நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சமுதாய குற்றங்களும், தண்டனை கிடைக்க குற்றவாளிகளுக்கு ஆகும் தாமதமும் நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையற்ற தன்மையை தருகின்றன. ஆனால் பிரச்சனையின் வெளியே இருந்து பார்ப்பதைவிட அதனுள்ளே சென்று அதை புரிந்துகொண்டு நீதித்துறையை தற்போதைய கால மாற்றங்களுக்கு ஏற்ப சீரமைக்கலாம் என்றொரு தரப்பு சட்டக்கல்வி கற்க முனைகிறது. எப்போதும் பிரச்சனைகள் இருந்துகொண்டேதான் இருக்கும் எனவே எப்போதும் நமக்கு பிழைப்பு ஓட வேண்டுமெனில் சட்டக்கல்வி பயிலலாம் என்றொரு தரப்பு சட்டம் பயில்கிறது. இவர்களிடையே அரசியல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு ஆதரவான தரப்பு ஒன்று உண்டு. அவர்கள் குண்டாயிசத்தையும் அரசியல்வாதிகளையும் நம்பி அவர்களின் அடிப்பொடிகளானதொரு தரப்பாகும். அவர்களும் சட்டம் பயில்கிறார்கள். பொதுவாக சட்டக்கல்வி பயிலத்தான் ஜாதக அமைப்பு என்ன? ஏன் மகாத்மா காந்தி போன்றவர்கள் அதை தொழிலாக செய்ய இயலவில்லை போன்ற கேள்விகளுக்கு விடை காணவும் சட்டக்கல்வி பயில எண்ணுபவர்களுக்கும் உதவும் வகையிலும் இன்றைய பதிவு அமைகிறது.
சட்டக் கல்வி பயில ஜாதக அமைப்பு.
சட்டக்கல்வி பயில்வதற்கான காரக கிரகம் வாக்கு வன்மை குறிக்கும் புதனாகும். சட்ட ஒழுங்கை காக்கும் காரக கிரகம் செவ்வாயாகும். நீதித்துறையை குறிக்கும் காரக கிரகம், நீதி ராசியான துலாத்தில் உச்சமாகும் சனியாகும். நீதிபதியை குறிக்கும் காரக கிரகம் குருவாகும். பிரச்சனைகளை குறிக்கும் காரக கிரகங்கள் ராகு-கேதுக்களாகும். இக்கிரகங்களின் தொடர்பு சாதகமான பாவங்களில் அமைந்து உயர்கல்வி கற்கும் காலத்தில் இவை தொடர்புடைய தசா-புக்திகள் வந்தால் அவர்கள் சட்டக்கல்வி பயிலலாம். கற்ற சட்டக்கல்வியை ஜீவனத்திற்கு பயன்படுத்துவார்களா? என்பதை தீர்மானிப்பதில் தசா-புக்திகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்த ஒரு செயலுக்கும் தசா-புக்திகளின் பங்கு இன்றியமையாதது முக்கியம் என்பதை அறிக.
கீழே ஒரு ஜாதகம்.
லக்னத்தில் நீதி ராசி அதிபதி சுக்கிரன், லக்னாதிபதி குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் உச்சம். துலா சந்திரனை, உயர் கல்வியை குறிக்கும் 9 ஆம் பாவகத்தில் இருந்து வழக்கு காரகர் கேது முதலில் தொடுகிறார். இதனால் இந்த இளைஞரது மனம் சட்டம் படிக்க எண்ணியது. லக்னாதிபதி குரு வித்யா ஸ்தானத்தில் இருந்து துலா ராசியை பார்த்து அந்த ராசி காரகங்களை சிறப்பிக்கிறார். நடப்பது குரு தசை. இவரது எண்ணத்தை தசா நாதன் நிறைவேற்றி வைத்தார். இவர் சட்டக் கல்லூரியில் சேர்ந்த காலத்தில் வாக்கு காரகர் புதனின் புக்தி நடந்தது. புதன் வாக்கு பாவகாதிபதி செவ்வாய் உச்சமாகும் அவிட்டத்தில், தனது மூலத்திரிகோண வீடான கன்னிக்கு திரிகோணத்தில், லக்ன லாபத்தில் மகரத்தில் சிறப்பாக அமைந்துள்ளார். இவர் தற்போது சட்டம் பயில்கிறார்.
