இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படும் சனிப்பெயர்ச்சி நெருங்கி வருகிறது. அனைவருக்கும் வாழ்க்கையில் மாற்றங்களை எதிர்கொள்ளும் காலம். சனியானவர் இந்த முறை ஜனவரி 2௦23 ல் தனது மூலத்திரிகோண வீடாகிய கும்பத்திற்கு மாறுவது கொரானாவால் உலகில் ஏற்பட்ட பாதிப்புகளை போக்கும் ஒரு சிறந்த அமைப்பாகும். கும்பம் ஒரு ஸ்திர ராசி என்பதால் வேலை வாய்ப்புகளில் ஒரு ஸ்திரமான நிலை ஏற்படும். உலக நாடுகளுக்கிடையேயான உறவுகள் சீர்கெட்டுள்ள நிலையில் மந்தன் மெதுவாக ஆனால் உறுதியான மாற்றங்களை ஏற்படுத்துவார். கும்பம் ஒரு வாயு ராசி என்பதால் பணிச்சூழல் மாற்றங்களுக்கு உட்பட்டுக்கொண்டே இருந்தாலும் ஸ்திரத்தன்மை படிப்படியாக ஏற்படும். தனி ஒரு நிறுவனத்தில் எப்படி வேலைகள் நடக்கின்றன என்பதையும் உலக நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை எப்படி சமாளிக்கின்றன என்பதையும் அனுமானிக்க இயலாத வகையில் இருக்கும். ஜீவன காரகர் சனி ஏற்படுத்தும் மாற்றங்களை யாரும் அலட்சியப்படுத்திவிட இயலாது. இதர காரணிகளால் ஏற்படும் மாற்றங்களை ஒருவர் அலட்சியப்படுத்திவிட இயலும். ஆனால் சனி ஏற்படுத்தும் மாற்றங்கள் ஆயுள் மற்றும் ஜீவன அடிப்படையிலானது என்பதால் அதை தவிர்க்க இயலாது. சனிப்பெயர்ச்சிக்கு 9௦ நாட்களுக்கு முன்னதாகவே எதிர்கொள்ளவுள்ள மாற்றத்திற்கான நிலையை அனைவரும் உணரலாம். மனிதர்களுக்கு மட்டுமல்ல சகல உயிர்களுக்கும் சனி வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவார். மாற்றங்களின் விளைவுகள் நன்மையா? தீமையா? என்பதை அவரவர் ஜனன ஜாதகம் மூலம் அறியலாம். பொதுவாக சனி என்றாலே தீமைதான் எனும் மனநிலை நம் அனைவருக்கும் உள்ளது. உண்மையில் சனி எனும் கிரகம் மட்டும் இல்லையெனில் மனித வாழ்வில் மாற்றங்களே இல்லை எனலாம். இத்தகைய பெருமைகள் உடைய சனிப்பெயர்ச்சியை ஒட்டி வாழ்வில் மாற்றங்களுக்கான அடித்தளமிடப்படும். இதனால் தங்களது சூழல்களில் மாற்றங்கள் வருமா என கேள்ளவி எழும்போது ஒருவரின் ஜனன ஜாதக அமைப்பு அவருக்கு வாழ்வில் சனிப்பெயர்ச்சியால் ஏற்படும் மாற்றம் எத்தகையது என்பதை துல்லியமாக கூறும். இதை ஒரு உதாரண ஜாதகம் மூலம் விளக்குவதே இன்றைய பதிவு.
வரவிருக்கும் சனிப்பெயர்ச்சி தோஷமா? அல்லது சந்தோஷமா? என்ற கேள்வியுடன் என்னை அணுகிய பெண்மணியின் ஜாதகம் கீழே.
நீர் ராசியான விருட்சிக லக்னத்திற்கு 9 மற்றும் 10 ஆமதிகள் சந்திரனும் சூரியனும் பரிவர்த்தனை பெற்றுள்ளனர். இந்த அமைப்பும் தர்மகர்மாதிபதி யோகத்தில் வரும். 1௦ ல் இரு நீர் கிரகங்களான சந்திரனும் குருவும் உள்ளனர். பரிவர்த்தனைக்குப் பிறகு சூரியன் திக்பலம் பெறுகிறார். 1௦ ஆமதிபதி சூரியன் புதனின் ஆயில்யத்தில்-3 ல் அமைந்து, ஜீவன காரகர் சனி 6 ஆமதிபதி செவ்வாயோடு இணைந்து லக்னத்திற்கு லாபத்தில் ஆவண காரகர் புதனின் மூலத்திரிகோண வீட்டில் அமைந்தது ஆகியவற்றின் மூலம் இவரது ஜீவன எண்ணங்கள் புதன் தொடர்பானவைகளாக இருக்கும் என்பதை தெரிவிக்கிறது. ஜாதகத்தில் உள்ள இந்த அமைப்பால் இந்த ஜாதகி வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வணிக தொடர்புகளை கையாள்கிறார். அதற்கான ஆவணங்களை (Documentation) தயார் செய்வது இவரது பணி.
