
வாழ்வில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான தேடல்கள் இருக்கும். சிலரது தேடல்கள் கோவில்களில், சிலரது தேடல்கள் மதுப்புட்டிகளில், சிலரது தேடல்கள் புத்தகங்களுக்குள் என்று பட்டியல் நீளும். ஆனால் நாம் அனைவரும் நமது இன்பங்களை, வாய்ப்புகளை ஏதோ ஓரிடத்தில் வாழ்நாள் முழுதும் தேடிக்கொண்டே இருக்கிறோம். சிலர் தேடலில் கண்டுபிடிக்கிறார்கள். பலர் சலித்துவிடுகிறார்கள். தேடலில் கண்டுகொள்வதைவிட தேடுவதே இன்பம்தான் என்று தத்துவம் பேசுபவர்கள் பலர். மனிதனின் தேடல்கள் காலத்திற்கு காலம் மாறி வருவதை காணலாம். நவீன யுகம் மனிதர்களை மின்னணு சாதனங்களையும் செயற்கை நுண்ணறிவையும் தங்கள் தேடல்களுக்கு பயன்படுத்திக்கொள்ள வைக்கிறது. கால மாற்றத்திற்கேற்ப தங்கள் தேடல்களை மாற்றிக்கொள்ளும் பலரையும் நாம் காணலாம். காலம் சில தேடல்களை தேவையற்றதாக்கி விடுவதுதான் அதற்குக் காரணம். ஜாதக அமைப்பு ஒருவர் எந்த விதமான தேடல்களில் இருப்பார் என்பதை சுட்டிக்காட்டிவிடும். ஜாதகத்தில் லக்னாதிபதி அமர்ந்த ராசி, பாவகம், இணைந்த கிரகங்கள் ஆகியவை ஒருவரது ஈடுபாடு எதை நோக்கிய விதத்தில் இருக்கும் என்பதை குறிப்பிட்டாலும், தான் தேடியதை ஒருவர் கண்டுகொள்வாரா? இல்லையா? என்பதை தசா-புக்திகள் முடிவு செய்கின்றன. வலுவான கிரக அமைப்புகள் ஒருவர் தனது தேடல்களில் உறுதியாக நின்று தேடியதை தனது வாழ்நாளில் ஒரு கட்டத்தில் அடைத்தே தீருவார் என்பதை குறிப்பிடுகிறது. அதுவரை இடைப்பட்ட மோசமான தசா-புக்திகள் அவரை சோதிக்கலாம். ஆனால் பொறுமையும் விடா முயற்சியும் உள்ளோர் எதையும் சாதிப்பர். இவ்விடத்தில் ஜோதிட விதிகள் ஒருவரது மன உறுதியின்முன் செயல் இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தான் வள்ளுவர்
“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்” என்கிறார்.
தேடல்கள் வேலை, திருமணம், பணம், கடவுள் போன்ற எந்த வகைப்பட்டாலும் நல்ல ஜாதக அமைப்புகளும், தசா-புக்திகளும் ஒருவரது தேடலை எளிதாக அடையவைக்கின்றன. மாறுபட்ட அமைப்புடையோர் ஒன்று தங்களுக்கான காலம் வரை முயற்சியை தொடர வேண்டும். அல்லது தேடலை மாற்றிக்கொள்ள வேண்டும். அறிமுக வட்டத்தில் ஒருவர் அரசுப்பணிக்காக கடும் முயற்சியில் இருந்தார். அரசுப்பணி அமைந்த பிறகே திருமணம் என்று வைராக்கியம் கொண்டிருந்தார். அவரது சக நண்பரும் அரசுப்பணி தேர்வு எழுதிக்கொண்டிருந்தார். இருவருக்கும் அரசு வேலை கிடைப்பதில் தாமதமானாதால் இரண்டாமவர் தனியார் பள்ளியில் சேர்ந்து சில உப வேலைகளையும் செய்துகொண்டு திருமணமாகி வாழ்வில் நிலை பெற்றுவிட்டார். “Don’t forget to live your life while chasing money” என்றொரு ஆங்கில வாசகம் உண்டு. முதலாமவருக்கு மிகத்தாமதமாக 42 வயதில்தான் அரசுப்பணி கிடைத்தது. வைராக்கியத்தால் திருமணத்தை தள்ளிப்போட்டவருக்கு தற்போது வயதின் காரணமாக பெண் கிடைக்காமல் தனிமரமாக நிற்கிறார். இன்றைய பதிவில் ஒருவரின் தனி ஆர்வம், சூழல், வாழ்க்கை பற்றி ஆராய்வதே.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.

