சென்ற பதிவின் தொடர்ச்சி…
ஒரு ஜாதகரின் உள்ளுணர்வைத்தூண்டி, கர்மாவின் அடிப்படையில் அவரை வழிநடத்தும் கிரகத்தை The Signature Planet என்று அழைக்கிறோம் என்று சென்ற பதிவில் பார்த்தோம். குறிப்பிட்ட அக்கிரகத்தை தோழன் கிரகம் என்று நாம் அழைக்கலாம் என்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். தோழன் ஒரு ஜாதகத்தில் எந்த நிலை பெற்றிருந்தாலும் ஒருவரை வழி நடத்தும். அது சாதகமா? பாதகமா? என்பதை ஒட்டுமொத்த ஜாதகமே தீர்மானிக்கிறது. எது எப்படியாயினும் தோழன் ஒருவரின் இறுதிக்காலம் வரை துணை வருகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.பொதுவாக கிரக வலுவை திக்பலம், மூலத்திரிகோணம், உச்சம் போன்ற பல வகைகளில் அளவிடுகிறோம் என்றாலும் தோழன் கிரகம் இந்த வகைப்பாடுகளில்தான் அமையும் என்ற அவசியமில்லை. ஆனால் இத்தகைய அமைப்புகளை சார்ந்து செயல்படுகிறது என்பதே உண்மை. கூடுதலாக தோழன் என்பவன் நமது மனதிற்கு இணக்கமானவர் என்ற அடிப்படையில் 4, 5 ஆம் பாவங்களை சார்ந்தே செயல்படுகிறது. 4 ஆம் பாவம் 5 ஆம் பாவத்தைவிட தோழனின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய பதிவில் சில உதாரண ஜாதகங்களுடன் தோழன் கிரகத்தின் செயல்பாடுகளை ஆராய்வோம்.
இந்திராகாந்தி மறைவுக்குப்பிறகு தடுமாறிக்கொண்டிருந்த நமது இந்திய தேசத்தை பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே சரியான பாதையில் செலுத்தியவர். நெருக்கடிகளுக்கு காரணம், திக்பலத்தை தரும் சூரியனும் செவ்வாயும் விரையாதிபதியும் அஷ்டமாதிபதியுமானதுதான். திக்பல கிரகங்கள் தங்கள் ஆதிபத்தியத்தை மீறி செயல்படும் என்பதற்கு இந்த ஜாதகம் ஒரு உதாரணம். சூரியன் செவ்வாய் ஆகிய இருவரும் லக்னாதிபதியுடன் ராஜ்ஜிய ஸ்தானத்தில் இணைகிறார்கள். அதோடு இவ்விருவரின் உப நட்சத்திராதிபதியும் புதனே. இதனால் செவ்வாய் திசையில் இவர் பிரதமராக பணியாற்றினார். செவ்வாய் அஸ்தங்கமானாலும் சூரியனைவிட அதிக பாகை பெற்றதால் இந்த ஜாதகத்தில் தோழன் கிரகமாகிறார். செவ்வாய் 4 ஆம் பாவத்தை நேர் பார்வை பார்க்கிறார். செவ்வாய் இங்கு சூரியனின் காரகத்தையும், புதனின் காரகத்தையும் தான் ஏற்று செயல்படுகிறார். ஆனால் 8 ஆமதிபதி என்ற அடிப்படையில் சில நெருக்கடிகளையும் ஜாதகருக்கு கொடுத்தார். நெருக்கடிகளை கையாள ஜாதகர் மேற்கொண்ட “மௌனம் கலக நாஸ்தி” என்ற முறை இவரது காலத்தில் மக்கள் கவனம் ஈர்த்தது. லக்னாதிபதி ராஜ்ய ஸ்தானத்தில் திக்பல கிரகங்களைவிட அதிக பாகை பெற்றதும், தனது பதவியை விட தனது செயல்களில் பின்வாங்காத தன்மையை இவருக்கு வழங்கியது. திரு.நரசிம்மராவ் முன்னெடுத்த பொருளாதார முயற்சிகளுக்காக கட்சி பேதம் கடந்து இன்றும் நன்றியோடு நினைவு கூறப்படுகிறார்.
சுக ஸ்தானத்தில் லக்னாதிபதி புதன் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம். இதனால் இந்த ஜாதகத்தில் புதனே தோழன் கிரகமாகிறார். பாதகாதிபதியை விட லக்னாதிபதி அதிக பாகை பெற்று வலுவடைகிறார். இதனால் லக்னாதிபதி புதன் 1௦ ஆமதிபதி குருவிற்கு தனது காரகங்களை திணிக்கிறார். இவர் ஒரு நல்ல ஆய்வு ஜோதிடராக திகழ்ந்தார். தோழன் கிரகம் தனது 1௦ ஆமதிபதியோடு இணைந்து 1௦ ஆம் பாவத்தை பார்ப்பதால் தனது காரக தொழிலை சிறப்பாக ஜாதகருக்கு வழங்கியுள்ளார்.
