நீச்ச குரு தோஷங்கள்!
ஜோதிடத்தில் முதன்மையான சுப கிரகம் குரு ஆவார். குரு தற்போது மகரத்திற்கு வந்து நீசமாகிறார். இப்படி பிரதானமான சுப கிரகம் நீசமாவது அடுத்த ஒரு வருடத்திற்கு சிறப்பல்ல என்றாலும் இந்த காலகட்டத்தில் நடத்தப்படும் திருமணம், குழந்தைப்பேறு உள்ளிட்ட சுபகாரியங்கள் கூட பாதிப்பை தரக்கூடியது. அதனால்தான் குரு,சுக்கிர கிரகங்கள் தோஷமடையும் காலங்களில் சுபகாரியங்களை விலக்குமாறு சொல்லிவைத்தனர் நமது முன்னோர்கள். குரு மகரத்தில் நீசம் அங்கு ஆட்சி பெற்று நிற்கும் சனியால் நீச பங்கமடைந்தாலும் கூட சில விளைவுகள் தவிர்க்க இயலாதவை. உதாரணத்திற்கு கீழே ஒரு ஜாதகம்.
இது 1961 ல் பிறந்த ஒரு ஆணின் ஜாதகம் இது. ஆட்சி சனியால் நீச பங்கம் பெற்ற குரு லக்னத்திற்கு 10, 12, 2 ஆகிய இடங்களை பார்க்கிறார். குரு சனி இணைவு பிரம்மஹத்தி தோஷத்தை தரும் என்றாலும் பொருளாதரத்திற்கு இது சிறப்பை தரும் அமைப்பாகும். சனியோடு இணைந்த குரு 1௦, 2 ஆகிய பாவங்களை பார்த்ததால் ஜாதகர் சிறப்பாக சம்பாதித்தார். குரு 12 ஐ பார்த்ததால் வீணான செலவுகளும் ஏற்பட்டன. இப்போது குருவோடு இணைந்த சனி லக்னத்திற்கு 8, 12, 3 ஆகிய பாவங்களை பார்க்கிறது. ஜாதகத்தில் பூர்வ புண்யாதிபதி குரு சனியால் நீச பங்கம் பெற்று நிற்கும் நிலையில் ஜாதகரின் வைராக்கியம் சீர் குலைகிறது. வைராக்யம், மன உறுதி காரகன் செவ்வாய் தனது பகை கிரகமான புதனுடன் இணைந்து 3 ல் நின்று சனியை 4 ஆம் பார்வை பார்த்து சனியின் 1௦ ஆவது பார்வையை வாங்குகிறார். முதலாவது காமத்திரிகோணமான 3 ஆவது பாவத்தில் செவ்வாய் புதனோடு இணைந்து நின்றதால், நிறைந்த சம்பாத்யத்தினால் ஜாதகர் மனச்சலனம் அடைந்து இல்லற ஒழுக்கம் தவறுகிறார். சனி 3 ஆமிட செவ்வாயை பார்த்ததன் விளைவு இது. 12 ஆமிடத்தை சனி பார்த்ததால் இதன்பொருட்டு தனது பொருளாதாரத்தின் ஒரு பகுதியை ஜாதகர் செலவு செய்கிறார். சனி அவமான ஸ்தானமான 8 ஆமிடத்தையும் தனது 3 ஆவது பார்வையால் பார்ப்பதால் தனது தவறுகள் வெளியே தெரிந்து அவமானப்படுகிறார். இத்தனைக்கும் ஜாதகத்தில் 5, 8 க்குரிய குரு நீச பங்கமடைந்துள்ளார். குரு 6 ல் மறைவது தோஷமே என்றாலும் 8 ஆமதிபதி 6 ல் மறைவது விபரீத ராஜா யோகம் ஆகும். குரு விபரீத ராஜ யோகத்தின் விளைவை பொருளாதார ரீதியாக தருகிறார். ஆனால் குருவும் சனியும் சம கிரகங்கள் என்பதாலும் சனியால்தான் தான் நீச பங்கமடைகிறோம் என்பதாலும் தண்டனை தரும் நீதிமான் சனியின் செயல்களை குருவால் தடுக்க இயலவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.
