ஜோதிடத்தில் விதி, கதி, மதி என வார்த்தைகள் வழங்கப்படுவதை அறிந்திருப்பீர்கள். ஆனால் அதன் உண்மையான பொருளை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. விதி என்பது ஒருவரது ஜென்ம லக்னத்தை குறிப்பிடுகிறது. லக்னம் வலுவாக அமைந்து லக்னாதிபதியும் சிறப்பாக அமைந்துவிட்டால் ஒருவருக்கான வாழ்க்கை நிகழ்வுகள் பெரும்பாலும் தடையின்றி நிறைவேறிவிடும். ஜாதகர் வாழத் துவங்குமுன்பே அவருக்கான பாதையை படைத்தவன் வகுத்து வைத்திருப்பான் எனலாம். இரண்டாவதாக மதி எனப்படுவது சந்திரனை குறிப்பிடும் சொல் ஆகும். ஒருவரது லக்னம் வலு குறைவாக அமைந்திருந்து ராசியும் ராசி நாதனும் வலுவாக அமைந்துவிட்டால் ஜாதகர் தனது சுய முயற்சியால் தன் விருப்பப்படி தனக்கான வாழ்க்கைப்பாதையை தேர்ந்தெடுப்பார் எனலாம். நிறைவாக கதி என்பது சூரியனை குறிப்பிடும் சொல் ஆகும். ஜாதகத்தில் ராகு-கேதுக்களைத்தவிர சூரியனின் கதிர்வீச்சையே இதர கிரகங்கள் பிரதிபலிக்கின்றன என்பதால் ஒருவருக்கு லக்னமும் ராசியும் பாதிக்கப்பட்டிருந்து சூரியன் சிறப்பாக அமைந்திருந்தால் சூரியன் அமைந்துள்ள பாவமே ஜாதகரை இயக்கும் பாவம் என பிரதானமாக எடுத்துக்கொண்டு பலன்சொல்வது ஒரு முறை. இதன் அடிப்படையின் இப்பதிவை சில உதாரண ஜாதகங்களுடன் காண்போம்.
விதி
மேற்கண்ட ஜாதகம் ஒரு பெண்ணினுடையது. மிதுன லக்னத்தில் லக்ன சுபரும் சுபாவ பாவருமான சனி அமர்ந்து பாக்ய ஸ்தானத்தில் வக்கிர நிலை பெற்ற குருவின் பார்வையை பெறுகிறார். லக்னாதிபதி ராசியில் உச்சமாகி பாவிகள் சேர்க்கை பெற்று அமர்ந்துள்ளார். லக்னாதிபதி உட்பட எந்த கிரகமும் அஸ்தங்கம் அடையவில்லை என்பது சிறப்பே. இதனால் மதி எனப்படும் ராசியை விட விதி எனப்படும் லக்னமே வலுப்பெறுகிறது. இதனால் ஜாதகரை ராசியை விட லக்னமே வழிநடத்தும். தனக்கு இயல்பாக அமையும் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் துணைவரை கரம்பிடிக்க வேண்டியிருக்கும். காரணம் ராசியில் அமைந்துள்ள புதனை சூரிய-சந்திரனும் செவ்வாயும் கட்டுப்படுத்துவதே ஆகும். பாக்யாதிபதி சனி லக்னத்தில் தன் நண்பனின் வீட்டில் நேர்கதியில் வலுவாக அமைந்துள்ளதால் ஜாதகருக்கு எதிலும் தெளிவான நிதானமான போக்கு இருக்கும். 7 ஆமதிபதி குரு வக்கிரமடைந்து செவ்வாயும் சூரிய, சந்திர, புதனோடு சேர்க்கை பெற்றதால் கணவர் நிர்வாகத்திறனுடையவராகவும், பொறுமை அற்றவராகவும், அடிக்கடி பயணங்கள் செய்பவராகவும் , கோபம் மிகுந்தவராகவும் இருப்பார் எனலாம். 7 ஆமதிபதியான நீர்க்கோள் குரு 9 ஆம் பாவத்தில் நிற்பதாலும் லக்னத்திற்கு 2 ஆமிடம் நீர் ராசியாகி சந்திரன் லக்னாதிபதி சேர்க்கை பெற்றதனாலும் ஜாதகிக்கு கணவரின் சூழலை முன்னிட்டு வெளிநாட்டு வாழ்வு அமையும் எனலாம். ஜாதகி வெளிநாட்டில் தன் குடும்பத்தோடு வசிக்கிறார். ஜாதகிக்கு நடப்பவை அனைத்தும் அவரது விதிப்படி நடப்பவை. லக்னாதிபதி ராசியில் பாவிகளோடு சேர்ந்து விட்டதால் ஜாதகர் போராடி தன் வாழ்க்கையை தனக்கு பிடித்தபடி அமைத்துக்கொள்ள இயலாது.
