திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று கூறுவர். அதற்கு ஒரு ஜாதகரின் குண நலன்களை அறிந்து சாதகமான சூழலில் பொருத்தமான துணையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பொருள். இதுவன்றி அவசரசப்பட்டு முன்னரே திருமணம் செய்விப்பது ஒருவரது இல்லறத்தில் சிக்கலை ஏற்படுத்தும். ஒருவரது குண நலனை புறந்தள்ளிவிட்டு சாதகமற்ற கிரக சூழலில், வசதி வாய்ப்புகள் ஏற்பட்டுவிட்டன என்பதை மட்டும் வைத்து திருமணம் செய்விப்பது பாதிப்பை ஏற்படுத்தும். திருமணதிற்கு ஒருவர் உடல் ரீதியாக மட்டுமின்றி, மனோ ரீதியாகவும் தயாராக இருக்கிறாரா என்று கவனித்து, அவரது எண்ணங்களை புரிந்து பிறகு முடிவு செய்வதே நல்லது. கால மாற்றத்தில் இன்று நட்சத்திரப் பொருத்தங்களைவிட கிரக ரீதியான மற்றும் பாவ ரீதியான பொருத்தத்திற்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டும். மேற்சொன்ன அனைத்தையும் விட, திசா-புக்திகள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஒருவரது திருமண வாழ்வு சிறக்க லக்னத்திற்கு 7 ஆமிடமும் ஏழாமதிபதியும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டியது அவசியம். இதனோடு கால புருஷனுக்கு 7ஆமிடமான துலாமும் அதன் அதிபதியும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டியது மிக அவசியம். இவற்றில் பாதிப்பிருந்தால் ஒரு ஜாதகரது திருமண வாழ்வில் சிரமங்கள் ஏற்பட திசா-புக்திகளின் அடிப்படையில் வழியுண்டு. முக்கியமாக இல்லற இன்பத்தின் அதிபதி என்று கூறப்படும் சுக்கிரன் நிலை கவனிக்கப்பட வேண்டும். ஆனால் சுக்கிரன் உட்பட அனைத்து கிரகங்களும் சூரியனிடமிருந்தே ஒளியைப்பெற்று பிரதிபலிக்கின்றன. சூரியனுக்கு சுக்கிரனுக்கும் அதிக பட்சமாக்க 46 பாகைக்கும் சற்று கூடுதலாக அமையும். இவ்விடைவெளி 4௦ பாகைக்கு மேற்படின், அங்கு சுக்கிரனின் காரகங்கள் பாதிக்கப்படும். இது மிக நெருக்கமாக அமைந்தாலும் சுக்கிரனின் காரகமான இல்லறம் பாதிக்கப்படும். இந்த இரு நிலைகளிலும் சுக்கிரன் பாதிக்கப்படும் அதே வேளையில் சூரியனின் காரகங்கள் தீவிரமடையும் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்பமே இல்லாத ஒருவர் தொழிலில் சிறப்பாக பொருளீட்டுவது யாருமே இல்லாத ஊரில் யாருக்காக டீ ஆற்றுகிறார் என்ற நிலையை தரும்.
எனவே சூரிய –சுக்கிர இடைவெளி சரியான அளவில் அமைந்திருக்க வேண்டியது அவசியம். இந்த சூரிய சுக்கிர இடைவெளி அளவு, தற்போதைய நவீன பாகை முறை ஜோதிடத்தில் ஒருவரது திருமண வாழ்வை எடை போடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை ஆராய்வதே இன்றைய பதிவின் நோக்கம்.
முதலாவதாக ஒரு ஜாதகம்.
ஜாதகத்திற்கு உரியவர் 1989 ல் பிறந்த ஒரு ஆண். இவர் ஜாதகத்தில் சூரியனுக்கும் சுக்கிரனுக்குமான இடைவெளி அதிக பட்ச இடைவெளியில் 46 பாகைக்குமேல் உள்ளது. இவருக்கு திருமணம் பற்றிய எண்ணமே மிக குறைவாக உள்ளது. இவரை வீட்டோர் பெண் பார்க்க அழைத்துச் செல்லுமிடத்தில் யாருக்கோ திருமண ஏற்பாடு நடப்பது போன்று நடந்துகொள்வதாக வீட்டோர் கூறுகிறார்கள். சூரியன் சுக்கிரன் இடை வெளி 4௦ பாகைகளுக்கு மிகுந்ததால்தான். இது போன்ற மனோ நிலை ஒரு ஜாதகருக்கு ஏற்படும். இவ்வமைப்பில் எந்த கிரக திசா-புக்தி நடந்தாலும் இவர்களின் மனோபாவம் பெரிதாக மாறிவிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அதிக பட்ச சூரிய சுக்கிர இடைவெளி அமைபவர்களுக்கு இடது கை பழக்கமும், தன்பால் ஈர்ப்பும் (Homo sex), ஒரு காதில் கடுக்கண் போடுவது போன்ற வித்தியாசமான தோற்றத்தை ஏற்படுத்திக்கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களுக்கு விருப்பமின்றி திருமணம் செய்து வைத்தால் மண முறிவு ஏற்படும். மேற்கண்ட ஜாதகர் ஒரு காதில் கடுக்கண் போட்டுள்ளார். சுய தொழில் செய்யும் 32 வயதாகும் ஜாதகருக்கு இதுவரை திருமணம் நாட்டம் வரவில்லை. அதனால் திருமணமும் நடக்கவில்லை.
கீழே இரண்டாவதாக ஒரு பெண்ணின் ஜாதகம்.
