வளர்ச்சியை நோக்கி விரையும் இன்றைய உலகில் துணிச்சலான முடிவுகளை உரிய நேரத்தில் விரைந்து எடுப்பவர்களே வாழ்வில் விரைவாக முன்னேறுகிறார்கள். இது அனைத்து துறைகளுக்குமே பொருந்தும். பங்கு வணிகத்தில் இந்த விதி 100% பொருந்தும். பங்கு வணிகம் உழைக்காமல் முன்னேற முயலும் சோம்பேறிகளின் குறுக்கு வழி என்ற இழிச் சொல்லுக்கு ஆளானாலும், இன்றைய உலகில் உடல் உழைப்பைவிட மூளை பலமே முக்கியத்துவம் மிக்கதாகிறது. இன்றைய காலகட்டத்தில் அடித்தட்டு மக்களைத் தவிர அனைவருக்கும் பங்கு வணிகம் தவிர்க்க இயலாததாகிவிட்டது. துணிச்சலாக முயலாவிட்டால் தாங்கள் வாழ்வில் பின்தங்கிவிடுவோம் என்ற பயமே விருப்பமில்லாதவர்களையும் பங்கு வணிகத்தில் ஈடுபடுத்துகிறது. இது ஓரளவு உண்மையே என்றாலும் ஒருவர் எந்த அளவு தனது பணத்தை பணயம் வைக்கலாம் என்பதை தெளிவாக அறிந்திருப்பது அவசியம். அதுவும் உலகப் பொருளாதாரம் டாலரை கைவிட்டு வேறு பணத்தை தேட ஆரம்பித்துள்ள காலகட்டத்தில் பங்கு வணிகத்தை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். உண்மையில் டாலருக்கு எதிரான இதர நாடுகளின் கொந்தளிப்பே இன்றைய ரஷ்யா-உக்ரைன் போருக்கு அடித்தளம் என்பது கண்கூடு. இந்நிலையில் பங்கு வணிகத்தை ஒரு வாய்ப்பாக பார்ப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். கொந்தளிப்பான கடலில் மீன் பிடிப்பதும் ஒரு அனுபவமே. ஜோதிட ரீதியாக பங்கு வணிகம் அதில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்வதே இன்றைய பதிவாகும். இது பற்றி முன்பே சில பதிவுகள் எழுதப்பட்டிருந்தாலும் இது மற்றொரு புதிய கோணத்தில் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.
ஜோதிடமும் பங்கு வணிகமும்.
எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னமும் லக்னாதிபதியும் நன்கு அமைந்திருந்தால்தான் ஜாதகர் நல்ல வாழ்வை அனுபவிக்க முடியும். லக்னம் நன்றாக அமைந்து லக்னாதிபதி கெட்டுவிட்டால் கோடீஸ்வர இனிப்பக உரிமையாளருக்கு சர்க்கரை வியாதி வந்த கதைதான். அனுபவிக்க முடியாது. தன ஸ்தானம் சிறப்பாக அமைந்தால் தன வரவு சிறக்கும். துணிச்சல், முயற்சி ஸ்தானம் எனும் 3 ஆம் பாவகம் சிறப்பாக அமைந்தால் ஒருவர் தனது முன்னேற்றத்திற்காக துணிச்சலான முயற்சிகளை எடுப்பார். கால புருஷனுக்கு முயற்சி மற்றும் துணிச்சல் பாவமான 3 ஆவது பாவகம் மிதுனமே பங்கு வணிகத்தின் காரக ராசியாகும். மிதுனாதிபதி புதன் பங்கு வணிகத்தின் முதன்மை காரகராகிறார். நாம் தொடர்புகொள்ளும் நபர்களை குறிக்கும் பாவகம் 7 ஆம் பாவகமாகும். 8 ஆம் பாவகம் என்பது 7 ஆம் பாவகத்திற்கு 2 ஆம் பாவகமாகும். அதாவது எதிராளியின் தன பாவகம் 8 ஆம் பாவகமாகும். இதனடிப்படையில் கால புருஷனுக்கு 7 ஆம் பாவகமான துலாத்தின் அதிபதி சுக்கிரனும் பங்குச் சந்தையை ஆட்டுவிக்கும் காரக கிரகங்களுள் ஒருவராகிறார். நாம் உழைக்காமல் எதிராளியின் தனம் நமக்கு வர வேண்டும் எனில் 8 ஆம் பாவகம் நமக்கு சாதகமாக அமைய வேண்டும். உழைக்காமல் பொருளீட்ட அதிஷ்டம் இருக்க வேண்டும். இதனால் அதிஷ்ட ஸ்தானம் எனும் 5 ஆவது பாவகம் பங்கு வணிகத்தில் முக்கிய பங்காற்றுகிறது. இதனால்தான் 8 ஆம் பாவகத்தையும், 8 க்கு 8 ஆன 3 ஆவது பாவகத்தையும், 5 ஆவது பாவகத்தையும் பங்குச் சந்தைக்கு உரிய பாவகங்களாக ஜோதிடம் வரையறை செய்கிறது. 