சனிப்பெயர்ச்சியால் இந்த ஜாதகிக்கு என்ன நிகழும் என்பதற்கு முன் இந்த ஜாதகிக்கு நடக்கும் தசா-புக்திகளை காண்போம். ஜாதகிக்கு சந்திர தசை அடுத்த மாதம் அக்டோபர்’22 உடன் முடிகிறது. பிறகு செவ்வாய் தசை துவங்குகிறது. செவ்வாயும் சனியும் 11 நிற்பதால் நல்ல பலன்களே நடக்க வேண்டும். தசை மாறுவதால் ஒரு ஜாதகரின் வாழ்க்கைச்சூழலும் மாறும். சனிபெயர்சியை ஒட்டி தசை மாறுவதால் மாற்றம் ஜீவனம் சார்ந்த வகையில் இ இருக்க வாய்ப்பு உண்டு. 3, 6, 11 ல் நிற்கும் பாவிகள் நன்மை செய்ய வேண்டும். மேலும் ஜீவன காரகருடன் இணைந்து லக்னாதிபதியும் வரவிருக்கும் தசநாதருமான செவ்வாய் தசை நடத்த உள்ளதால் அவர் தன்னுடன் இணைந்த கிரகத்தின் காரகங்களையும் ஏற்று செயல்படுத்துவார். செவ்வாய் சுய சாரம் சித்திரையில் உடன் இணைந்த சனியியைவிட அதிக பாகை பெற்று நிற்கிறார். இதனால் இங்கு சனி செவ்வாய்க்கு கட்டுப்பட்டவர். லாபமான சம்பவங்களே ஜாதகிக்கு நடக்கும். இரு பாவிகள் இணைவது பாதிப்பு என்றாலும் 11 ஆமிட பாவிகள் நன்மையே செய்வார்கள் என்ற அடிப்படையில் ஜாதகிக்கு நற்பலன்களே நடக்கும்.
தசா-புக்திகள் சிறப்பாக செயல்படவேண்டும் என்றால் அதை கோட்சாரம் சுட்டிக்காட்ட வேண்டும். இப்போது கும்பத்திற்கு பெயரவுள்ள சனியின் நகர்வின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை காண்போம். கும்பத்திற்கு வரும் சனி, ஜீவன பாவம் 1௦ ஆமிடம் சிம்மத்திலுள்ள குரு மற்றும் சந்திரனின் பார்வையை பெறுவார். மாற்றத்தின் காரகர் சந்திரனின் பார்வையை கோட்சார சனி பெறுவதால் ஜீவனத்தில் மாற்றம் கட்டாயம் வரும். ஜனன கால குரு பார்வையை பெறும் சனிக்கு ஜீவனம் சிறப்படையும். பரிவர்த்தைக்கு பிறகு சிம்மத்திற்கு தனது ஆட்சி வீட்டிற்கு வரும் சூரியனின் பார்வையையும் கோட்சார சனி பெறுவார். இதனால் அதிகாரம் பொருந்திய பதவி மாற்றம் ஏற்படும். பரிவர்த்தனை கோட்சாரத்தில்தான் செயல்படும் என்பதால் இங்கு சூரியன் சந்திரன் பரிவர்த்தனையை முக்கியமாக கவனிக்க வேண்டும். விருட்சிக லக்னத்திற்கு 9 ஆமதிபதி பாதகாதிபதி என்பதை கவனிக்க வேண்டும். அங்கு 10 ஆமதிபதி சூரியன் அமர்ந்து பரிவர்த்தனையாவதால் ஜாதகிக்கு ஏற்படும் பாதகம் இடம் மாறி மற்றவருக்கு செல்லும். 9 ஆமிடம் உயரதிகாரியை குறிப்பிடும். இதை வைத்து உங்களது உயரதிகாரி உங்களுக்கு வரவுள்ள பாதிப்பை ஏற்றுக்கொள்வார். அதனால் அவர் பாதிப்படைவார். அதனால் அவரது பதவி உங்களுக்கு உத்தியோக உயர்வாக வரவுள்ளது என்று கூறினோம். இதற்கு ஜாதகி கூறிய பதில் ஆச்சரியப்பட வைத்தது. தனது மேலாளர் (Manager) பணிக்கடுமை காரணமாக வேலையை விட்டுச் செல்வதாக தெரிவித்துவிட்டதாகவும் ஓரிரு மாதங்களில் அவர் பணியிலிருந்து விலகவுள்ளார் எனவும் கூறினார். மேலும் அடுத்த பொறுப்பாளர் தகுதியில் தான் மட்டுமே இருப்பதாகவும் கூறினார். கிரக நகர்வுகளும் தசா-புக்திகளும் இதை துல்லியமாக காட்டுகின்றன. ஜாதகிக்கு பணிச்சுமை கூடுமா? என்றால் நிச்சயம் கூடத்தான் செய்யும் ஆனாலும் ஜாதகி அதை சமாளித்துவிடுவார். காரணம் கோட்சார சனிக்கு ஜனன கால ருவின் பார்வை கிடைப்பதுதான். கோட்சார கேதுவானவர் ஜனன சனி, செவ்வாயை நோக்கி வந்தாலும் கோட்சார குருவின் பார்வை கன்னி ராசிக்கு ஏற்படுவதால், கோட்சார கேதுவால் ஏற்படும் சிரமங்களை கோட்சார குரு குறைத்துவிடுவார்.
வருட கிரகங்களின் பெயர்ச்சி அனைவருக்கும் மாற்றத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு தனி மனிதனும் தனித்துவமாணவனே. ஒரு ராசி, லக்னமாக இருந்தாலும் ஒவ்வொருவரின் ஜாதகமும் வெவ்வேறானவையே. அதனால் பலன்களும் வெவ்வேறானவையே . ஒரு ராசிக்கு பொதுப்பலன்கள் காண்பது பொதுவான சில சம்பவங்களை மட்டுமே கூறும். கிரக நகர்வுகளை தசா-புக்திகளுடன் இணைத்து பார்த்தால் துல்லியமாக ஒருவருக்கு நடக்கும் சம்பவங்களை கூற முடியும்.
உங்களுக்கு வரவுள்ள சனிபெயர்ச்சி என்ன நிகழ்வுகளை தரவுள்ளது என அறிந்துகொள்ள விருப்பமா?
மீண்டும் மற்றொரு பதிவில் உங்களை விரைவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷா ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501