பத்துப் பொருத்தங்களின் இன்றைய நிலை.

இன்றைய அவசர உலகில் சக மனிதர்களை புரிந்துகொள்வது மிக முக்கியம். சக மனிதர்களை சாராமல் உலகில் வாழ முடியாது. நமது சூழலில் சக மனிதர்களை  புரிந்துகொள்ள இயலாவிட்டாலோ அல்லது மற்றவர்கள் நம்மை புரிந்துகொள்ள இயலாவிட்டாலோ, நமக்கு அனுசரணையான தொடர்புகளை நாடுவது இயல்பு. இனிமையான உறவுகளும் நட்புகளும் இயல்பாகவே அமைபவர்கள் பாக்கியவான்கள். ஏனையோர் அவர்களை நாடிச்சென்று தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதை ஒரு வாழ்க்கைக் கலையாக செய்பவர்களுக்கு வாழ்வே ஒரு இனிய  பாடமாக இருக்கும். இக்கலையை கற்றுக்கொள்ள மறுப்பவர்கள் தமக்கு அமையும் தொடர்புகளை சகித்துக்கொள்ள வேண்டியதுதான். சக மனிதன் எப்படி இருந்தாலும் அவனை அப்படியே ஏற்றுக்கொள்பவன்  ஒரு போதும் மனக்காயங்களை அனுபவிப்பதில்லை என ஜென் தத்துவம் கூறுகிறது. ஆனால் பல கசப்பான அனுபவங்களுக்குப் பிறகே நல்ல மனிதர்களை இனங்காண முடிகிறது. நட்பு, வேலை, சுற்றம் மூலம் அமையும் தொடர்புகளை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். உறவில் பெற்றோர்களை சகித்துக்கொள்ளலாம் மற்றவைகளை விலக்கி வைக்கலாம். ஆனால் வாழ்க்கைத் துனைவருடனான உறவு மிக முக்கியத்துவம் மிக்கது. நமது உயிரோடு உடலோடு கலந்த உறவு அது. அதனால்தான் நாம் நமது வாழ்க்கைத் துனைவரிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்கிறோம். மணவாழ்வில் ஏற்படும் தொடர்பானது அனுபவமற்ற ஒன்று. பழகிப்பார்த்துவிட்டு திருமண உறவுக்குள் இணையும் அமைப்பு இங்கு எல்லோருக்கும் அமைவதில்லை. அடுத்த பத்தாண்டுகளில் இந்நிலை முற்றிலும் மாறிவிடும் என்றாலும் இன்றைய நிலையில் துணைவரே காயப்படுத்தினால் என்ன செய்வது? சகித்துக்கொள்ள இயலாமலும் விட்டுக்கொடுத்துப் போக இயலாமலும் அமையும் சூழ்நிலைகளில் என்ன செய்வது? என வாழ்வு நம்மை திகைக்க வைக்கும்.

இந்நிலையில் ஜோதிடம் இதற்கு தீர்வு வைத்துள்ளதா? என்றால் அனைவரும் கைகாட்டுவது நட்சத்திரப் பொருத்தங்களைத்தான். பண்டைய வாழ்க்கை முறையில் நட்சத்திரப் பொருத்தங்கள் பெருமளவு பயன்பட்டன. இன்றைய நவீன யுகத்தில் நட்சத்திரப் பொருத்தங்கள் பெருமளவு செயல் இழந்துவிட்டன என்பது கண்கூடு. கிரக ஜாதகப் பொருத்தமும் தசா-புக்திக்களும்தான் அனைத்து விஷயங்களிலும்  அனைத்து காலங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இது பற்றி ஆராய்வதே இன்றைய பதிவு.

கீழே ஒரு தம்பதியின் ஜாதகங்கள்.

கிரகப் பொருத்தம் ஏன் முக்கியம்?

களத்திர காரக கிரகங்களான செவ்வாய், சுக்கிரன், களத்திர பாவாதிபதி, களத்திர பாவகத்தில் நின்றோன் ஆகியோர்  கணவன் மனைவி இருவர் ஜாதகத்திலும் சம வலுவுடன் அமைவது விரும்பத்தக்கது. பிற கிரகங்களுக்கும் இவ்விதி பொருந்தும் என்றாலும் கணவன்-மனைவிக்கிடையேயான உறவில் இவையே  உறவின் பாலமாக திகழ்பவை. அனைத்து கிரகங்களுமே ஒருவர் ஜாதகத்திற்கு மற்றவர் ஜாதகத்தில் ஒன்றுக்கொன்று கேந்திர, கோணங்களில் அமைவது சிறப்பு. இதில் களத்திர பாவக தொடர்புடைய கிரகங்கள் இப்படி அமைவது மிக அவசியம். ஒருவர் ஜாதக கிரகம் மற்றவர் ஜாதகத்தில் 6,8, 12 ல் மறைவது கூடாது. இதனால் அப்படி மறையும் கிரக காரக, ஆதிபத்திய விஷயங்களில் கணவன்-மனைவிக்கும் கருத்தொற்றுமை ஏற்படாது.   

