
வளர்ந்த தங்கள் பிள்ளைகளுக்கு வரன் பார்க்கும் பெற்றோர்களின் முக்கிய கேள்விகளில் ஒன்று, வீட்டிற்கு வரும் மருமகள் அல்லது மருமகனால் தங்கள் பிள்ளைகள் வாழ்வில் உயர்வுண்டா? என்பதாகும். ஜோதிடர்கள் அவர்களது பிள்ளைகளின் ஜாதகங்களிலுள்ள சாதக பாதக அமைப்புகளை ஆராய்ந்துவிட்டு அதன்படி சில சிறப்புகளையும், சில எச்சரிக்கைகளையும் கூறுவது உண்டு. “பானை பிடித்தவள் பாக்கியசாலியாக இருந்தால் ஏர் உழுதவன் ஏற்றம் காண்பான்” என்றொரு பழஞ்சொல் உண்டு. அதாவது ஏர் பிடித்து உழுது அறுவடையை பாதுகாப்பாக வீட்டிற்கு கொண்டு வருவதற்கு ஒரு ஆணிற்கு கொடுப்பினை இருக்கவேண்டும். அதைப்பெற்று பானையிலிட்டு அன்னம் சமைக்க பெண்ணிற்கும் கொடுப்பிணை இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். கணவனின் உயர்வை உறுதி செய்யும் அமைப்பு மனைவிக்கு இருந்தால் அங்கு இல்லறம் சிறக்கும். திருமணமாகி கணவன் வீட்டிற்கு வரும் மனைவியின் ஜாதகம் சிறப்புற்றிருந்தால் அது கணவனின் வாழ்வை உயர்த்தும். எதிர்மறையாக இருந்தால் அது கணவனின் வாழ்வை உயர்த்துவதற்குப் பதிலாக வீழ்த்திவிடுவதும் உண்டு. இதே போன்று ஒரு ஆணின் ஜாதகத்தில் மனைவியை பாதிக்கும் அம்சங்கள் இருப்பின் அவருக்கு மணமாகி மனைவி வந்ததும் அவரது ஜாதகம் மனைவியை பாதிப்பதும் உண்டு. இவ்வமைப்பை களத்திர காரக கிரகங்களான செவ்வாய், சுக்கிரன் மற்றும் ஏழாமதிபதி, ஏழில் நிற்கும் கிரகம் இவர்களை ஆராய்வதன் மூலம் அறியலாம். சில ஜாதகங்களில் துணைவரை பாதிக்கும் அமைப்புகள் இருந்தாலும் துணைவரின் ஜாதகம் வலுவாக இருந்தால் பாதிப்பு தவிர்க்கப்படுவதும் உண்டு. மற்றொரு வகையாக பாதிப்பை தரக்கூடிய தசா-புக்திகள் வராததால் கணவன்-மனைவி இருவரும் தங்களது ஜாதக தோஷங்களை அனுபவிக்காமல் கடந்துவிடுவதும் உண்டு. இது பற்றி ஆராய்வதே இன்றைய பதிவு.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

சிம்ம லக்ன ஜாதகம். ஆளுமை மிக்க லக்னம் என்றாலும் லக்னாதிபதி சூரியன் நீசமாகி விட்டார். லக்னாதிபதி வலு குறைந்த ஜாதகர் சாதுர்யமற்றவர். சோம்பேறி. கோழை. சோறு கண்ட இடம் சொர்க்கம் எனும் மனப்பான்மையில் தான் உழைக்காது பிறரது உழைப்பை நம்பி செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பார் எனலாம். சந்திரனும் லக்னத்திற்கு 8 ல் மீனத்தில் மறைந்துவிட்டதால் ஜாதகரால் பிறரது உதவியின்றி முடிவெடுக்க இயலாது அல்லது தன் மீது திணிக்கப்படும் முடிவை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருப்பார். இங்கு நீச