ரிஷப லக்னத்திற்கு ஜாதகத்தில் 8, 11க்குரிய குரு பகவான் உச்ச செவ்வாயால் நீச பங்கமாகியுள்ளார். ஜாதகத்தில் 5 ஆமதிபதி புதன் நீசமாகி 5 ஆவது பாவத்தையே பார்க்கிறார். நீச பங்கமடைந்த குருவும் 5 ஆவது பாவத்தை 9 ஆம் பார்வையாக பார்க்கிறார். நீச பங்கமடைந்த குரு, தன் வீட்டில் நீசம் பெற்று நிற்கும் புதனையும் நீச பங்கப்படுத்துகிறார். ஜாதகத்தில் குரு புத்திர, குடும்ப காரகனாகிறார். அதே சமயத்தில் இந்த ஜாதகத்தில் புதன் குடும்ப, புத்திர பாவத்திற்கு அதிபதி ஆகிறார். இந்த இரு கிரகங்களும் 5 ஆம் பாவத்தை பார்க்கின்றனர். குரு ஜாதகத்தில் குடும்ப பாவமான மிதுனத்திற்கு 8 ல் மறைந்துள்ளார். அதே சமயம் 5 க்கு 5 வலுவடைந்து நிற்கிறார். குடும்ப பாவத்தில் கேது நிற்கிறார். இதனால் புதன் 2 ஆவது பாவத்தின் மீது தனது கட்டுப்பாட்டை இழக்கிறது. அதே சமயம். நீச பங்கமடைந்த புதன் 5 ஆம் பாவத்தை பார்ப்பதால் புத்திர வகையில் நன்மையை செய்தாக வேண்டும். இந்த ஜாதகிக்கு குழந்தை (பெண்) பிறந்ததும் குடும்ப வாழ்வு முறிவடைந்தது. காரணம் குரு மற்றும் புதனின் ஒருங்கிணைந்த செயல்பாடே. ஆனால் ஜாதகியின் மகள் தற்போது வெளிநாட்டில் மிகச்சிறப்பாக உயர் கல்வி பயின்று வருகிறார். இதற்கும் குரு மற்றும் புதனின் ஒருங்கிணைந்த செயல்பாடே காரணமாகிறது. ஒன்றை பறித்து மற்றொன்றுக்கு இவை இரண்டும் வழங்குகின்றன. கர்ம வினை.
மூன்றாவதாக மற்றொரு பெண்ணின் ஜாதகம்
விருட்சிக லக்ன ஜாதகத்தில் வக்கிரம் பெற்ற குருவும் சனியும் பரிவர்தனையாகியுள்ளன. குரு வக்ரமாகிவிட்டதாலும் பரிவர்தனையடைவதாலும் நீச பங்கமடைகிறது. ஆனால் பரிவர்தனைக்குப்பிறகு 5 ல் அமரும் குரு வக்கிர குரு ஆவதால் தனது மன உறுதியில் சில விட்டுக்கொடுத்தல்களை செய்துகொள்கிறார். பரிவர்த்தனைக்குப் பிறகு 3 ல் வக்கிரம் பெற்று அமரும் சனி ஜாதகிக்கு அசட்டுத்துணிச்சலை தருகிறார். லக்னாதிபதியும் வைராக்ய காரகனுமான செவ்வாய் லக்னத்திற்கு 12 ல் மறைந்து 12 ஆம் வீட்டோன் சுக்கிரன் நீசமாகியுள்ளார். இந்த அமைப்பால் ஜாதகியின் வைராக்கியம் தளர்ச்சியுறும். பரிவர்தனைக்குப்பின் மீனத்திற்கு இடம் பெயரும் குரு, நீச நிலை பெற்று லக்ன பாதகாதிபதியுடன் இணைந்திருக்கும் சுக்கிரனின் பார்வையை பெறுகிறது. இந்த அமைப்புகள் குடும்ப மற்றும் இல்லற விஷயங்களில் ஜாதகியை தவறாக வழிநடத்தும். இந்த ஜாதகி திருமணதிற்கு முன்னரே தனக்குப்பிடித்தமானவருடன் திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ்கிறார்.
குரு வாழ்வின் ஒட்டுமொத்த வளமைக்கான கிரகம். அது நீசமாகும்போது தவறான வழிகளில் உயர்வை கொடுத்து வாழ்வில் உயிரானவைகளாக, உயர்வானவைகளாக மதிக்க வேண்டிய விஷயங்களில் பாதிப்பை தந்துவிடும் வாய்ப்பு நிறைய உண்டு. தற்போதைய கோட்சாரத்தில் நீச குருவிற்கு 5 ல் கால புருஷனுக்கு 2 ல் ரிஷபத்தில் உச்ச கதியில் நிற்கும் ராகுவையும் குரு பார்க்க இருக்கிறார். இதனால் குரு-சண்டாள யோகம் செயல்படும் என்பதை இவ்வமைப்பு சுட்டிக்காட்டுகிறது. இதன் விளைவாக காலங்காலமாக நாம் கட்டிக்காத்து வந்த சமுதாய, குடும்ப, பாரம்பரிய நடத்தை நெறிகள் மாறிவிடும் என்பது கலியின் கொடுமை என்று சொல்தைத்தவிர வேறு என்ன சொல்ல?
விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்,
கைபேசி எண்: 8300124501.