துலாம் லக்னம் வியாபார லக்னம். லக்னாதிபதி சுக்கிரன் மூத்த சகோதரி, சொகுசு வாகனம் போன்றவற்றை குறிப்பிடுபவர். அவர் தொழில் ஸ்தானமான 1௦ ஆமிடத்தில் வாகன ஓட்டி காரகர் எனப்படும் புதனுடன் இணைந்து 4 ஆமிடத்தை பார்க்கிறார். இவர்களை 3 ஆமிடத்தில் வக்கிரமும் வர்கோத்தமும் பெற்ற வாகன காரகர் செவ்வாய் மட்டுமே 8 ஆம் பார்வையாக பார்க்கிறார். இந்த அமைப்பால் ஜாதகர் புகழ் பெற்ற நான்கு சக்கர வாகன நிறுவனமொன்றில் தொழில் தொடர்பாளராக பணிபுரிந்தார். 1௦ ல் சுக்கிரன் அமைந்ததால் இவரது தொழிலில் இவரது மனைவி அல்லது சகோதரியின் தொடர்பும் இருக்கும் என்ற அமைப்பின்படி சில காலத்திலேயே வேலையை துறந்து பல கிளைகளுடைய தனது அக்காவின் ஜவுளி நிறுவனம் ஒன்றின் பொறுப்பை சுக்கிர தசையில் ஏற்றார். ஜோதிடத்தில் விஷம் என்றால் அது ராகு-கேதுக்கள்தான். உணவு ஸ்தானமான 2 ஆமிடத்தில் பாவிகள் அமைந்து அது நீர் ராசியாகவும் அமையும்போது தொடர்புடைய தசா-புக்திகளில் ஒருவர் மதுவருந்தத் துவங்குவார். சந்திரன் கெட்டு, மன உறுதி காரகர் செவ்வாயும் பாதிக்கப்படின் ஒரு பழக்கத்தில் இருந்து ஜாதகர் மீழ்வது கடினம். ஒருவரது நடைமுறைப் பழக்கத்தை குறிக்கும் சந்திரனே உணவு, நீர் ஆகியவற்றையும் ஜோதிடத்தில் குறிப்பவராகிறார். சந்திரனுக்கு ராகு-கேதுக்கள் தொடர்பு மதுப்பழக்கத்தை தீவிரமாக்கும். மேற்கண்ட ஜாதகத்தில் லக்னத்திற்கு 2 ல் வக்கிர சனி அமைந்ததும், ராசிக்கு 2 ல் ராகு அமைந்ததும் பெரிய பாதிப்பே. ராகு சந்திரனை நோக்கி வருகிறார் என்பதை கவனிக்க. சந்திரன் வீட்டில் நிற்கும் தசாநாதர் சுக்கிரனும், சனியும், சந்திரனும் ஒருவருக்கொருவர் திரிகோணத்தில் அமைகிறார்கள். இதனால் பணச் செழிப்பு மிக்கவர்கள் மதுவருந்துவது கௌரவம் என்று ஆரம்பித்த பழக்கம் தற்போது ஜாதகரை மதுக்கோப்பைக்குள் முழ்கடித்துக்கொண்டுள்ளது. அதிலிருந்து வெளியேற எண்ணமின்றி நல்ல குடும்பம், தொழில் அமைந்தும் ஜாதகர் தனது வாழ்வை மரணத்தை நோக்கிய திசையில் செலுத்துகிறார். மனைவி ஜாதகரை திருத்த முடியாததால் குழந்தைகளுடன் தனியே வசிக்கிறார். தவறான விஷயங்களில் ஜாதகரின் தேடல் கிடைத்தற்கறிய மனிதப் பிறவியை வீணடித்துவிட்டது.
கீழே ஒரு பெண்ணின் ஜாதகம்.