தொன்னூறுகளின் துவக்கத்தில் பிறந்தவர்கள் மேற்கண்ட தம்பதியர். கணவரின் சூரியனுக்கு மனைவியின் சூரியன் 8 ல் அமைந்தள்ளார். சூரியன் கெளரவத்திற்கு உரிய கிரகமாவார். இங்கு சூரியன் சஷ்டாஷ்டகமாக  (6/8 ஆக)  அமைவதால் ஒருவரின் செயல்பாடு மற்றவருக்கு கௌரவத்தை தருவதாக அமையாது.  மனைவியின் கேது கணவரின் சந்திரனை முதலில் தொடுகிறார். இதனால் கணவர் பாதிக்கப்படுவார். மனைவியின் சந்திரன் மீது கணவரின் ராகு அமைந்துள்ளார். ஒருவரின் மன ஓட்டங்களை எடுத்தியம்புவது சந்திரனாகும். ஒருவர் சந்திரன் எனும் ஒளி கிரகத்தின் மீது மற்றவரின் ராகுகேதுக்கள் எனும் நிழல் கிரகங்கள் அமையும் போது அங்கு கிரஹண தோஷம் ஏற்படும். இத்தகைய அமைப்பில் மனைவி பாதிக்கப்படுவார். மனைவி தனது மன விருப்பங்களை கணவரிடம் பகிர்ந்துகொள்ள மாட்டார்.  கணவர் மனைவியின் விருப்பங்களை கண்டுகொள்ள மாட்டார். மாறாக மனைவியிடம் அதிகப்படியான ஆதிக்கம் செலுத்துவார். மேலும் சந்திரன் எனும் மாமியாரால் மனைவிக்கு கடும் பாதிப்புகள் ஏற்படும். மாமியாரால்தான் தான் குடும்ப வாழ்வை இழந்ததாக மனைவி கூறுகிறார்.  கணவரின் குருவின் பார்வை மனைவியின் சந்திரனுக்கு விழுவது சிறப்பான அமைப்பே. ஆனால் இங்கு கேதுவோடு இணைந்து பாதிக்கப்பட்ட குருவின் பார்வையைத்தான் மனைவியின் சந்திரன் பெறுகிறார். குரு சந்திரனுக்கு ஏற்படும் பதட்டத்தை குறைப்பார். ஆனால் தடுக்கமாட்டார். மனைவியின் கேது கணவரின் செவ்வாய் மேல் உள்ளது. இது கணவர் வகை வழக்குகளை ஏற்படுத்தும் அமைப்பு. மனைவியின் செவ்வாய்க்கு கணவரின் செவ்வாய் விரையத்தில் அமைந்துள்ளார். இதனால் ஒருவரின் உத்தரவை மற்றவர் மதிக்க மாட்டார்.

வக்கிர கிரகப் பொருத்தம் ஏன் மிக முக்கியம்?

ஒருவர் ஜாதகத்தில் ராகு-கேதுக்களைத் தவிர பிற கிரகங்கள் அனைத்தும்  நேர்கதியில் இருப்பதாகக் கொள்வோம். மற்றவர் ஜாதகத்தில் சில கிரகங்கள் வக்கிர கிரகங்கள் இருப்பதாகக் கொள்வோம். வக்கிர கிரகங்கள் தமது காரக ஆதிபத்திய விஷயங்களில் விட்டுக்கொடுத்தல் இல்லாத தீவிர நிலையில் இருக்கும். இதனால் மற்றவர் ஜாதகத்தில் அவை வக்கிர நிலை பெறாதபோது அவை தொடர்பான விஷயங்களில் இருவருக்கும் ஒரு போதும் கருத்தொற்றுமை ஏற்பட வாய்ப்பே இல்லை. திருமணப் பொருத்தத்தில் வக்கிர கிரகங்களின்  நிலை மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். ஒருவர் ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் வக்கிரமாகி உள்ளதோ அதே அளவு கிரகங்கள் மற்றவர் ஜாதகத்திலும் வக்கிரமாகியிருக்க வேண்டும். ஒரு கிரகம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். அதிலும்கூட அதிக வக்கிர கிரகங்களை பெற்ற ஜாதகர் குறைந்த வக்கிர கிரகங்களைப் பெற்ற ஜாதகரை தனது கருத்துக்களால் காயப்படுதுவார்.