இந்த ஜாதகை 1985 ல் பிறந்தவர. 36 வயதாகும் ஜாதகிக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. தன, குடும்ப காரகரான விரையாதிபதி குரு லக்னத்தில் நீசமானதால், குடும்ப வறுமை இவரை வாட்டியுள்ளது. இவர் வேலை செய்வதில் மிகுந்த விருப்பம் உடையவராக இருக்கிறார். இவரது ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் இடைவெளி அதிக பட்ச இடைவெளியான 46 பாகையில் இருப்பதை கவனியுங்கள். இவ்வமைப்பு இயல்பிலேயே ஒருவருக்கு இல்லறத்தில் நாட்டக்குறைவை அல்லது அதை நோக்கி செல்வதை தடை செய்யும் வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்தும். இந்த ஜாதகி தந்தையின் வறுமையே தான் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமைக்கு காரணம் என்கிறார். சிரம காலத்திலும் தன்னை நாடி வந்த காதல் மற்றும் திருமண வாய்ப்புகளை புரந்தள்ளி உள்ளார். தற்போது தந்தை காணாமல்போய் விட்டார். சூரியன் இந்த ஜாதகத்தில் 12 ல் மறைந்து லக்னத்திற்கு அஷ்டமாதிபதியாகவும் வருகிறார். இதனால் சூரியன் தனது காரகதுவ அடிப்படையில் ஜாதகியின் வாழ்வை பாதித்துள்ளது. தனது தந்தை உயிரோடு இருந்தால் நிச்சயம் தங்களை தொடர்புகொள்ளாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்கிறார். 36 வயதில் தற்போதுதான் தனக்கு திருமண நாட்டம் வந்துள்ளது என்கிறார். இதிலிருந்து அறிய வருவது, தோஷத்தை ஏற்படுத்தும் சூரியனின் அம்சமான தந்தை, ஜாதகியை விட்டு விலகியதால்தான் ஜாதகிக்கு திருமண எண்ணமே ஏற்பட்டுள்ளது. நீச குரு தனது மூன்றாவது சுற்றை தற்போது கோட்சாரத்தில் நிறைவு செய்வதும் மற்றொரு காரணம். சூரியனிலிருந்து அதிக பாகை இடை வெளியில், லக்னத்திற்கு 2 ல், பாதகாதிபதியோடு செவ்வாயோடு இணைந்து நிற்கும் சுக்கிரன், பொருளாதார அடிப்படையில் குடும்ப வாழ்வை பாதிக்கிறார். காரக கிரகங்கள் பகையாகவும், பாதிப்பான நிலையில் இருப்பதாலும் ஜாதகியின் நிலை பரிதாபத்திற்கு உரியதாக உள்ளது..
கீழே மூன்றாவதாக மற்றொரு ஜாதகம்.
இந்த ஜாதகர் 1987 ல் பிறந்த ஒரு ஆண். 34 வயதான இவருக்கு இதுவரை திருமணமாகவில்லை. ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் இடைவெளியானது அதிக பட்ச இடைவெளியான 46 பாகை என்பதை கவனியுங்கள். இதனால் இவருக்கு இயல்பாகவே இல்லற நாட்டம் குறைவு. இவருக்கு திருமண அமைப்பை பற்றி ஜாதகம் பார்த்தபோது ஜாதகரின் சார்பாக அவரது நண்பர்தான் பேசினார். ஜாதகர் யாருக்கோ திருமண வாழ்வு பற்றி கேட்கிறார்கள் என்ற ரீதியில் தனது திருமண அமைப்பை பற்றி ஜோதிடரிடம் பேசக்கூட முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவதாக மற்றொரு ஜாதகம் கீழே.
இந்த ஜாதகர் 1988 ல் பிறந்த ஒரு ஆண். சூரியன் சுக்கிர இடை வெளி 4௦ பாகையாக உள்ளது. ஆனால் இதில் ஒரு சிறப்பு சூரியனும் சுக்கிரனும் பரிவர்த்தனையாகியுள்ளனர். சூரியன் கால புருஷனுக்கு 7 ஆமிடத்தில் நீசம் பெற்ற நிலையில் பரிவர்தனையாகியுள்ளது. பரிவர்தனைக்குப்பிறகு சுக்கிரன் ஆட்சிக்கு வருவதால் ஜாதகர் மிக நேர்த்தியான தோற்றம் கொண்டவர். குடும்ப காரகன் குரு 8 ல் வக்கிரம் பெற்று 2 ஆமிடத்தை பார்ப்பதால் நல்ல வேலையில் சிறப்பான சம்பாத்தியத்திலும் இருப்பவர். பேச்சு சாதுர்யம் மிக்கவரும் கூட. இவருக்கும் திருமண ஆசை இல்லை. ஆனால் குறுக்கு வழியில் காம சுகத்தை திட்டமிட்டு அனுபவிப்பவர். காரணம், கால புருஷனுக்கு 7 ல் 11 ஆமதிபதி நீசம் பெற்றதாலும், பரிவர்தனைக்குப்பிறகு சுக்கிரன் ஆட்சிக்கு வருவதாலும்தான். 32 வயதை கடந்த ஜாதகர் முறையான திருமண வாழ்வு தனக்குத் தேவையில்லை என்கிறார்.
இப்பதிவில் நாம் அலசிய ஜாதக அமைப்பினருக்கான தீர்வுகள் என்ன என்பதை அடுத்த பதிவில் காண்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
அன்பன்,
பழனியப்பன்,
கைபேசி: 8300124501