சிம்ம லக்ன மதிப்பு உயர்வு ஆகியவற்றை குறிக்கும் லக்னம். இயல்பான விஷயங்களை குறிக்கும் 1 ஆம் அதிபதி இயல்புக்கு மாறனான விஷயங்களை குறிப்பிடும் 8 ஆமிடத்தில் சென்று அமர்வது ஜாதகியே அப்படியான விஷயங்களை தேடிச் செல்வார் என்பதை குறிப்பிடுகிறது. குடும்பாதிபதி புதன் 8 ல் நீசமாகி, 8 ஆமதிபதி குருவுடனும், லக்னாதிபதி சூரியனுடனும் 8 ல் இணைவது, ஜாதகி தனது பாரம்பரிய இயல்புக்கு மாறான விஷயங்களை குடும்ப அமைப்பில்தான் ஏற்பார் என்பதை குறிப்பிடுகிறது. சூரியன் அங்கு வர்கோத்தமும் பெறுவது ஜாதகிக்கு அதில் உள்ள உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்கிறது. களத்திர ஸ்தானாதிபதி சனி நீசமானதும், களத்திர காரகர் செவ்வாய் 3 ல் வக்கிரமானதும் இதை தெளிவாக்குகின்றன. ஜாதக அமைப்பில் உள்ள சம்பவங்கள் எல்லாம் நடந்துவிடுகின்றனவா? என்றால் இல்லை. அதற்கு தொடர்புடைய தசா-புக்திகள் வர வேண்டும். ஜாதகிக்கு குரு தசைதான் நடக்கிறது. எனவே நாம் குறிப்பிட்ட சம்பவங்கள் நிச்சயம் நடக்கும். குருதசை நடப்பதால் ஜாதகி வெளிநாட்டில் உயர்கல்வி படிக்கிறார். வித்யா காரகர் புதன் தசாநாதர் குரு சாரம் பெற்றதால் உயர்கல்வி வெளிநாட்டில் அமைகிறது. காதல் ஸ்தானமான 5 ஆமிடத்திற்கும் அதிபதியாகி, காதல் காரகர் புதனுடனும், லக்னாதிபதியுடனும் இணைந்து 8 ஆமதிபதி குரு தசை நடத்துகிறார். இதனால் ஜாதகி வெளிநாட்டில் கல்வி பயிலுமிடத்தில் காதல் வயப்படுகிறார். மாறுபட்ட இனம், மதம், காலாச்சாரம், மொழி ஆகியவற்றை குறிப்பிடும் 8 ஆமிடத்தில் லக்னாதிபதி சூரியன், அங்கு குடும்பாதிபதி புதன், குடும்ப காரகர் குருவுடன் தொடர்பாவதால் தனது குடும்ப வாழ்வை தேடிச்சென்று இப்படித்தான் தனக்கு குடும்ப வாழ்வு வேண்டும் என்று குடும்பத்தை அமைத்துக்கொள்கிறார். தனது பாரம்பரிய இயல்புக்கு மாறுபட்ட அமைப்புடன் இணைவதால் ஜாதகியின் குடும்ப வாழ்வு சிறக்குமா? அல்லது பாதிப்பு ஏதும் வருமா? என்றால், லக்னாதிபதி 8 ல் ஆட்சி பெற்ற குருவுடன் இணைந்து தனது உச்ச வீடு மேஷத்தை நெருங்கியுள்ளார். இதனால் தனது கலாச்சாரத்தை துறந்தாலும் செல்லுமிடத்தில் ஜாதகி தனது வாழ்வை மதிப்புடையதாக நிச்சயம் அமைத்துக்கொள்வார். ஜாதகியே இங்கு தனக்கானதை தேடிச் செல்கிறார். தேடியதை அடைகிறார். அதில் வளமான வாழ்வையும் அடைவார். ஜாதகிக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.
தேடுவது அனைத்தையும் அடைந்துவிட்டால் இந்தப் பூமியில் கடவுளுக்கு அவசியமில்லாமல் போய்விடும். சிலருக்கு தேடியது கிடைக்கிறது. பலருக்கு கிடைப்பதில்லை. தேடல்தான் மனித வாழ்வை சுவாரஸ்யமாக்குகிறது. நல்ல விஷயங்களில் நமது தேடல்களை அமைத்துக்கொள்வோம்.
மீண்டும் விரைவில் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: +91 8300124501.