மதி
கீழே இரண்டாவதாக ஒரு ஆணின் ஜாதகம்.
ஜாதகத்தில் உச்ச நீச்சமாக அமையப்பெற்ற கிரகங்களே ஜாதகருக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனுபவ உண்மையாகும். இந்த ஜாதகத்தில் கடக ராசியில் அமையப்பெற்ற குருவும் கடக ராசி அதிபதி சந்திரனும் உச்சமாக அமைந்துள்ளனர். சுக்கிரனும் செவ்வாயும் ஆட்சி. சூரியன் ஆட்சி சுக்கிரனுடன் அமைந்துள்ளதால் நீச பங்கமடைந்துள்ளார். ராகு கேதுக்கள் தனித்த நிலையில் இதர கிரகங்களோடு சேர்க்கை பெறாமல் அமைந்துள்ளது சிறப்பே. இப்படி பல சிறப்புகள் பெற்ற ஜாதகம் நிச்சயம் ஒரு யோக ஜாதகமாகத்தான் இருக்கும். ஜாதகர் உலகப்புகழ் பெற்ற தமிழர். ஜாதகத்தில் லக்னம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். சந்திரனும் அதன் வீடும் வலுவடைந்ததால் இந்த ஜாதகரை ராசியே வழிநடத்தும் எனலாம். அதாவது லக்னப்படி தனக்கு அமையப்பெறும் சூழ்நிலைகளை ராசி வலுவாடைந்ததால் தன் எண்ணப்படி போராடி மாற்றியமைத்துக்கொள்ள இயலும். பிராமண ராசியான கடகத்தில் பிராமண கிரகம் குரு உச்சமாகி அதன் அதிபதி சந்திரனும் உச்சமானதால் ஜாதகர் பிராமண வர்கத்தில் பிறந்தவர். சந்திரன் மாற்றங்களை குறிக்கும் கிரகம் என்பதால் தான் சார்ந்த வைணவ சம்பிரதாய நெறிக்கு எதிராக சைவ சம்பிரதாயப்படி தன் நெற்றியில் திருநாமத்திற்கு பதிலாக தன் எண்ணப்படி திருமண் (விபூதி) இட்டுக்கொண்டவர். சைவ நெறிகளை குறிக்கும் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு ஆகியவை வைணவ நெறிகளை குறிக்கும் சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்களைவிட வலுவாக அமைந்ததே இதற்கு காரணமாகும்.
ராசியாதிபதி சுக்கிரன் சூரியனோடு சேர்ந்ததால் அரசியல் அரசாங்கத்தொடர்புகளும் ஜாதகரை தேடி வந்தன. கற்பனைக்கிரகம் சூரியனும் திரைத்துறைக்கிரகங்கள் சந்திரனும் சுக்கிரனும் வலுவாக அமைந்ததால் திரைத்துறையில் கோலோச்சியவர். ராசிக்கு இரண்டாமிடம் சுப கர்த்தாரி யோகத்தில் அமைகிறது. அதுவும் 2 ஆமிடதிற்கு சுபகர்த்தாரி யோகத்தை வழங்கும் இரு கிரகங்களும் உச்ச கதியில் அமைந்துள்ளன. இதனால் 2 ஆமிடதிற்கு உச்ச சுபகர்த்தாரி யோகம் அமைகிறது. அன்னை சரஸ்வதி இவர் நாவில் குடியிருந்தாள் என்பது தமிழகம் கண்ட உண்மை. இவரது நாவிலிருந்து விழுந்த பாடல் வரிகள் சாமான்யனை குதூகலிக்க வைத்தன. ஆட்சியாளர்களை பிரமிக்க வைத்தன. இனி இதுபோன்ற கவிஞர்கள் திரைத்துறைக்கு வரமாட்டார்களா என நம் எல்லோரையும் ஏங்க வைக்கின்றன. ராசிக்கு 5 ஆமிடத்தில் ஆன்மீக கிரகம் கேது அமைந்ததனால் திரைப்படக் கவிஞராக இருந்தாலும் ஆன்மீகத் துறைக்கும் அருமையான பங்களிப்பைச் செய்திருக்கிறார். ஜாதகர் ஸ்ரீரங்கத்தில் பிறந்த மறைந்த திரைப்படப்பாடலாசிரியர் கவிஞர் வாலி ஆவார். பலநாள் போராடி விடாப்பிடியாக முயன்று தன் வாழ்வை வெற்றிகரமாக மாற்றிக்கொண்டதற்கு இந்த ஜாதகத்தில் மதி என அழைக்கப்படும் மாற்றங்களுக்குரிய சந்திரனின் வலுவே காரணமாகும்.