சூரியன் ஆட்சி சுக்கிரனுடன் இணைந்ததால் தனது நீச நிலையை சுக்கிரன் மூலம் மீட்டெடுக்க முயல்வார். அதாவது ஜாதகர் தனது திறமைக் குறைவை மனைவி மீது சுமத்தி தன்னை உயர்வாக காட்டிக்கொள்ள முயல்வார். சூரியன் தான் அஸ்தங்கமடைய செய்யும் கிரக காரகங்களையும் அவைகளின் பாவக பலன்களையும் தன்னை மீறி சுதந்திரமாக ஜாதகருக்கு அளிக்க அனுமதிக்க மாட்டார். இந்த ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்களை சூரியன் அஸ்தங்கமடைய செய்துள்ளதால் அவை மூன்றின் வலுவையும் தனதாக்கிக்கொண்டு அவற்றின் செயல்களை தான் செய்ததாக பிறரை அறிய வைப்பார். அதற்கு உடன் படாத கிரக காரக, பாவக உறவுகளை இங்கு லக்னாதிபதி என்பதால் விலக்கி வைத்துவிடுவார். சூரியன் லக்னாதிபதியாக இன்றி வேறு பாவகாதிபதியாயின் சூரியன் குறிக்கும் உறவுகளான தந்தை அல்லது மாமனார் மூலம் அஸ்தங்க கிரகங்களுக்கு பாதிப்பு வரும் என்பதை அறிக. இங்கு நீச சூரியன் தான் அஸ்தங்கமடைய செய்த 3 கிரகங்களையும் சார்ந்துதான் செயல்பட்டாக நேரிடும். அம்மூன்று கிரக உறவுகளை விலக்கி வைத்தால் ஏற்கனவே நீசமான சூரியன் மேலும் பலகீனமாகிவிடுவார். இதில் சூரியனை விட்டு அதிக பாகை முன் சென்றுள்ள கிரகம் சூரியனை மீறி செயல்படும். ஆனாலும் அது அஸ்தங்கப்படுத்தப்பட்டால் சூரியனுக்கு கட்டுப்பட்டாக வேண்டும். குறிப்பாக சூரியனுக்கு 3 பாகைகள் முன் பின் அமையும் கிரகங்கள் அஸ்தங்கத்தால் 3 க்கு மேற்பட்ட பாகைகள் விலகி நிற்கும் கிரகங்களைவிட அதிகம் பாதிக்கப்படும். அவை சூரியனுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்.
மேற்கண்ட ஜாதகத்தில் சூரியனுடன் இணைந்த புதன் 5.27 பாகையிலும், செவ்வாய் 6.12 பாகையிலும், சுக்கிரன் 8.௦5 பாகையிலும் அமைந்து, சூரியன் இவர்கள் மூவரையும் விட அதிகமாக 1௦.33 பாகையில் நிற்பதால் இவை லக்னாதிபதியான சூரியனுக்கு கட்டுப்பட்டாக வேண்டும். அதிலும் மனைவியை குறிக்கும் சுக்கிரன் சூரியனுக்கு பின்னால் 3 பாகைக்குள் நிற்பதால் இந்த ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்படுவது களத்திர காரகர் சுக்கிரனே. இதனால் இவரது மனைவியின் திறமைகள் வீணாகும். அல்லது மனைவியை சுதந்திரமாக செயல்பட ஜாதகர் அனுமதிக்க மாட்டார். இதர 2 கிரகங்களும் அஸ்தங்கமானாலும் சூரியனை விட்டு 3 பாகைக்கு மேல் விலகி நிற்பதால், சுக்கிரன் அளவு அவை கடுமையான பாதிப்பை சந்திக்காது. புதன் வக்கிரம் பெற்றுவிட்டதால் அவர் அஸ்தங்கமானாலும் நேர்கதி கிரகமான சூரியனை மதியாது செயல்படுவார் எனலாம்..