2 ஆவது பாவகம் தன வரவையும், லாபத்தை 11 ஆம் பாவகமும் குறிப்பிடுவதால் பங்கு வணிகத்தில் ஒருவர் லாபத்தை அடைய 2, 5, 8 , 11 ஆகிய பாவகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருக்க வேண்டும். இம்மூன்று பாவகங்களும் லக்னத்துடனோ அல்லது லக்னாதிபதியுடனோ தொடர்பில் இருந்தால்தான் பங்கு சந்தையில் லாபம் பார்த்த தனத்தை ஜாதகர் அனுபவிக்க முடியும். சந்திரனுக்கு செவ்வாய் தொடர்பு பங்கு வணிக நடவடிக்கைகளின்போது ஒருவர் நிதானமின்றி செயல்படுவதையும், சனி தொடர்பு மிகுந்த நிதானத்தையும், ராகு-கேதுக்களின் தொடர்பு பதட்டமடைவதையும் காட்டும். வக்கிர கிரகம் முடிவெடுக்க இயலாமல் தவிப்பதை அல்லது தவறாக முடிவெடுப்பதை காட்டும். மேற்சொன்னவற்றிக்கு குரு தொடர்பு ஏற்படுவது பங்கு வணிகத்தில் மிகவும் சிறப்பு மிக்கது. குரு தொடர்பற்ற லாபம் அடுத்தவர் இழப்பதால் ஏற்படும் கர்மாவையும் ஜாதகருக்கு கொண்டு வரும். குரு தொடர்புடைய லாபம் அதை போக்கிவிடும்.
ராசியை மட்டும் வைத்து பங்குச்சந்தை தொடர்புகளை ஆராய்வதை விட, பங்குச் சந்தையோடு தொடர்புடைய வர்க்கச் சக்கரங்கள் மூலம் ஆராய்வது மிகுந்த துல்லியத்தை தரும்.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
ராசிச் சக்கரத்தில் ரிஷப லக்னாதிபதி சுக்கிரன் 8 ஆமதிபதி குருவுடன் இணைந்து மிதுனத்தில் இருப்பதால் ஜாதகருக்கு இயல்பிலேயே பங்கு வணிகத்தின் மேல் ஒரு ஆர்வம் இருக்கும்.
ஒரு ஜாதகரது முயற்சிகளை அறிய பராசர திரேக்காணத்தைவிட ஜெகன்னாத திரேக்காணம் சிறப்பானது என்பதால் இங்கு ஜெகன்னாத திரேக்காணத்தை பயன்படுத்தியுள்ளேன். ஜெகன்னாத திரேக்காணத்தில் ராசிச் சக்கரத்தை போலவே ராகு 5 ஆம் பாவகத்தில் அமைந்துள்ளார். இது பாரம்பரிய ரீதியான முயற்சிகளை விடுத்து ராகு குறிக்கும் நூதனமான வழிகளில் ஜாதகரை முயல வைக்கும். திரேக்காணத்தில் கன்னி லக்னத்திற்கு 8 ஆமதிபதி செவ்வாய் லக்னத்திற்கு 7 ல் அமைந்து லக்னத்தை பார்ப்பதும், 5 ஆமதிபதி சனி 8 ஆமிடமான மேஷத்தில் அமைந்ததும் லக்னாதிபதி திக்பலம் பெற்ற லாபாதிபதி சந்திரனுடன் 4 ல் இணைந்து 10 ஆமிடம் மிதுனத்தை பார்ப்பதாலும் இவர் பங்கு சந்தை முயற்சிகளை ஒரு நண்பரின் அறிமுகத்தால் ராகு தசை, சனி புக்தியில் எடுத்தார். திரேகாணத்தில் தசா-நாதரும் புக்தி நாதரும் 5, 8 ல் அமைந்திருப்பதை கவனிக்க.
அதிஷ்டத்திற்கு ஆராய வேண்டிய பஞ்சாம்சத்தில் லக்னாதிபதி சனி மேஷத்தில் நீசம் பெற்றது குறையே. விரைய பாவாதிபதி குருவின் 5 ஆம் பார்வையை நீச சனி பெறுவது பொருளாதார விஷயங்களில் அதிஷ்டத்தை குறிப்பிடவில்லை. மாறாக கடும் உழைப்பு மட்டுமே ஜாதகருக்கு அதிஷ்டத்தை கொண்டுவரும்.