கதி
மேற்கண்ட ஜாதகம் இந்தியாவின் இரும்பு மனிதரும் முதல் துணை பிரதமருமான சர்தார் வல்லபபாய் படேலினுடையது. ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்க்கையால் ஏற்படும் விருண யோகம் லக்னத்திற்கு பாதக ஸ்தானத்திலும் ராசிக்கு 3 லும் அமைகிறது. விருண யோகத்தால் வாழ்வில் பல போராட்டமான சூழல்களை சந்திக்க வேண்டும். லக்னாதிபதி பகை கிரகங்களோடு 6 ல் அமைந்த நிலையில் ராசியாதிபதி செவ்வாய் சனியோடு கிரக யுத்தத்தில் தோற்றுவிட்ட நிலையில் லக்னதிற்கு யோகாதிபதியான சனியும் ராசியதிபதியான செவ்வாய் இருவருமே ஜாதகருக்கு நன்மை செய்ய வேண்டியவராகின்றனர். இவ்விருவருக்கும் 1௦ ல் திக்பலத்தில் சூரியன் நீச பங்கமடைந்த நிலையில் அமைந்துள்ளதால் இந்த ஜாதகரை கதி எனப்படும் சூரியனே இயக்கும் சக்திபெற்றவராகிறார்.
சட்டம் ஒழுங்கை குறிக்கும் சனி-செவ்வாய் சேர்க்கையால் ஜாதகர் வக்கீலுக்கு படித்தார். லக்னத்திற்கு 9 ஆமிடத்தில் இச்சேர்க்கை அமைந்ததால் ஜாதகர் இங்கிலாந்து சென்று சட்டம் பயின்றார். சனி அடித்தட்டு மக்கள் என்பதாலும் செவ்வாய் போராட்டங்களுக்குரிய கிரகம் என்பதாலும் இவ்விரு கிரக சேர்க்கையால் ஜாதகர் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளுக்காக ஆங்கிலேய அரசை எதிர்த்து போராட்டங்களை நடத்தினார். இவர் பின்னால் திரண்ட மக்கள் கூட்டத்தையும் இவரது போர்க்குணத்தையும் கண்டு மிரண்ட ஆங்கிலேய அரசு மக்களுக்காக இறங்கி வந்து பல சலுகைகளை அளித்தது. பூமிகாரகன் செவ்வாயோடு உழைப்புகாரகன் சனி இணைந்து ஜாதகத்தில் செயல்படுவதால் இவர் “இந்திய விவசாயிகளின் ஆன்மா” என அழைக்கப்பட்டார்.காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் இவரை நாடி வர சனி+செவ்வாய் நிலையே காரணமாகும். தேச விடுதலைக்கான போராட்டங்களில் இவரது பங்கு மிக முக்கியமானது. அதற்காக பலமுறை சிறை சென்றவர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பல்வேறு மாகாணங்களாக பிரிந்து கிடந்த தேசத்தை தனது உறுதிமிக்க செயல்களால் ஒருங்கிணைத்ததற்காக தேசம் இவரை “இந்தியாவின் இரும்பு மனிதர்” எனப்போற்றுகிறது. சூரியனின் நிலையால் முதல் துணை பிரதமராகவும் சனியின் நிலையால் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இன்றைய சாமான்ய விவசாயிகள் இப்படி ஒரு மனிதர் மீண்டும் பிறந்து தங்கள் வாழ்வை காக்க வரமாட்டார்களா என ஏங்க வைத்துக்கொண்டிருக்கும் ஜாதகம் இவருடையது. இவை அனைத்திற்கும் காரணம் இவரது ஜாதகத்தில் கால புருஷனுக்கு கர்ம ஸ்தானமான மகரத்தில் கால புருஷ லக்னாதிபதி செவ்வாய் உச்சமடைந்து கர்ம காரகன் சனியோடு சேர்க்கை பெற்றதே ஆகும். இந்த சேர்க்கைக்கு 1௦ ல் திக்பலத்தில் சூரியன் அமைவது “அழியாப்புகழைத்தரும்” அமைப்பாகும். இத்தகைய ஜாதக அமைப்பினர் அவர்களுக்கான காலகட்டத்தில் மட்டுமே அபூர்வமாக பிறவி எடுக்கிறார்கள். அழியாப்புகழை அடைகிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன். படேலின் புகழ் என்றும் அழியாதது. கட்டுமானத்திற்கு காரகன் செவ்வாய் உச்சமானதால் குஜராத்தில் அமைந்துள்ள இவரது சிலையே உலகில் இன்று உயரமான சிலையாகும்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்,
கைபேசி: 8300124501