களத்திர காரகர் சுக்கிரன் மனைவியை நேரடியாக குறிப்பவர் என்றாலும் பாவகங்களில் முதல் மனைவியை 7 ஆவது பாவகமும், இரண்டாவது மனைவியை 9 ஆவது பாவகமும், மூன்றாவது மனைவியை 11 ஆம் பாவகமும் குறிப்பிடும். 7 ஆமிடத்தில் வக்கிர கிரகம் நின்றால் துணைவர் அதிக சுதந்திரத்தை விரும்புவார். அவரை கட்டுப்படுத்தினால் ஜாதகருக்கு கடும் பாதிப்பு உறுதி. ஜாதகத்தில் சுக்கிரன் அஸ்தங்கமாகி, 7 ல் அஷ்டமாதிபதி வக்கிரம் பெற்று நிற்கும் நிலையில் திறமையற்ற ஜாதகரை சகித்துக்கொண்டு முதல் மனைவி வாழ்ந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் திறமையுமின்றி தன்னை வெற்று அதிகாரம் செய்யும் ஜாதகரை விட்டு முதல் மனைவி மணமுறிவு பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். இரண்டாவது மனைவியை குறிக்கும் 9 ஆமதிபதியான செவ்வாய் சூரியனுக்கு நட்புக் கிரகம் என்பதை அறிக. ஆனால் ஜாதகத்தில் செவ்வாயும் சுக்கிரனோடு இணைந்து அஸ்தங்கமடைந்துவிட்டதால் இவரை முடிந்தவரை மதிப்பானவராக மாற்ற 2 ஆவது மனைவி முயன்றார். ஆனால் ஸ்திர லக்னமான சிம்மத்திற்கு 9 ஆமிடம் பாதக ஸ்தானம் என்பதால் இரண்டாவது மனைவி தன்னை உயர்த்துவதற்காக செய்யும் முயற்சிகளை தன்னை கட்டுப்படுத்துவதாக எண்ணிய ஜாதகர் அவரையும் புரிந்துகொள்ளாமல் தன்னையும் வளர்த்துக்கொள்ளாததால் கோப இயல்பு கொண்ட செவ்வாயின் அம்சமான 2 ஆவது மனைவியும் ஜாதகரை பிரிந்தார். மூன்றாவது மனைவியின் நிலைதான் இதில் விசேஷமானது. மூன்றாவது மனைவியை குறிக்கும் 11 ஆமிடத்தில் சனி புத்தி சாதுர்யத்தை குறிக்கும் புதனின் வீடான மிதுனத்தில் அமைந்ததால் 3 ஆவது மனைவி புத்தி சாதுர்யத்துடன் உழைப்பும், நேர்மையும், நிதானமும் கொண்டவர். 11 ஆமதிபதி புதன் வக்கிரமாகி, 11 ஆமிட சனி அஷ்டமாதிபதியான குருவின் புனர்பூஷம்-2 ல் நிற்பதால் அவர் ஏற்கனவே மணமுறிவை சந்தித்தவர். அவருக்கு ஜாதகர் 2 ஆவது கணவர். மிதுனம் அமெரிக்காவை குறிக்கும் என்பதால் மூன்றாவது மனைவியை திருமணம் செய்துகொண்டு அவர் பணிபுரியும் அமெரிக்காவிற்கு ஜாதகர் சென்றார். ஆனால் குறிப்பிடத்தக்க திறமைகள் ஏதுமற்ற ஜாதகருக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் மூன்றாவது மனைவி ஜாதகரை மதிப்பதில்லை. 11 ஆமதிபதி வக்கிரம் பெற்றுவிட்டதால் அந்த குணமே 11 ல் நிற்கும் சனிக்கும் இருக்கும் என்ற அடிப்படையில் ஜாதகரை மதியாது 3 ஆம் மனைவி செயல்படுகிறார். தற்போது ஜாதகர் தனது தேவைகளுக்கு பணம் வேண்டும் என்றால் மனைவி பணிக்கு செல்லப் பயன்படுத்தும் காரை சுத்தம் செய்வது, சமைப்பது, கழிவறைகளை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்துகொண்டு தன்னை மேம்படுத்திக்கொள்ளாமல் மனைவிக்கு அடிமையாக வேறு வழியின்றி வாழ்ந்துகொண்டுள்ளார். மூன்றாவது மனைவியை குறிக்கும் 11 ஆமதிபதி புதன் அஸ்தங்கமானாலும் வக்கிரமாகியுள்ளதாலும் 11 ல் நிற்கும் சனியும் வக்கிர குருவின் சாரத்தில் நிற்பதாலும் வக்கிர கிரகங்கள் நேர்கதி கிரகங்களை மதியாது எனும் அடிப்படையில் உழைப்பற்ற ஜாதகரை மூன்றாவது மனைவி வேலை வாங்குகிறார். அதே சமயம் ஏற்கனவே மணமுறிவை சந்துவிட்ட மூன்றாவது மனைவி மற்றொரு மணமுறிவு வேண்டாம் எனும் நிலையில் சனியின் குணத்தோடு நிதானமாக செயல்படுகிறார்.
