ஜோதிடத்தை நேசித்து, ரசித்து தொழிலாக செய்பவர்களுக்கு இதர ஜோதிடர்களுக்கு புலப்படாத ஆச்சரியமான ஜோதிட உண்மைகள் தெரியவரும். ஆனால் ஜோதிடத்தில் தெரியும் விஷயங்கள் அனைத்தையுமே ஜோதிடர்கள் சொல்லலாமா? என்றால் மிகுந்த கவனத்துடன் சொல்ல வேண்டும். சில விஷயங்களை சொல்லும்போது ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டு வந்திருப்பவர் என்ன மன நிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து சொல்வது அவசியம். சில விஷயங்கள் ஜாதகரின் கேள்வியோடு நேரடியாக தொடர்புகொண்டிருக்கும் அத்தகைய விஷயங்களை கூறாமல் இருக்க முடியாது. சொன்னால் வந்தவர் பாதிக்கப்படுவார். இது போன்ற நிலைகள் ஜோதிடருக்கு தர்ம சங்கடமான நிலையை உருவாக்கும். பொதுவாக ஒரு விஷயம் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பில் வந்தவருக்கு அவ்விஷயம் தாமதிக்கும் அல்லது தடைபடும் எனும் சூழலில் இது போன்ற நிலைகள் ஏற்படுவது இயல்பு. அது போன்றதொரு சம்பவத்தை இங்கு காண்போம்.
எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? என்ற கேள்வியுடன் என்னை அனுகிய ஆண் ஒருவருக்கு பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் கீழே.
ரிஷப உதயத்தில் சந்திரன் கடக ஜாம உதயாதிபதி சுக்கிரனுடன் பரிவர்த்தனையாகியுள்ளார். பரிவர்த்தனைக்குப் பிறகு உதயத்திற்கு வரும் சுக்கிரன் 7 ஆமதிபதி செவ்வாயுடன் இணைகிறார். 7 ல் சுக ஸ்தானாதிபதி சூரியன் நிற்கிறார். உதயத்துடன் 1,3,4,7 ஆமதிபதிகள் தொடர்புகொள்கிறார்கள். இது முறையற்ற உறவை குறிக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ்வதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது. உதயத்தில் 1, 3 ஆமதிபதிகள் பரிவர்த்தனையாகியுள்ளது போலவே 6, 8 அதிபதிகளான துலா குருவும் தனுசு சுக்கிரனும் பரிவர்த்தனை ஆகியுள்ளனர். 7 ஆமதிபதி செவ்வாய் வெளிவட்டத்தில் 8 ல் 1,6 அதிபதி சுக்கிரனுடனும் 2, 5 அதிபதி புதனுடனும் அமைந்து 2 ஆமிட சனி பார்வை பெற்று அமைந்துள்ளார். இது மணமுறிவுற்ற பெண்ணுடன் திருமணம் செய்துகொள்ளாமல் இல்லற உறவில் கேள்வியாளர் இணைந்திருப்பதை தெளிவாக கூறுகிறது. உதயத்தில் நிற்கும் சந்திரனே வெளிவட்டத்தில் ராகுவோடு இணைந்து உதயத்திற்கு 12 ல் மேஷத்தில் நிற்கிறார். உதய சந்திரன் 12 ஆமிடத்தை தாண்டித்தான் உதயத்திற்கு வந்துள்ளது. 12 ஆமிடம் தாம்பத்தியத்தை குறிக்குமிடமாகும். கேள்வியாளர் இல்லற உறவை முறையற்ற வகையில் அனுபவித்துள்ளது மட்டுமின்றி தற்போதும் தொடர்ந்துகொண்டுள்ளார். தொடர்பாளரை குறிக்கும் 7 ஆமதிபதி செவ்வாய் உதயத்திலும் 8 லும் உதயாதிபதி சுக்கிரனுடன் இணைந்துள்ளதை கவனியுங்கள். 7 ஆமதிபதி செவ்வாய் வெளிவட்டத்தில் 8 க்கு சென்று புதன், சனி தொடர்பையும் பரிவர்த்தனை குரு தொடர்பையும் பெறுவதால் கேள்வியாளரின் தொடர்பால் காதலி தனது கணவருடனான இல்லற வாழ்வை இழந்துள்ளார். 9 ஆமிடம் முறையான அங்கீகாரமுள்ள உறவை கூறும் என்றால் 9 ன் விரயமான 8 ல் அமைந்துள்ள இச்சேர்க்கை முறையற்ற உறவை கூறுகிறது. 8 ஆமிடம் இல்லற உறவையும் குறிக்கும் என்பதோடு உதயத்தின் 7 ஆமிடாதிபதி செவ்வாய் கால புருஷனுக்கு 8 ஆமதிபதி என்பதால் தைரியமாக இருவரும் தங்கள் உறவை தொடர்வதை அறிய முடிகிறது.