மேற்கண்ட ஜாதகத்தில் ஒருவரின் புதனுக்கு மற்றவரின் புதன் 7 ல் அமைந்துள்ளது சிறப்பான அமைப்பே. இதனால் பிரச்சனைகள் ஏற்பட்டால் பேசி முடிவுக்கு வர இந்த அமைப்பு வகை செய்யும். இருவரின் புதனும் வக்கிரத்தில் அமைந்துள்ளதால் ஒருவரின் கருத்து மற்றவருக்கு புரியும். ஒருவர் புதன் வக்கிரமாகி மற்றவரின் புதன் நேர்கதியில் இருந்தால் புதனின் காரக, பாவக விஷயங்களில் ஒருவரின் கருத்தை மற்றவர் ஏற்க மாட்டார். மனைவியின் குருவிற்கு கணவரின் குரு 11 ல் அமைவது நல்ல அமைப்பே. ஆனால் ஒருவரின் குரு வக்கிரத்திலும் மற்றவரின் குரு நேர்கதியிலும் உள்ளது இந்த லாபகரமான அமைப்பை பலனற்றதாக்கும். அதுவும் குருவின் காரகங்களான குடும்ப விஷங்கள், குழந்தை, தனம் சார்ந்த விஷயங்களில் ஒருவர் கண்ணோட்டம் மற்றவருக்கு விளங்கிக்கொள்ள இயலாததாக இருக்கும். இந்த தம்பதியில் ஒருவர் குழந்தை வேண்டும் என்றார். மற்றவர் சில காலம் செல்லட்டும் என்றார்.  தனது கணவர் சம்பாதித்த பணத்தை கையாள்வது மனைவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஒருவரின் சுக்கிரனுக்கு மற்றவரின் சுக்கிரன் 8 ல் மறைந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்காது. மனைவியின் சுக்கிரன் வக்கிரமாகவும் கணவரின் சுக்கிரன் நேர்கதியிலும் இருப்பதால் குறிப்பாக இல்லற விஷத்தில் கருத்து வேறுபாடு ஏற்படும். பெண்களால் குடும்பத்தில் பாதிப்பு வரும். இவர்கள் உறவு பிரிய ஒரு பெண்ணே காரணமாக இருப்பார். குறிப்பாக சுக்கிரன் குறிப்பிடும் உறவுகளான மூத்த சகோதரி, மூத்த மகள், அத்தை ஆகியோரால் பாதிப்பு ஏற்படும். மாமியார் ஆணைப்படி இவர்களை பிரித்தவர் கணவரின் மூத்த சகோதரி என மனைவி கூறினார். ஒருவரின் சனிக்கு மற்றவின் சனி 11 ல் அமைந்துள்ளார். ஆனால் இதிலும் மனைவியில் சனி நேர்கதியிலும் கணவரின் சனி வக்கிர கதியிலும் இருப்பதால் கணவருக்கு ஆழ்ந்த தொழில் திறமை இருக்கும். ஆனால் மனைவிக்கு கணவரின் தொழில் திறமை புரியாது. மனைவியின் ராகு-கேதுக்களுக்கு கணவரின் ராகு-கேதுக்கள் பாதகத்தில் அமைந்துள்ளன. இதுவும் பாதகத்தையே செய்யும்.

திருமணப் பொருத்தத்தில் நவாம்சத்தின் பங்கு.

பல தம்பதியரின் ஜாதகத்தில் மேற்சொன்னவை போன்று சாதகமற்ற அமைப்புகள் பல இருந்தாலும் அவர்கள் இணைந்து வாழ்வதை நடைமுறையில் காணமுடியும். அதற்கு காரணம் நவாம்சமாகும். ராசி ஒருவரின் மேலோட்டமான எண்ணங்களை தெரிவிக்கும். நவாம்சம் ஒருவரின் உள்ளார்ந்த சுபாவத்தை கூறும். இதனால் ராசியில் பாதிக்கப்பட்ட கிரக அமைவுகள் கூட நவாம்சத்தில் ஒன்றுக்கொன்று சிறப்பாக அமைந்திருந்தால் மேலோட்டமாக தெரியும் கருத்து மோதல்கள் பாதிப்பை ஏற்படுத்தாது சகித்துக்கொள்ளும் அல்லது ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தை தந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.  