உயர் கல்விக்கு ஆராய வேண்டிய சதுர் விம்சாம்சத்தை கவனியுங்கள்.மீன லக்னம் வர்கோத்தமம் பெற்றுள்ளது. லக்னம் எந்த வர்க்க சக்கரத்தில் ராசியோடு வர்கோத்தமம் பெற்றுள்ளதோ அது தொடர்புடைய விஷயங்களில் ஜாதகர் தெளிவாக நோக்கத்துடன் இருப்பார். சதுர்விம்சாம்சத்தில் 2, 9 ஆமதிபதி செவ்வாய் புதனோடு மகரத்தில் இணைந்து உச்சம் பெற்றுள்ளார். புதனும் மகரத்தில் வர்கோத்தமம் பெற்றுள்ளது. இவ்வமைப்பு இவர் சட்டம் படிப்பதில் தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருப்பதை குறிக்கிறது. புதனும் சனியும் பரிவர்த்தனை பெற்றிருப்பது கல்விக்காக ஜாதகர் இடம் பெயர்வதை குறிக்கிறது.
தொழிலுக்குரிய தசாம்ச லக்னத்திற்கு 10 ல் புதன் கேது இணைவு ஜாதகர் வக்கீலாக பணிபுரியும் அமைப்பு இருப்பதை உறுதி செய்கிறது. ஆனால் புதன் 1௦ ஆமதிபதி செவ்வாயோடு பரிவர்த்தனையாவது தொழிலில் இவர் எதிர்கொள்ளவுள்ள அலைக்கழிப்புகளை குறிக்கிறது. தற்போதைய தசாநதர் குரு புதனின் மூலத்திரிகோண வீட்டில் மறைந்திருக்க, குருவின் சாரநாதர் ராகு, நீதி ராசியான துலாத்தில் இருந்து குருவை நோக்கி வருவது ஜாதகர் படித்த படிப்பிற்கேற்ற தொழிலை உறுதியாக செய்வார் என்பதை தெரிவிக்கிறது. குரு தசாவிற்கு அடுத்து சனி தசையில் ஜாதகர் தொழில் ரீதியாக சில பாதிப்புகளை அடைவார். சனி தசையை அடுத்த புதன் தசையில் ஜாதகர் நீதிபதியாக உயர்வார். ஏனெனில், எந்தத்துறையிலும் அதிக பட்ச உயர் நிலையை குறிக்கும் காரக கிரகம் கேதுவாகும். மேலும் கேதுவே இந்த ஜாதகத்தில் யோகி கிரகமாக வருகிறார். யோகி கேது, புதனின் கேட்டை நட்சத்திரத்தில் அமைந்திருப்பதால் இந்த ஜாதகர் புதன் தசாவில் நீதிபதியாக உயர்வு பெறுவார். ஒருவர் நீதிபதியாக வேண்டுமெனில் அவரது ஜாதகத்தில் தனுசு ராசிக்கும் துலா ராசிக்கும் குருவின் தொடர்பு இருக்க வேண்டும். இந்த ஜாதகத்தில் ராசியில் குரு துலாத்தையும் தனுசுவையும் பார்க்கிறார். எனவே இவர் நீதிபதியாக உயரும் வாய்ப்பு புதன் தசையில் வருகிறது.
மகாத்மா காந்தி ஜாதகத்தில் லக்னமே துலாமாக அமைந்து அதில் அதிக கிரகங்கள் நின்றதால் இவருக்கு நீதிநெறிகளில் அதிக ஆர்வம் இயல்பாகவே இருந்துள்ளது சுக்கிரனின் தசாவில் இவர் வெளிநாடு சென்று சட்டக் கல்வி பயின்றுள்ளார். சுக்கிரன் கால புருஷ 12 ஆமதிபதி குருவின் விசாகத்தில் நிற்பதால் கடல்கடந்து சென்று சட்டம் பயின்றுள்ளார். ஆனால் லக்னாதிபதி சுக்கிரனே 8 ஆமதிபதியாகவும் வருவதால் வெளிநாட்டில் அவமானமும் சிறை வாசமும் கிடைத்தது. சுக்கிர தசைக்கு அடுத்து வந்த சூரியன் 1௦ ஆமதிபதி சந்திரன் சாரத்தில் விரையத்தில் நின்றதால் சூரிய தசையில் காந்தியால் பொருளீட்ட இயலவில்லை. சூரிய தசையை அடுத்து வந்த ஆட்சி பெற்ற உணவு காரகர் சந்திரன், தடைகளின் காரகர் ராகுவோடு சேர்க்கை பெற்றதால் இயக்கங்களின் தொடர்பு ஏற்பட்டு உண்ணாவிரத போராட்டங்களை நடத்தினார். ராகுவின் தடைகளையே சாதகமாக்கி ராகுவிடமே திருப்பி அடித்தார். காரணம் ஜாதகத்தில் ராகு, சந்திரனை கடந்து நிற்கிறது. அடுத்து வந்த துலா செவ்வாய் தசை சட்டப் போராட்டங்களை நடத்தி விடாமுயற்சியையும் வைராக்கியத்தையும் ஜாதகருக்கு வழங்கியது.
