ஜோதிடத்தில் கிரகங்கள் ஒன்றுக்கொன்று 6 / 8 ஆக அமைவது சஷ்டாஷ்டகம் என்று அழைக்கப்படும். சஷ் என்பது 6 ஐயும், அஷ்டம் என்பது 8 ஐயும் குறிக்கும். உதாரணமாக மேசத்தில் சூரியன் இருந்து விருட்சிகத்தில் சந்திரன் இருப்பது ஒன்றிலிருந்து மற்றொன்று 6 / 8 ஆக அமையும். இப்படி தங்கள் நிலைகளில் சஷ்டாஷ்டகம் பெற்ற கிரகங்கள் ஒன்றை ஒன்று எதிர்த்து செயல்படும். இதன் வெளிப்பாடு கிரக காரகம், கிரகமிருக்கும் ராசி, கிரகங்கள் சுட்டும் உறவுகள், பணிகள் போன்ற பல்வேறு வகைகளில் வெளிப்படும். இவற்றை சில உதாரணங்கள் மூலம் இன்றைய பதிவில் ஆராய்வோம்.
கீழே நீங்கள் காண்பது ஒரு ஆணின் ஜாதகம்.
ஜாதகர் 1984 ல் பிறந்து திருமணமான ஒரு ஆண். ஜாதகத்தில் தாயாரை குறிக்கும் 4 ஆம் பாவாதிபதி சனி, 12 ஆமிடமான துலாத்தில் உச்சம். அங்கு சனியின் நண்பர் சுக்கிரன் ஆட்சியாக உள்ளார். தாயாரை குறிக்கும் காரக கிரகம் சந்திரனும் மனைவியை குறிக்கும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 6/8 ஆக அமைந்துள்ளனர். இதனால் சுக்கிரனுக்கும் சந்திரனுக்கும் சஷ்டாஷ்டக தோஷம் ஏற்படுகிறது. சந்திரனும் சுக்கிரனும் பெண் கிரகங்கள் என்பதோடு சுப கிரகங்களுமாவர். எனினும் இவை இரண்டும் சம வலு கொண்ட பகை கிரகங்களாகும். சந்திரன் இரவுக்கு ராணி எனில் சுக்கிரன் பகலுக்கு ராணியாகும். இதனால் இந்த ஜாதகர் திருமணமான நாள் முதல் தனது தாய்க்கும் தனது மனைவிக்கும் நிகழும் உரிமைப்போரில் நிம்மதி இழக்கிறார். 4 ஆமதிபதி சனி சுக்கிரனுக்கு நட்பாகையால் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாதபோது மனைவி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கவனித்துக்கொள்கிறார். ஆனால் இதர நேரங்களில் இருவருக்கும் உரிமைப்போர் நடக்கிறது. என்கிறார். கிரகங்கள் இப்படி சஷ்டாஷ்டகம் பெற்று அவற்றின் காரக உறவுகள் கருத்து வேறுபாடுகொள்ளும் என்றாலும் அதன் தாக்கம் தொடர்புடைய திசா-புக்திகளில்தான் அதிகம் வெளிப்படும்.
