங்கள் உண்டு. அத்தனை விஷயங்களையும் அனுமானித்து ஜோதிடம் சொல்வது சிறப்பே என்றாலும் அவற்றை ஆய்வு செய்ய ஜோதிடர்கள் அதிக நேரம் செலவு செய்ய வேண்டியிருக்கும். இன்று ஆய்வு ஜோதிடர்களுக்காக பல ஜோதிட மென்பொருள்கள் வந்துவிட்டாலும் இத்தகைய பல்வேறு விஷயங்களையும் அனுமானித்த பிறகு இவற்றை ஒருங்கிணைத்து எப்படி பலன் கூறுவது என்று குழம்புவோர் அதிகம். எளிய முறையில் பலன் சொல்லும் ஜோதிடர்களுக்கு இத்தகைய குழப்பங்கள் இருக்காது. அது போன்றே ஒரு ஆய்வு ஜோதிடராக பல நுட்பமான ஜோதிட விஷயங்களை அறிந்து வைத்திருந்தாலும் அவற்றை சரியான விகிதத்தில் கையாளத் தெரியாத ஜோதிடர்களை அது கவிழ்த்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயிரம் ஆயுதங்கள் வைந்திருந்தாலும் அவற்றை முறையாக பயன்படுத்த அறியாத வீரன் தோல்வியை தொடர்பவனாகத்தான் இருப்பான். யோகி-அவயோகி, முடக்கு, இந்து லக்னம் போன்றவை இவை. இவற்றை பற்றி ஆராய்வதே இன்றைய பதிவு. இத்தகைய சிறு சிறு விஷயங்களை எவ்வாறு கையாள்வது என்பது ஒரு புறம் இருக்க இவை ஒன்றுக்கொன்று தொடர்பானால் அப்போது என்ன சம்பவங்கள் நடக்கும் என அனுமானிப்பது இன்னும் குழப்பமாகத் தெரியும். இதில் இத்தகைய விஷயங்களை செயல்படாமல் தடுக்கும் அமைப்புகள் ஒரு ஜாதகத்தில் இருந்தால் அவற்றை அனுமானித்து எப்படி பலன் கூறுவது என்பது ஜோதிடர்களுக்கு பெரும் சவால்தான். இத்தகைய விஷயங்களில் அனுபவமே ஒரு ஜோதிடருக்கு தெளிவைத் தரும்.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
மேற்கண்ட ஜாதகத்தில் ஜாதகருக்கு நடப்பது புதன் தசை. அவர் தனுசு லக்னத்திற்கு 7, 10 அதிபதி என்பதுடன் பாதகாதிபதி. எனவே பாதகத்தை ஏதோ ஒருவகையில் செயல்படுத்துவார் என்பது உறுதி. புதன் அவயோகியான ராகுவின் திருவாதிரையில் இருக்கிறார். உடன் இணைந்திருக்கும் சூரியனும் அதே அவயோகி சாரம்தான். புதனும் சூரியனும் கேதுவால் தீண்டப்பட்டுளனர். சூரியன் திருவாதிரையில் நிற்பதால் திருவாதிரைக்கு திருவாதிரைதான் முடக்கு நட்சத்திரமாகும். எனவே 7 ஆமிட புதனும் சூரியனும் அவயோகி தொடர்பில் இருப்பதோடு முடக்கு நட்சத்திரத்திலும் உள்ளனர். எனவே இந்த ஜாதகத்தில் 7 ஆமிடம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. 7 ஆமிடம் பாதிக்கப்பட்டால் அடுத்து களத்திர காரகர் சுக்கிரனை பார்ப்போம். சுக்கிரன் 8 ஆமிடமான கடகத்தில் மறைந்துள்ளார். அங்கு 5 ஆமதிபதி செவ்வாய் மற்றும் லக்னாதிபதி குருவும் அவரோடு இணைந்து மறைந்துள்ளனர். இதனால் இவரது திருமண வாழ்வு மற்றும் புத்திரம் ஆகிய அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது புரிகிறது. இந்நிலையில் இவருக்கு தொடர்புடைய தசா-புக்திகள் வந்தால் எப்படி செயல்படும் என்பது ஒரு கேள்வி.