தசாம்சத்தில் கடக லக்னத்திற்கு 2 ல் ராகுவும் 8 ஆமதிபதி சனியும் இணைந்தது ஜாதகர் ராகு தசை சனி புக்தியில் பங்கு வணிகத்தில் ஈடுபடுவதை குறிக்கிறது. 2 ல் ராகு 8 ஆமதிபதி சனியோடு இணைவது குடும்பத்திற்கு பாதிப்பை தரும். தந்தது. ஆனால் பொருளாதாரத்திற்கு பாதிப்பை தராது என்பதை அறிக. சூரியன் 10 ல் உச்சமாகி திக்பலம் பெற்றது ஜாதகர் யாரிடமும் வேலை செய்ய விரும்ப மாட்டார் என்பதை குறிக்கிறது. 4 ல் 6, 9 அதிபதி குருவும், 3, 12 அதிபதி புதனும் இணைந்து கேந்திராதிபத்திய தோஷம் மூலம் உழைக்காமல் பொருளீட்டும் எண்ணத்தை ஜாதகருக்கு ஏற்படுத்துகின்றனர். ராகு தசை சனி புக்தியில் பெரிய வீழ்ச்சிகளின்றி ஓரளவு லாபங்களை ஜாதகர் பார்த்தார் என்றே சொல்ல வேண்டும். சனி புக்தி முடிந்து விரையாதிபதி புதன் புக்தி துவங்கியதும் ஜாதகர் பெரும் வீழ்ச்சியை பங்குச் சந்தையில் சந்தித்தார். தசாம்சத்தில் புதன் பாதகாதிபதி சுக்கிரனுடன் பரிவர்த்தனையாகியுள்ளார். ராசிச் சக்கரத்திலும் புதன் லக்னத்திற்கு விரையத்தில்தான் நிற்கிறார் என்பதை கவனிக்க. இதனால் புதன் புக்தியில் ஜாதகர் தனது முதலீடுகள் அனைத்தையும் இழந்தார். இதனால் சில வருடங்கள் பங்கு வணிகத்திலிருந்து விலகி இருந்தார். சூரியன் உச்சமாகி திக்பலம் பெற்றதால் இவர் தனது ஆன்ம பலத்தால் இதிலிருந்து மீண்டு வந்தார். விலகி இருந்த காலத்தில் அது தொடர்பான விஷயங்கள் அனைத்தையும் ஜாதகர் தேடிச் சென்று கற்றுக்கொண்டார். இதனால் 2014 ல் ராகு தசையில் சூரிய புக்தியில் ஜாதகர் மீண்டும் பங்குச் சந்தையில் நுழைந்தார். ராகு தசையில் சூரிய புக்தி ஜாதகரது முயற்சிகளுக்கு நல்ல பலன் கொடுத்தது. வலுப்பெற்ற சூரியன் இங்கு தன ஸ்தானாதிபதி என்பதையும் கவனிக்க வேண்டும். இதனால் சூரிய புக்தியிலும், அடுத்து வந்த லக்னாதிபதி சந்திரன், 5 ல் ஆட்சி பெற்ற யோகாதிபதி செவ்வாய் புக்தியிலும் பங்குச் சந்தை ஜாதகருக்கு லாபங்களை வாரி வழங்கியது. இதனால் இவரை நோக்கி முதலீட்டாளர்கள் படை எடுத்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.
தற்போது ஜாதகர் ராகு தசை முடிந்து குரு தசையில் இருக்கிறார். குரு தசாம்சப்படி 6, 9 ஆமதிபதி என்பதால் சில பாதிப்புகளை இவர் எதிர்கொண்டார். ஆனால் குரு 9 ஆமதிபதியும் கூட என்பதால் தற்போது வெளிநாடு தொடர்பான பணப்பரிவர்தனைகளை மேற்கொண்டு லாபம் பார்க்கிறார். தசாம்சத்தில் 9 ஆமிடம் மீன ராசியாக வருவதால் ஜாதகருக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் லாபம் வருகிறது. உள்நாட்டு சந்தை லாபங்களை தரவில்லை என்பதை அறிக.
இன்றைய காலத்தில் பங்குச் சந்தையில் ஈடுபட விரும்புவோர் தங்களுக்கு அது எத்தகைய சாதக, பாதகங்களை வழங்கும் என்பதை அறிந்து ஈடுபடுவது இழப்புகளை இனங்கண்டு லாபங்களை அடைய உதவும்.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501