மோட்ச ராசிகளில் மூன்றாவது ராசியில் பிறந்தவர் இவர். லக்னத்தில் புதன், சுக்கிரனின் சாரத்தில் நின்று 7 ஆம் பாவத்தை பார்க்கிறார்.களத்திர காரகர் சுக்கிரனும் 7ம் அதிபதி சனியும் பலகீனமாகியுள்ளனர். இதனால் இவர் ஒன்றுக்கு இரண்டு திருமணம் செய்தார். ஆனால் லக்னாதிபதி சூரியன், மோச்ச பாவமான 12 ஆமிடத்தில் மோட்ச ராசி கடகத்தில் நின்று சூரியன் நின்ற வீட்டோன் சந்திரன் கால புருஷ 12 ஆமிடமான மீனத்தில் நிற்கிறார். இந்த அமைப்பால் இவரது மனம் மோட்சப்பாதயையே நாடுகிறது. களத்திர காரகர் சுக்கிரனும், 7 ஆமதிபதி சனியும் 12 ல் நிற்கும் சூரியனின் சாரத்திலேயே அமைகிறார்கள். சூரியன் இதில் அதிக பாகை பெற்று ஆத்ம காரகராகிறார். சுக்கிரன் குறைந்த பாகை பெற்று தாரா காரகராகிறார். இதனால் இவை இரண்டும் இணைந்து செயல்படும். இதனால் இவரது இரு மனைவிகளும் இவரது ஆன்மீகத்திற்கு உடன்படுகிறார்கள். லக்னத்தில் அமைந்த கால புருஷ போக ஸ்தானாதிபதி புதன் 12 ல் அமைந்த சூரியனுடன் நட்சத்திரப்பரிவர்த்தனை ஆகிறார். இதனால் சூரியனுக்கு லக்னத்தின் மீதும், 12 ஆமிடம் மீதும் ஆளுமை அதிகமாகிறது. இந்த ஜாதகத்தில் சூரியன் தோழன் கிரகமாகிறார். 4 ஆமதிபதி செவ்வாய் லக்னாதிபதி சூரியனை 4 ஆம் பார்வையாக பார்க்கிறார். ஜாதகத்திற்கு உரியவர் அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி அவர்கள்.
இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி சனி, ராகு-கேதுக்கள் ஆகிய மூன்று கிரகங்கள் உச்சம். அது மட்டுமல்ல சனி, ராகுவின் சாரத்திலும், கேது சனி சாரத்திலும் அமைகிறார்கள். இதனால் உச்ச கிரகங்கள் மூவரும் ஒருங்கிணைந்து செயல்படுவர். இதில் லக்னாதிபதி சாரம் பெற்ற கேது லக்னாதிபதியை நோக்கி வருகிறார். இதனால் லக்னாதிபதிக்கு ராகு தொடர்பை விட கேது தொடர்பே அதிகம். ஜாதகருக்கு 12 அமைந்த கேது சாரம் பெற்ற குரு தசா முடிந்து, தற்போது சனி தசா துவங்கியுள்ளது. சனி சாரம் பெற்ற கேது சனியை முழுமையாக கட்டுப்படுத்துவார். இந்த ஜாதகர் பல்லாண்டுகளாக ஜப்பானில் பணிபுரிகிறார். ஜப்பானை குறிப்பது கேதுவாகும். இந்த ஜாதகத்தில் கேதுவே தோழன் கிரகமாகிறார். கேது லக்னாதிபதி சனியோடும், 4 ஆமதிபதி செவ்வாயோடும் தொடர்பாகிறார்.
மேற்கண்ட உதாரண ஜாதகங்களை நோக்கினால் தோழன் கிரகத்தைப்பற்றிய ஒரு உண்மை தெரியவரும். அது தோழன் கிரகம் லக்னத்துடனோ அல்லது லக்னாதிபதியுடனோ தொடர்பில் இருப்பதுதான். மேலும் தோழனின் ஆதிக்கம் 4, 5 ஆம் பாவம் அல்லது அதன் அதிபதியோடு ஏதோ ஒருவகை தொடர்பில் இருக்கிறது என்பதுதான்.
மீண்டும் விரைவில் மற்றொரு பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501