திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது முன்னோர் வாக்கு. திருமண பந்தத்தின் மூலம் ஒருவர் அமைத்துக்கொள்ளும் குடும்பமே ஒருவருக்கு அர்த்தமுள்ள வாழ்வை வழங்குகிறது. இப்படிப்பட்ட குடும்ப வாழ்வை விதிப்பயன் காரணமாக ஒருவர் இழக்கிறார் எனில் மீண்டும் குடும்ப வாழ்வை அவர் பெறுவதற்கான சூழல் என்ன என்பதை ஆராய்வதே இன்றைய பதிவின் நோக்கமாகும். சிறப்பான திருமண யோகத்தை வழங்குவதில் சுபக்கிரகங்களும் ஒற்றைப்படை பாவங்களும், திருமண தோஷத்தை தருவதில் பாவக்கிரகங்களும் இரட்டைப்படை பாவங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாவங்களில் 8 ஆவது பாவம் மணமுறிவை தருவதில் முக்கிய பங்காற்றுகிறது எனில், 7 ஆமிடத்தை லக்னமாகக்கொண்டு ஆராய்ந்தால் துணைவரின் ஆயுளை அறிய இயலும். ஒருவரது குடும்ப வாழ்வு பாதிக்கப்பட பல்வேறு காரணிகள் உண்டு. எனினும் திருமணத்திற்கு பிறகு மறுமணம் அமைய பின்வரும் சில காரணிகளை குறிப்பிடலாம்.
எதையும் இரு முறை செய்ய வைக்கும் புதன் தசா-புக்தி ஒருவருக்கு நடப்பில் இருந்தால் அது மறுமண யோகத்தை ஏற்படுத்தும்.
புதன் லக்னத்தில் நின்றாலும் லக்னத்தை 7ல் இருந்து பார்த்தாலும் மறுமண யோகம் உண்டு.
2-8, 3-9, 5-11 மற்றும் 4 ஆமிடங்களோடு தொடர்புடைய கிரக தசா-புத்திகளும் மறுமண யோகத்தை வழங்கும்.
மணவாழ்வை முறிப்பதில் முக்கியப்பங்காற்றும் 8 ஆமதிபதி, 7 ல் நின்றால் மணமுறிவிற்குப் பிறகு மறுமணம் உண்டு.
ஜாதகி 1993 ல் பிறந்த ஒரு பெண்மணி. லக்னாதிபதியும் குடும்ப காரகருமான குருவும், களத்திர காரகர் செவ்வாயும், புதனின் மூலத்திரிகோண வீட்டில் 8 ஆமதிபதி சந்திரன் சாரத்தில் நிற்கிறார்கள். இதனால் ஜாதகிக்கு மணமுறிவு தோஷம் மனதளவில் இருக்கும். ஜாதகிக்கு இரண்டாமதிபதி சனி சாரம் பெற்ற ராகு புக்தியில் திருமணம் நடந்தது. அடுத்து வந்த லக்னாதிபதி குரு புக்தி அஷ்டமாதிபதி சந்திரன் சாரம் பெற்றதால் மணமுறிவை வழங்கியது. அதே குரு 7 ஆமிட பலன்களையும் தனது புக்தி காலத்தில் வழங்க வேண்டும். இப்படி 7, 8 தொடர்புகளை ஒருங்கே பெற்ற குரு தனது புக்தியின் பிற்பகுதியில் மணமுறிவிற்குப் பிறகு மறு திருமண வாய்ப்பை ஜாதகிக்கு வழங்கினார்.