அடுத்து வந்த தசா நாதர் ராகு சந்திரனின் காரகங்களை சுவீகரித்துக்கொண்டு தாய்நாட்டிற்காக பல தியாக போராட்டங்களை செய்ய வைக்கிறார். ராகு தனது தசாவில் ஜாதகருக்கு பொருளாதாரத்தை தடை செய்கிறது. ஆனால் போர்க்குணத்தை, தியாக மனப்பான்மையை, புகழை ஜாதகருக்கு கொடுக்கிறது. ராகு தசையை அடுத்து வந்த தசாநாதர் குருவும் வக்கிரகதியில் இருந்ததால் ஜாதகரின் எதிராளிகள் இவரின் பேச்சுக்கு இணங்கி வர வேண்டியதாயிற்று. நிரந்தர வக்கிர கிரகங்களான ராகு-கேதுக்கள் மற்றும் இதர வக்கிர கிரகங்களின் தசை ஒருவருக்கு நடந்தால் ஜாதகரின் பிடிவாதம் மற்றவர்களை நிலை குலைய வைக்கும். இத்தகைய ஜாதகர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டால் அதற்காக தனது உயிரையும் விட துணிவார்களே தவிர தனது எண்ணத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். இந்தியாவிற்கு அப்போதைய நிலையில் இப்படி நிலைப்பாடு கொண்ட ஒருவரின் தலைமை தேவைப்பட்டது. மக்களுக்காகவும் தாய் நாட்டிற்காகவும் ஒருவர் தனது வாழ்வை பணயம் வைக்கிறார் என்றால் அங்கு கடக ராசி தொடர்பாக வேண்டும். சிறந்த தன்னலமற்ற மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளின் ஜாதகங்களை ஆராய்ந்தால் இந்த உண்மை தெரிய வரும்.. சுதந்திர இந்தியாவில் இவர் தேச தலைமையை ஏற்க விரும்பாததற்கு காரணம் ஆட்சி அதிகாரத்தை குறிக்கும் காரக கிரகம் சூரியன் பாதகாதிபதியாகி விரையம் பெற்றதுதான். தொழில் பாவகாதிபதி சந்திரன் நீசமாகும் 2 ஆமிடத்தில், புதனின் சாரத்தில் சனி பகை பெற்று நின்றதால் ஜாதகரால் தனது குடும்பத்திற்காக தான் கற்ற கல்வியைக்கொண்டு பொருளீட்ட இயலவில்லை. இவரது உண்ணாவிரத போராட்டங்களுக்கும் இதுவும் ஒரு காரணம்.
புதன், சனி, குரு, ராகு-கேதுக்கள், துலாம் ராசி தொடர்பாகாவிட்டால் ஒருவர் சட்டத்துறையில் பிரகாசிக்க முடியாது. இத்துறை சார்ந்த பல நூறு ஜாதகங்களை ஆய்வு செய்தவன் என்ற முறையில் தெளிவாக இதை என்னால் கூற முடியும். சட்டத்துறையில் பிரகாசிக்கும் அமைப்பு இருந்தால் இந்த தேசத்திற்கு சேவை செய்ய நீதித்துறை உங்களை இருகரம் கூப்பி அழைக்கிறது. உங்கள் புதல்வர், புதல்விகளுக்கு அத்தகைய அமைப்பு உள்ளதா?
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501.