வாழ்க்கையை வழி நடத்தும் தசா-புக்திகள்.

ஜாதகத்தில் உள்ள யோகங்களையும் தோஷங்களையும் அனுபவிக்க வைப்பவை தசா-புக்திகளே. யோகமான ஜாதக அமைப்பை பெற்ற ஒருவர் யோகங்களை தரக்கூடிய தசா-புக்திகள் வராமல் எந்த யோகங்களையும் அனுபவிக்காமல் தனது வாழ்நாளை கடந்துவிடுவதுண்டு. மோசமான ஜாதக அமைப்பை பெற்ற ஒருவர் அந்த மோசமான கிரக தசா-புக்திகள் வராமையால் தனது வாழ்வை செம்மையாக வாழ்ந்துவிடுவதும் உண்டு. யோகங்களும் தோஷங்களும் பலன் தர அவைகளுக்குரிய தசா-புக்திகள் வரும் வரை காத்துக்கொண்டிருக்கும். மேற்கண்ட மனைவியின் ஜாதகத்தில் களத்திர காரகர் குரு கேந்திராதிபத்திய தோஷத்தை தரக்கூடிய அமைப்பில் இருக்கிறார். ஆனால் அவர் வக்கிரமாகி மூன்றாமிடத்தை நோக்கி வருகிறார். இதனால் மூன்றாமிடத்தில் அவருக்கு பாதி ஆதிபத்தியம் உண்டு. இப்படி மூன்றாமிடத்திற்கு செயல்படும் குருவின் பாதி பார்வை தனது வீடான 7 ஆம் வீட்டின் மீது விழும். இதனால் மனைவிக்கு குரு தசை துவங்கிய உடனேயே சுய புக்தியிலேயே திருமணம் ஆகியது. இங்கு வக்கிர கிரகமாக 7 ஆமதிபதியும் பாதகாதிபதியுமாக குரு வருவதால் தனது காரக விஷயங்களை வலுவாக செய்தாலும் தனது பாதகத்தையும் வலுவாக செய்வார். வக்கிர கிரகங்களின் விசேஷ குணமே அதுதான். இங்கு குரு மனைவியை திருமணத்திற்காக தவிக்க வைத்து அவரது 27 ஆவது வயதில்தான் திருமணத்திற்கு வழி விட்டார். திருமணத்தை செய்து வைத்த கையோடு  குரு பாதகத்தையும் செய்தார். தயவு தாட்சன்யமின்றி பிரிவினையை உருவாக்கினார். பிரிவினை பாவகம் எட்டாமிடம். பாவக சக்கரத்தில் எட்டில் சனி சந்திரனுடன் வந்தமைகிறார். குரு தசையில் சனி புக்தி துவங்கியதும் கணவருடன் பிரிவினை ஏற்பட்டது. 

திருமண உறவில் பிரச்சனை தரும் பாவகங்களும் கிரகங்களும்.