பல்வேறு அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தாலும் தசா-புக்திகள்தான் அவற்றை ஜாதகர் அனுபவிப்பதை தீர்மானிக்கும். தசா-புக்திகள் தொடர்பின்றி எந்த ஒரு சம்பவமும் ஜாதகருக்கு நடந்துவிடாது. ஆனால் ஒரு தசாநாதன் ஜாதகத்தில் தனித்து பிற ஜாதக ரீதியான தொடர்புகள் இன்றி நின்றால் மட்டுமே அவரால் தன்னிச்சையாக ஜாதகருக்கு பலன்களை வழங்க முடியும். இங்கு தசாநாதர் புதன் சூரியனுடன் இணைந்து நிற்பதால் புதனின் வீரியத்தை சூரியன் பாதிப்பார். 7 ஆமிடமும் புதனும் பாவகர்த்தாரியில் உள்ளது கவனிக்கத்தக்கது. இதனால் தசாநாதனின் செயல் சுதந்திரமானதல்ல. தசாநாதர் பாதகத்தில் அவயோகி சாரத்தில் நின்றாலும் அவர் யோகியான கேதுவுடன் கூடியுள்ளது கவனிக்கத்தக்கது. இதனால் யோகி நிச்சயம் புதனை கட்டுப்படுத்துவார். அவயோகி சாரத்தில் புதன் நின்றாலும் அவயோகி லக்னத்தில் நிற்பதால் இங்கு நிலைமை மாறுகிறது. காரணம் லக்ன கிரகம் ஜாதகரை இயக்கும் என்பதே. நெருப்பு ராசிகளில் ராகு-கேதுக்கள் அதிக தீமை செய்வதில்லை என்பதுடன் லக்ன கிரகமே லக்னாதிபதியை மீறி ஜாதகரை இயக்கும். எனவே இங்கு ராகு அவயோகியானாலும் தனுசுவில் தனித்து அமைந்த அவர் கோதண்ட ராகுவாக மாறி லக்னாதிபதி குரு போன்றே செயல்படுவார். இதனால் யோகி-அவயோகி எனும் விதி இங்கு செயல் இழக்கிறது.
அடுத்ததாக முடக்கில் நிற்கும் கிரகம் தசா-புக்திகள் வந்தால்தான் ஜாதகரை முடக்கி வைக்கும். முடக்கில் நிற்கும் புதன் தசைதான் ஜாதகருக்கு நடக்கிறது. இதனால் இது ஜாதகரை எந்த அளவு பாதிக்கும் என்பதை முடக்கு நட்சத்திராதிபதியின் நிலை மூலம் ஆராய வேண்டும். தனித்த ராகு, தான் நின்ற வீட்டதிபதியின் குணத்தை பிரதிபலிப்பார். ராகுவிற்கு 8 ல் குரு உச்சமான நிலையில் இங்கு ராகு தனித்து இயங்க முடியாது. இதனால் குரு இங்கு ராகுவின் முடக்கினை செயல்படாமல் தடுத்துவிடும் வல்லமையுடன் உள்ளார். இங்கு தசாநாதன் புதன் பாதகாதிபதியாவதால் புதன் முடக்கில் இருப்பது ஓரளவு ஜாதகருக்கே நன்மை. இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி 8 ல் மறைந்ததே தோஷம் ஆனாலும் மறைந்த குரு உச்சம் பெறுவதால் குருவின் மறைவு ஸ்தான தோஷம் ஓரளவு குறையும். களத்திர பாவாதிபதி புதன் ஆட்சியில் இருக்க செவ்வாயும் சுக்கிரனும் குருவோடு இணைந்து 8 ல் மறைந்தது தோஷமே என்றாலும் செவ்வாயும் சுக்கிரனும் களத்திர காரகர்கள் என்பதால் மறைந்தாலும் பிரியாமல் இணைந்திருப்பதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. ஆனால் இவர்கள் மூவரும் 8 ல் இணைந்து குடும்ப பாவகத்தை பார்ப்பதால் ஜாதகருக்கு குடும்பம், மனைவி, குழந்தைகள் மற்றும் பொருளாதார வகையில் ஒரு குறை, அவமானம் இருக்கும். ஆனாலும் இதிலும் ஒரு Twist உள்ளது. 8 ஆமிட கிரகங்கள் மூன்றும் புதனின் ஆயில்ய நட்சத்திரத்திலேயே நிற்கிறார்கள். இதனால் முதல் நன்மை என்னவெனில் தசாநாதன் புதனை லக்னாதிபதி குருவால் கட்டுப்படுத்த முடியும். இப்போது என்ன நடந்தது கிரகங்கள் எப்படி செயல்படுகின்றன என காண்போம்.
ஜாதகர் பள்ளிக்காலத்திலேயே காதலித்தவர். பிற்பாடு காதலித்த பெண்ணை திருமணம் செய்துகொண்டவர். திருமணம் ஒருவகையில் அவமானகரமானதாகத்தான் அமைந்தது என்றாலும் அது பெரிய அளவில் ஜாதகரை பாதித்துவிடவில்லை. ஜாதகரின் அண்ணனுக்கு முதலில் திருமணம் நடந்தது. அப்போது ஜாதகர் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். இப்போதுவரை தொடரும் காதல் காரகர் புதனின் தசை பள்ளிக் காலத்திலேயே ஜாதகரை காதலிக்கத் தூண்டியது. ஜாதகர் அதனால் காதலித்தார். காதலியை குறிக்கும் புதன் பாவ கர்த்தாரி யோகத்தில் இருப்பதை கவனிக்க. இதனால் காதலி இவரை காதலித்துத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார். அண்ணனின் திருமணத்தில் தன்னை ஈர்த்த தனது அண்ணியின் தங்கையையே காதலித்தார். புதன் இளைய சகோதரியை குறிக்கும் கிரகமாவார். அண்ணியின் தங்கையே இவரது காதலியானதால் தனது காரகங்களில் ஈடுபட்ட ஜாதகரை புதன் பாதிக்கவில்லை. ஆனால் அண்ணனின் மைத்துனியையே காதலித்து இறுதியாக கரம் பிடித்ததுவரை ஜாதகர் பல அவமானங்களை சந்தித்திருக்க வேண்டும். காரணம் காதல் பாவாதிபதிபதியும் (5 ஆமதிபதி) சகோதர காரகருமான செவ்வாய், 8 ல் அமைந்ததுதான். மறைந்த குரு நன்மையா? என்றால் இல்லை. குருவிற்கு குடும்பத்தை மீறி மேலும் காரகங்கள் இருக்கின்றன அன்பதை அறிக. 5 ஆமதிபதி செவ்வாய், புத்திர காரகர் குருவோடு 8 ல் மறைந்ததால் ஜாதகருக்கு புத்திரத்தை குரு மறுக்கவில்லை. 2 குழந்தைகள் ஜாதகருக்கு அடுத்தடுத்து பிறந்தன. ஆனால் 8 ஆமிட குரு இங்கு பொருளாதார அடிப்படையில் ஜாதகரை பாதித்தார். இதனால் சம்பாத்தியம் வேண்டி ஜாதகர் குடும்பத்தை பிரிய வேண்டியிருக்கிறது.