மேற்கண்ட ஜாதகர் 1961 ல் பிறந்த ஒரு ஆண். லக்னாதிபதி 7 ல் நீசம். 7 ஆமதிபதி குரு நீசம் பெற்று பங்கமாகிய நிலை. களத்திர காரகர் சுக்கிரன் உச்சம் பெற்று வக்கிரமாகி நீச புதன் சாரம் பெற்று பலவீனமான நிலை. ஜாதகரின் இத்தகைய அமைப்புகளால் இவரது மனைவி மரணமடைந்தார். தனித்து விடப்பட்ட நிலையில் மனநலம் குன்றிய தனது மகனுக்காகவாவது மீண்டும் ஒரு திருமணம் செய்ய வேண்டிய கட்டாய நிலை. லக்னத்திற்கு 7 ல் பலகீனமாகி புதன் நின்றால் களத்திர பாவத்தை பாதித்தாலும் இரட்டை ராசியான மீனத்தில் நின்ற இரட்டைக்கிரகமான புதன் இரண்டாவது திருமண வாய்ப்பையும் சேர்த்தே வழங்குகிறார். ராகு தசாவில் 7 ஆமதிபதி குரு சாரம் பெற்ற 8 ஆமதிபதி செவ்வாய் புக்தியில் ஜாதகர் மனைவியை இழந்தார். 9 ஆண்டுகளுக்குப்பிறகு நீச பங்கமடைந்த குரு தசையில் 7 ல் நின்ற சுக்கிர புக்தியில் ஜாதகர் மீண்டும் இரண்டாவதாக தன்னைப்போலவே கணவரை இழந்த ஒரு பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். அப்போது குருவும் சனியும் ஜனன காலத்தைப்போலவே கோட்சாரத்திலும் ஒருங்கினைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
1993 ல் பிறந்த இந்தப் பெண்ணின் ஜாதகத்தில் லக்னாதிபதி 4ம் பாவத்தில் புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் நீசமடைந்துள்ளார். 4ம் பாவமும் புதனும் கல்வியை குறிக்கும். புதன் காதலையும் குறிக்கும் கிரகமாவார். லக்னாதிபதி செவ்வாய் நீசம் பெற்று புதன் தொடர்பு பெற்றதால் இப்பெண்ணுக்கு இரு திருமண அமைப்பு இயல்பாகவே ஏற்பட்டுவிடுகிறது. இப்பெண் கல்வி கற்கும் இடத்தில் காதலனை வீட்டிற்கு தெரியாமல் பதிவுத்திருமணம் செய்துகொண்டார். ஜாதகிக்கு காதல் பாவமான 5 ஆம் அதிபதி சூரியனின் தசை துவக்கத்தில் திருமணம் நடந்தது. 7 ஆமதிபதி சுக்கிரன் லக்னத்தில் கேது சாரத்தில் வந்து அமர்கிறார். கேது குடும்ப பாவத்தில் தன்னுடன் இணைந்த காதல் பாவாதிபதி சூரியனை பாதிப்பதோடு தனது சாரம் பெற்ற குடும்ப பாவாதிபதி சுக்கிரனையும் பாதிக்கிறார். இதனால் இந்தப்பெண்ணின் திருமணத்தை இவரது குடும்பத்தினர் அங்கீகரிக்கவில்லை. இதனால் இப்பெண் விவாகரத்து பெற்று கடந்த ஆண்டு சுக்கிர புக்தியில் புதனின் அந்தரத்தில் மீண்டும் திருமணம் செய்துகொண்டார்.
1990 ல் பிறந்தவர். 1-7 ஆமதிபதிகள் காதலின் காரக கிரகம் புதனுடன் தொடர்பாகி பரிவர்த்தனை. இதனால் இப்பெண் காதலித்தார். 7 ஆமதிபதி சுக்கிரன், காதலின் காரக பாவாதிபதி (5 ஆமதிபதி) குருவின் சாரம் பெற்றதாலும் 7 ஆமதிபதி சுக்கிரனும் புதனும் நண்பர்கள் என்ற அடிப்படையில் இனித்த காதல் இல்லறம் வரை சென்று மணமுடிக்க வைத்தது. காதலனை குறிக்கும் காரகர் கிரகம் புதனும் கணவனை குறிக்கும் செவ்வாயும் கடும் பகைவர்கள். மனம் முடிந்ததும் பரிவர்த்தனை வேலை செய்கிறது. செவ்வாய் லக்னத்திற்கு வந்து புதனுடன் இணைகிறார். இதனால் மணம் முடித்த ஓரிரு நாட்களிலேயே கணவனுடன் கடும் சண்டை. தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதாக ஜாதகி உணர்கிறார். காதலனாக புத்திசாலியாகத் தெரிந்தவன் கணவனாகிய பின் முட்டாளாக ஜாதகிக்கு தெரிகிறான். காரணம் பரிவர்த்தனைதான். இதனால் விரைவிலேயே விவாகரத்தாகிறது. ஜாதகிக்கு புதன் சாரம் பெற்ற குரு தசைதான் நடக்கிறது. 2 – 8 அதிபதிகள் தொடர்பு மறுமணத்திற்கு ஏற்றது என்ற அடிப்படையில் இரண்டாவது திருமணத்திற்கு வரன் பார்த்து வருகிறார்கள்.
ஜாதகத்தில் மண வாழ்வை பாதிக்கும் அமைப்புகள் இருந்து, தசா-புக்தி அடிப்படையில் பாதிக்கவும் பிறகு இரண்டாவதாக திருமணம் செய்யவும் முன் குறிப்பிட்ட அமைப்புகள் ஜாதகத்தில் இருக்க வேண்டும். அத்தகைய மறுமண அமைப்புகள் இல்லாமலும், சாதகமான தசா-புக்திகள் வராமலும் குடும்ப வாழ்வை இழந்துவிட்டு மறுமணம் செய்பவர்களைக் காட்டிலும் தனிமரமாக நிற்பவர்களே இன்று அதிகம்.
குடும்ப வாழ்க்கை ஒரு பரிசு. அதன் வெற்றி துணைவருடனான சகிப்புத்தன்மையில்தான் இருக்கிறது.
மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆட்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501