இந்த ஜாதகருக்கு சந்திரனை நேர் பார்வை செய்யும் சூரிய திசை நடக்கிறது. சந்திரனை சூரியன் பார்ப்பதால் ஜாதகரின் தாயார் இயல்பாகவே அதிகார குணம் பொருந்தியவர். தற்போது புதன் புக்தி நடக்கிறது. புதன் சூரியனோடு சேர்ந்து சந்திரனை பார்ப்பதால் தாயார் அதிகாரத்தோடு அதற்குரிய புத்தி சாதுர்யமும் கொண்டவர் என்பது புரிகிறது. புக்திகாரகன் புதன், சந்திரனின் ஹஸ்த நட்சத்திரத்தில் இருந்து புக்தி நடத்துகிறார். இதனால் தாயார் தனது ஆளுமையையும் புத்திசாலித்தனத்தையும் காட்டி ஜாதகரின் மனைவியை மட்டம் தட்ட முயற்சிக்கிறார். இதற்கு திசா நாதன் சூரியனும் புக்தி நாதன் புதனும் மனைவியை குறிக்கும் சுக்கிரனுக்கு 12 ல் இருப்பதும், சுக்கிரனுக்கு சூரியனும் சந்திரனும் பகை என்பதும் காரணமாகும். சுக்கிரன் ஆட்சி பெற்றாலும் லக்னத்திற்கு 12ல் இருப்பதாலும் அதிக பாகை பெற்று ஆத்ம காரகனாகவுள்ள சந்திரனைவிட வலு குறைந்தவராகிறார். ஆனால் சுக்கிரன், சந்திரனைவிட ஒரு பாகைதான் குறைந்தவர் என்பதால் இங்கே கௌரவப்போட்டி தாய்க்கும், மனைவிக்கும் அதிகமாகிறது. இப்படி தாய்க்கும் மனைவிக்குமிடையே நடக்கும் சண்டையில் ஜாதகர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாடு சென்று பணிபுரிய உள்ளதாகவும் அப்போதுதான் இவர்களுக்கு புத்தி வரும் என்று கூறுகிறார். ஜாதகருக்கு புதன் புக்திக்கு அடுத்து சந்நியாசி கிரகமான கேதுவின் புக்தி குடும்ப பாவமான 2 க்கு விரையமான லக்னத்தில் ஜல ராசி விருட்சிகத்தில் இருப்பதால் இவர் குடும்பத்தை பிரிந்து வெளிநாடு செல்ல எண்ணுகிறார். சஷ்டாஷ்டகம் பெற்ற கிரகங்கள் தங்கள் காரக உறவு வகையில் ஜாதகரை பாதிக்கின்றன.
இரண்டாவதாக மற்றொரு ஆணின் ஜாதகம் கீழே.
ஜாதகர் திருமணமான ஆண். ஜாதகத்தில் களத்திர காரக கிரகங்களான சுக்கிரனும் செவ்வாயும் ஒருவருக்கொருவர் சஷ்டாஷ்டகம் பெற்று அமைந்துள்ளனர். ஜாதக அமைப்பிலேயே இவர் திருமண வாழ்வில் மனைவியுடன் கருத்து வேறுபாட்டை சந்திப்பார் என்பது தெளிவாகிறது. எப்போது எனும் கேள்வி எழும்போது திசா-புக்திகள் பதிலைத் தரும். இவருக்கு 7 ஆமிடத்தை பார்வை செய்யும் சந்திர திசையில் திருமணம் நடந்தது. 8 ஆமிடத்தில் இருந்து 7 ஆமிட சனியின் உத்திரட்டாதியில் நிற்கும் செவ்வாய் திருமணத்தை நடத்தி வைத்தார். மனைவி வந்தவுடன் செவ்வாய்க்கும் சுக்கிரனுக்குமான சஷ்டாஷ்டகம் வேலை செய்கிறது. இதனால் தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு எழுகிறது. இதனால் சார அடிப்படையில் 7 ஆமிட தொடர்பு பெற்று திருமணத்தை நடத்தி வைத்த அதே செவ்வாய், தான் நிற்கும் பிரிவினை பாவமான 8 ஆமிடத்திற்குமான பலனையும் கொடுக்க வேண்டியவராகிறார். அதனால் பிரிவினையையும் செவ்வாய் கொடுத்துவிட்டார். பிரிவினைக்கு வித்தாக அமைந்தது சுக்கிரன்-செவ்வாய் பெற்ற சஷ்டாஷ்டகமே. இவர் திருமணமாகி இல்லற வாழ்வுக்குள் நுழையுமுன்னரே மணமுறிவை சந்தித்தவர்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்.
கைபேசி: 8300124501