கேள்வியாளர் இணைந்து வாழும் பெண்மணியை முறையாக திருமணம் செய்ய விரும்பாமல் சமூக அங்கீகாரத்துடன் முறையான ஒரு குடும்பம் வேண்டும் என்ற எண்ணத்தில் திருமணம் எப்போது என்று கேட்கிறார். உதய சந்திரன் பௌர்ணமி யோகத்தில் உச்சத்தில் இருப்பதும் உதயம் கௌரவ காரகர் சூரியனின் பார்வையை பெறுவதும்தான் இதற்கு காரணம். ஜாதகர் வேறு பெண்ணை திருமணம் செய்யும் அமைப்பு உள்ளதா? என்று கேட்டால் உதயத்தில் 7 ஆமதிபதி செவ்வாய் வக்கிரம் பெற்று அமைத்துள்ளதை கவனியுங்கள். இது தற்போது இணைந்து வாழும் பெண்மணி ஜாதகரை விட்டு விலகாமல் ஒரு வைராக்கிய எண்ணத்தில் இருப்பதை குறிப்பிடுகிறது. விடாது கருப்பு எனும் நிலைதான் இது. 7 ஆமதிபதி செவ்வாயே வைராக்கிய காரகர் ஆவதால் தனது உறவை தக்கவைத்துக்கொள்ள இவரது துணைவர் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதை இது குறிக்கிறது. உதயத்தை நோக்கி பாதகாதிபதியான ஜாம சனி வருகிறார். சனி தடையை கூறுகிறார் என்பதோடு ஜாம செவ்வாயின் நேர் பார்வையை பெறும் சனி உதயத்திற்கு வந்தும் செவ்வாயோடுதான் இணைவார். இதனால் கேள்வியாளர் தற்போது இணைந்து வாழும் பெண்ணை மீறி வேறொரு திருமணம் செய்துகொள்ள இயலாது. காதலின் காரக கிரகமான புதன் குடும்ப பாவகமான 2 க்கும் காதல் பாவகமான 5 க்கும் அதிபதியாகி, அவமான பாவகமான 8 ல் அமைந்ததால் முறையற்ற காதலினால் அவமானத்தை தரும். 2 ஆமிட சனி திருமணத்தடையோடு அவமானத்தையும் குறிக்கிறார்.
இத்தனை விபரங்களை அலசிய பிறகு கேள்வியாளரிடன் உங்களுக்கு முறையான திருமணம் செய்து வாழும் அமைப்பில் தடை உள்ளது. தற்போது இணைந்து வாழும் பெண்மணியுடன் உங்கள் வாழ்க்கையை தொடரலாம் என்றேன். தன்னை இதற்கு முன் சந்தித்தேயிராத ஒரு ஜோதிடர் தனது அந்தரங்க விஷயங்களை சொல்வதைக்கண்டு கேள்வியாளர் திகைத்தார். கேள்வியாளர் பிரசன்னம் கூறிய கருத்துக்களை ஏற்றுக்கொண்டு வருந்தினார் என்றாலும் ஜாதகமே இல்லாமல் இந்த அளவு விபரங்களை பிரசன்னத்தில் சொல்ல முடியுமா? என்று நம்ப இயலாமல் பார்த்தார்.
மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501.