ஜாதகத்தில் அதிக வலுப்பெற்ற கிரகங்கள் அதிக ஆளுமைத் திறனோடு செயல்படும். ஒருவர் ஜாதகத்தில் வலுவடைந்த கிரகம் மற்றவர் ஜாதகத்தில் வலுவடையவில்லை எனில் அங்கே பாதிப்பு ஏற்படும்.  அதனால்தான் ஜாதகங்களை இணைப்பதில் சம வலு முக்கியம் என்கிறோம். கணவரின் ஜாதகத்தில் சூரியன் ஆட்சி பெற்று சிறப்பாக அமைத்துள்ளார். மனைவியின் ஜாதகத்தில் சூரியன் திக்பலத்தில் அமைந்துள்ளார். மனைவியின் சூரியன் கணவரின் ஜாதகத்தைவிட அதிக வலுவோடு அமைந்துள்ளது. இதனால் மனைவி தன்னை ஆளுமை செய்வதாக கணவர் உணருவார். சூரியன் கௌரவம் எனும் தனது காரக வகையில் இங்கு பிரிவினைக்கு வித்திடுவார். இருவர் ஜாதகத்திலும் தன்முனைப்பு (Ego) கிரகம் செவ்வாய் லக்னத்திலேயே அமைந்துள்ளதை கவனியுங்கள். லக்ன செவ்வாய் 4,7,8 ஆகிய வீடுகளின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்துவார். இதனால் 4 ஆமிடம் குறிப்பிடும் வீடு, வாகன வசதிகள் அமையும், 7 ஆமிடம் குறிப்பிடும் இல்லறம் சிறப்புறும். அதே சமயம் 8 ஆமிடத்தின் மீதும் செவ்வாயின் பார்வை விழுவதால் பிரிவினை வாய்ப்பையும் லக்ன செவ்வாய் ஏற்படுத்துவார். அதனால்தான் லக்ன செவ்வாயையும் செவ்வாய் தோஷம் என்றே குறிப்பிடுவர். செவ்வாய் பெண்ணுக்கு கணவரை குறிப்பவர். 7 ஆமதிபதி வாழ்க்கைத் துணைவரை குறிப்பவர். மனைவியின் லக்னத்தில் செவ்வாய் அமைந்துள்ளதால் அவர் 6 ஆமதிபதி என்றாலும் கூட கணவரை பிரிந்த பிறகும் கூட மனைவி கணவருடன் இணைந்துவிட போராடுகிறார். கணவரின் ஜாதகத்திலும் 7 ஆமதிபதி செவ்வாய் லக்னத்திலேயே அமைந்துள்ளதால் கணவருக்கும் மனைவி மீது கருத்து வேறுபாடுகளை மீறிய ஈடுபாடு இருக்கும். இந்த தம்பதி சண்டையிட்டு நேரடியாக பிரியவில்லை.  குடும்பத்தினர்தான் பிரித்துள்ளனர்.

1, 6, 10 ஆகியவை குடும்ப களத்திர லாப பாவகங்களுக்கு விரைய பாவகங்களாக அமைவதால் இப்பாவாதிபதிகளின் தசா-புக்திகளும் இப்பாவகங்களின் நின்றோர்களின் தசா-புக்தியும் பிரிவினையை ஏற்படுத்தத் தூண்டும். பிரிவினையை செயல்படுத்தும் பாவகங்கள் 8 ம், 12 ம் ஆகும். மனைவியின் ஜாதகத்தில் குரு தசையில் பாவகச் சக்கரப்படி 8 ல் அமைந்த சனி புக்தியில்  இவர் கணவரிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டார். கணவருக்கு 12 ல் அமைந்த சந்திரனின் தசையில் 8 ஆமதிபதி குருவின் புக்தியில் பிரிவினை ஏற்பட்டுள்ளது. கணவர் ஜாதக 8 ஆமிட சனி வக்கிரமாகி 9 ஐ நோக்கி நகர்கிறார். தசா-புக்திகளுக்கு ஆராய வேண்டிய பாவகச் சக்கரத்தில் சனி மகரத்தில் அமைகிறார். 8 ஆமிடமான தனுசு கிரகமற்ற பாவகமாகிறது. இதனால் தனுசுவின் பலனை அதன் அதிபதி குரு தனது தசா-புக்திகளில் வழங்குவார். கணவர் ஜாதகப்படி 12 ல் அமைந்த சந்திரனின் தசையில் 8 ஆமதிபதி குருவின் புக்தியில் பிரிவினை ஏற்பட்டது.    

நட்சத்திரப் பொருத்தத்தின் இன்றைய நிலை.  

மனைவி திருவோண நட்சத்திரம். கணவர் அஸ்வினி நட்சத்திரம். இருவருக்கும் திணப் பொருத்தமும், ராசிப் பொருத்தமும் இல்லை. ஸ்திரீ தீர்க்கம், ராசியாதிபதி, யோனி ஆகியவை பாதிப் பொருத்தங்களில் அமைபவை. ஏனைய கணம், மகேந்திரம், வசியம், ரஜ்ஜு, வேதை ஆகிய பொருத்தங்கள் சிறப்பானவைகளே. 10 க்கு 8 பொருத்தங்கள் உள்ளதாக எடுத்துக்கொள்ளலாம். மேற்சொன்ன தம்பதியர் இணைந்து வாழ்ந்தது 20 மாதங்கள்தான் என்பதால் இன்றைய 10 பொருத்தங்களின் நிலை கேள்விக்குறியதாகிறது.