உள்ளூரில் சம்பாதிக்க முடியாத ஜாதக அமைப்பு.
ஜாதகத்தில் 2 ஆமிட சனி வக்கிரமாகி ராகு-கேதுக்களின் அச்சிற்கு வெளியே தனித்து நிற்கிறார். ஏற்கனவே லக்னாதிபதி குரு மறைந்துள்ளதாலும் 2 ஆமிட கிரகம் பாதிக்கப்பட்டுள்ளதாலும் ஜாதகருக்கு உள்ளூரில் சம்பாத்தியம் இருக்காது. அதற்கான முயற்சிகளில் ஜாதகர் இறங்கினால் பாதிக்கப்படுவார். எனவே சம்பாதிக்க வேண்டுமெனில் ஜாதகர் தனது பூர்வீக வசிப்பிடத்தை விட்டு வெளியேற வேண்டும். குடும்பத்தை பிரிந்து தனியே செல்ல வேண்டும். குடும்பத்தை பிரிந்து சம்பாத்தியத்தை நாடிச் செல்ல இயலாவிட்டால் குடும்ப வளமை குன்றும். இதனால் ஜாதகர் குடும்பத்தை பிரிந்து சம்பாத்தியத்திற்காக அண்டை மாநிலம் சென்றார். தற்போதும் வெளிமாநிலத்தில்தான் பணிபுரிகிறார்.
ஊரும் வாழ்க்கையும்.
குடும்பத்தை பிரிய வேண்டியுள்ளதே என்று வெளிமாநில வேலையை உதறி உள்ளூரான மதுரையில் ஜாதகர் செய்த தொழில்கள் கடுமையான நஷ்டத்தை தந்தன. தசாநாதன் புதன் நீசமாகும் ராசி மீனமாகும். மதுரை மீன ராசி அமைப்பில் வரும் ஊராகும். இதனாலும் ஜாதகர் மதுரையில் செய்த தொழில்கள் கடும் இழப்பை தந்தன. எனவே செய்தொழிலில் சிறக்க விரும்புவோர் தங்கள் ஜாதகப்படி யோக பலம் பெற்ற ஊரை தேர்ந்தெடுத்து வாழ்வது சிறப்பு. முக்கியமாக நடப்பு தசாநாதர் நீசமாகும் ஊரில் வசித்தால் அத்தகைய ஜாதகர்கள் பாதிக்கப்படுவது உறுதி.
Toxic Bosses யாருக்கு அமைவர்?
முதலாளிகளை குறிக்கும் சூரியன், 9 ஆமதிபதி, குரு ஆகியோர் தனது கடும் பகை கிரகங்களுடன் தொடர்பாகி வலுக்குன்றி தசா-புக்திகள் சாதகமற்ற நிலை பெறும் ஜாதகத்தினர் மோசமான முதலாளிகளால் பாதிக்கப்படுவர். லக்னாதிபதி பாதிக்கப்பட்டு சூரியன் ராகு-கேதுக்களால் தீண்டப்பட்டிருக்கும் ஜாதக அமைப்பினரே மோசமான முதலாளியிடம் பணிபுரிகிறார்கள். குறிப்பாக 9 ஆமதிபதி, சூரியன் இவர்களோடு தொடர்புடைய கிரக தசா-புக்திகள் வரும்போது இத்தகைய ஜாதக அமைப்பை பெற்ற தொழிலாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த ஜாதகத்திலும் குறிப்பிட்ட அமைப்புகள் இருப்பதைக் காண்க. இதனால் பணியிடத்தில் தனது முதலாளிகளால் ஜாதகர் கடுமையாக பாதிக்கப்பட்டார். பொருளாதார வகை பாதிப்பிற்கு மற்றொரு முக்கிய காரணம், 8 ல் மறைந்த குரு நின்ற நட்சத்திராதிபதியும் நடப்பு தசாநாதருமான புதன் 10 ஆமதிபதியுமாவதுதான்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501.