நவாம்சத்தில் லக்னாதிபதி புதன், சூரியன், சுக்கிரன் ஆகியோரின் நிலை ஜாதகருக்கு திருமண வாழ்வில் ஏற்படும் பாதிப்பை விவரித்துச் சொல்கிறது. ஆண்களுக்கு களத்திர காரகர் சுக்கிரன் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களும் பெண்களுக்கு செவ்வாய் பாதிக்கப்பட்டவர்களும் திருமண வாழ்வில் பாதிப்பை சந்திக்கிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் ஒரு ஜாதகருக்கு நடக்க காமத் திரிகோணங்கள் எனும் 3, 7, 11 ஆமிடாதிபதிகள் தங்களுக்குள் இடம் மாறி அமர்வது காரணமாகும். மேற்கண்ட ஜாதகத்தில் 3 ஆமதிபதி சுக்கிரன் 3 ஆமிடத்திலேயே இருப்பதும், 7 ஆமதிபதி சனி 11 ல் அமைந்திருப்பதும் ஜாதகருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் அமைய காரணமாகும். அப்படி பல திருமணங்கள் அமைகையில் ஒரு திருமணத்திற்கும் இதர திருமணங்களுக்கும் இடையேயான வேறுபாட்டை குறிப்பிட்ட பாவகங்களும் அதில் அமையும் கிரகங்களும் சுட்டிக்காட்டும். ஜாதகர் திறமையற்றவர். தனது திறமைகளை வளர்த்துக்கொள்ளாதவர் என்பதை மீறி மற்றொரு விஷயத்தை கூறக் கடமைப்பட்டுள்ளேன். போக ஸ்தானம் எனும் 3 ஆமிடத்தில் லக்னாதிபதி சூரியன் நீசமாகிறார் என்பதை கவனிக்க. 3 ஆமிடம் என்பது ஆண்மை, வீரியம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானமாகும். அங்கு லக்னாதிபதி நீசமாகி, கால புருஷ போக ஸ்தானாதிபதியான புதனையும், கால புருஷ காம & களத்திர ஸ்தானாதிபதி சுக்கிரனையும் அஸ்தங்கப்படுதுகிறார். மேலும் வீரிய காரகர் செவ்வாயும் அஸ்தங்கமடைகிறார் என்பதால் ஜாதகருக்கு போதுமான வீரியமும் எழுச்சியும் இருக்காது. இதனால் இந்த ஜாதகர் ஒரு பெண்ணை காதலுடன் அணுகி இல்லறத்தில் திருப்திப்படுத்த இயலாது. ஏர் உழுதவன் ஏற்றம் காண மனைவியின் ஜாதகம் துணை புரிய வேண்டும். ஆனால் இந்த ஜாதகத்தில் ஏர் உழுபவனே சரியாக உழவில்லை என்பதும் ஜாதகருக்கு திருமண வாழ்வில் தோல்விகளை சந்திக்க மற்றுமொரு முக்கிய காரணமாகும்.
இப்பதிவின் தொடர்ச்சி அடுத்த பதிவில்.
மீண்டும் அடுத்த பதிவில் விரைவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501.