எனவே திருமணப் பொருத்தத்தில் இருவரின் தகுதி, ரசனை, எதிர்பார்ப்பு ஆகியவற்றோடு மனப் பொருத்தத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். கிரக அமைவுகள், தசா-புக்திகள், கோட்சார நகர்வுகள், ஆகியவை யோக-தோஷங்களை செயல்படுத்துவை என்பதால் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து பொருத்தங்களை கணக்கிடுவதே சரி. வெறும் நட்சத்திரப் பொருத்தங்கள் இன்று செயல் இழந்துவிட்டன என்பதை நடைமுறை குடும்ப வாழ்க்கைகள் தெளிவாக்குகின்றன.

மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,

அதுவரை வாழ்த்துக்களுடன்,

ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.

கைபேசி: 8300124501.

Share:

வலைப்பதிவு வகைகள்

மிகவும் பிரபலமான வலைப்பதிவுகள்

தொடர்புடைய வலைப்பதிவுகள்

கடுமை காட்டும் கிரகங்களும் கருணை காட்டுவது எப்போது?

வர்க்கங்களில் செவ்வாய்.

ஜோதிடத்தில் ஒரு கிரகம் எப்படிச் செயல்படும் என்பதை அறிய எண்ணற்ற  யுக்திகள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக அஷ்டவர்க்கத்தை சொல்லலாம். ஒரு ஜோதிடர் எத்தனை யுக்திகளை கற்று வைத்துள்ளாரோ? அத்தனை துல்லியம் அவரது பலனில் வெளிப்படும். ஜோதிடத்தில்

மேலும் படிக்க »
இரண்டாம் பாவகம்

பிரியாத வரம் வேண்டும்!…

“ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்” போன்ற திரையிசைப் பாடல்களை கேட்கும்போது நமது இளமை புதுப்பிக்கப்படுகிறது. சமீபத்தில் இப்பாடலை கேட்டபோது இதன் வரிகள் இன்றைய திருமண வாழ்வில் எத்தனை பாடு படுத்துகிறது

மேலும் படிக்க »
ஜாமக்கோள் ஜாலங்கள்

சரியும் சந்தையை சாதகமாக பயன்படுத்தலாமா?

இன்று வேலை, திருமணம், பொருளாதாரம் ஆகியவற்றை பற்றி ஜோதிடர்களை தொடர்புகொள்ளும் அளவுக்கு சமமாக தற்போது பங்கு வணிகம் சார்ந்தும் ஜோதிடர்களை அணுகுகின்றனர் என்பது ஆச்சரியம். முந்தைய காலங்களில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பாக நீண்டகால தொடர்

மேலும் படிக்க »
கிரக உறவுகள்

புத்திசாலிகள் வெல்லுமிடம்!

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிச்சிறப்பான குண நலன்கள் உண்டு. ஆனால் அவை மற்றொரு கிரகத்துடன் இணைகையில் அதற்கு குணமாறுபாடு ஏற்படும். இணையும் கிரக குணத்தையும் கிரகம் கிரகிப்பதுதான் இதற்குக் காரணம். இதில் மூன்றாவது கிரகமும்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

திருமணத்தடை பரிகாரம்.

இன்று பெரும்பாலான இளைஞர் சமுதாயத்தினருக்கு திருமணத் தடை என்பது பெரும் மன உழைச்சலைத் தருகிறது. கடந்த தலைமுறையினருக்கு அதாவது 199௦ க்கு முன் இருந்தவர்கள் நமது சமுதாயம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைத்த காலத்தில்

மேலும் படிக்க »
4 ஆம் பாவகம்

Beware of Scammers

உலகம் வேகமாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வறுமையின் பிடியில் இருந்து பலகோடி மக்களை தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியால் மீட்டெடுத்துள்ளது என உலக வங்கி பாராட்டியுள்ளது. பலதரப்பட்ட காலாச்சார வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும், அடிப்படையில்

மேலும் படிக்க »

எங்கள் தரமான சேவைகள்

பலவகை ஜாதக பலன்கள்
பலவகை ஜாதக பலன்கள்
கல்வியும் தொழிலும்
கல்வியும் தொழிலும்
ஜனன நேரத்திருத்தம்
ஜனன நேரத்திருத்தம்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
திருமணப்பொருத்தம், முகூர்த்தங்கள்
இல்லற ஜோதிடம்
இல்லற ஜோதிடம்
பிரசன்னம்
பிரசன்னம்
மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
ஆன்மீக ஜோதிடம்
நவீன எண்கணிதம்
நவீன எண்கணிதம்

You cannot copy content of this page

Tamil