கிரகங்களே மனிதர்களை இயக்குகின்றன. மனிதர்களுக்கிடையேயான நட்பு, பகை, காதல், நகைச்சுவை, பிடிவாதம் ஆகிய அனைத்து குணங்களுக்கும் காரணம் கிரகங்களே. எப்படி அவை வெளிப்படுகின்றன என்பதை தசா-புக்திகளும் கோட்சாரமும் தீர்மானிக்கிறது. இவற்றிக்கு என்ன காரணம் என்பதைத்தான் நாம் கர்மா என்று கூறுகிறோம். ஆறறிவுள்ளவன் மனிதன் மட்டுமே இதை ஓரளவு உணர்ந்தவனாகிறான். இதனால் கர்மாவை மாற்றி அமைக்க என்ன வழி என்று சிந்திக்கத் துவங்குகிறான். அப்போதுதான் அவனது கர்மாவிற்கும் ஆவனது சுய முயற்சிகளுக்கும் இடையே ஒரு Tug of war நிகழ்கிறது. ஒரு கதையை கவனிப்போம் ஒருவன் மாடு மேய்த்துத்தான் தனது கர்மாவை அனுபவிக்க வேண்டும் என்ற நிலை வரும்போது ஒரு முனிவர் வீட்டிலுள்ள அவனது மாடுகளை விற்றுவிடும்படி கூறுகிறார். மாடுகளை விற்றுவிட்ட பிறகு பணத்துடன் வீடு திரும்பும் அவன் அடுத்த நாள் இவனது கர்மாப்படியான வேலையான மாடுகளை மேய்க்க படைத்தவன் மீண்டும் அவனது வீட்டில் மாடுகளை தோன்றச் செய்கிறான். ஆனால் அவன் அன்றும் அந்த மாடுகளையும் சந்தைக்கு ஓட்டிச் சென்று விற்றுவிடுகிறான். இப்போது அவன் மாடு மேய்க்க வேண்டியதில்லை. வேறு தொழில் செய்யவும் அவனிடம் தற்போது பணம் உள்ளது. ஆனால் கர்மா மாடு மேய்க்க வைக்கிறது. இச்சூழலில் படைத்தவன் தடுமாறுகிறான் என்று எடுத்துக்கொள்ளலாமா? என்றொரு கேள்வி எழும். நமது சுய முயற்சிகளால் நமது கர்மாவை ஓரளவு மட்டும் மாற்றி அமைக்க வாய்ப்பு உண்டு என்பது என்னவோ உண்மையாகவே தோன்றுகிறது. இதற்காக பரிகாரங்கள் என்றொரு கோஷ்டி தயாராக உள்ளது. ஆனால் நமது விதியை மாற்றி அமைக்க தரப்படும் அறிவுரைகளும், ஆலோசனைகளுமே பரிகாரங்கள். ஆனால் செயல்படுவது நமக்கு நாமாகத்தான் இருக்க வேண்டும். இதைத்தான் வள்ளுவர்
“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்” என்கிறார்.
முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார் என்பது ஆன்றோர் வாக்கு. இதை ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வோம்.
மேற்கண்ட ஜாதகருக்கு சுக்கிர தசை நடப்பில் உள்ளது. மோட்ச தந்துவ ராசியான கடகத்தில் மோட்ச காரகர் ராகுவுடன் இணைந்த ராசியாதிபதி சந்திரன் ஆட்சி பலத்துடன் மகா சக்தி யோகத்தில் அமைந்துள்ளார். ராகுவுடன் இணைந்த சந்திரன் தியாக வாழ்வு வாழ வைக்கும். இவர்களை இல்லற சாமியார்கள் எனலாம். தனக்காக வாழாமல் பிறருக்காக வாழும் நிலையை ஏற்படுத்தும். (உதாரணமாக மகாத்மா காந்தி ஜாதகம்). ஆனால் ராகு இங்கு சந்திரனை கடந்துவிட்டார். சந்திரன் இங்கு இல்லற ஆசைகளுக்குரிய புதனின் ஆயில்யத்தில் ஜாதகத்திலேயே அதிக பாகை பெற்று ஆத்ம காரகராக அமைவது நிலைமையை மாற்றக்கூடிய அமைப்பாகும். மேஷ லக்னத்தில் நிற்கும் மோட்ச பாவம் 12 ன் அதிபதி குரு, லக்னாதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனை பெற்று திக்பலத்தில் நிற்கிறார். இதனால் இவருக்கு இறை சிந்தனையும் மோட்சத்தை நோக்கிய சிந்தனைகளும் அதிகம் என்றாலும் பரிவர்த்தனைக்குப் பிறகு லக்னத்தில் ஆட்சி பெறுவது பிடிவாத காரகர் செவ்வாய் என்பதால் தனது வாழ்க்கை நிலையை ஜாதகரால் மாற்றி அமைக்க முடியும். இவர் ஒரு பெண். ராசிக்கு 7 ல் நின்றாலும் ராசிக்கு 8 ல் நிற்கும் சூரியனின் உத்திராடத்தில் நிற்கும் சுக்கிர தசையில், 1, 8 பாவக தொடர்பு பெற்று லக்னத்தில் நீசம் பெற்று அமர்ந்த சனி புக்தியில் ஜாதகி துறவியாகி அவர் சார்ந்த மட அமைப்புக்குள் சென்றார். கவனிக்க, தசாநாதர் சுக்கிரன் இல்லற இன்பங்களுக்கு அதிபதியாவார். சுக்கிரனை நோக்கி கேது வருவதால் அவரது இல்லற ஆசை மட்டுப்படுத்தப்படும். ஆனால் துறவியான பிறகு மோட்ச ஸ்தானாதிபதி செவ்வாய் பரிவர்த்தனை பெற்று லக்னத்திற்கு வருவதால் தனது துறவு நிலையை மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய அமைப்பும் ஜாதகத்தில் உள்ளது. இப்படியான சூழலில் துறவியான இவரது வாழ்வு எப்படி இருக்கும் என்று என் போன்ற ஆய்வு ஜோதிடருக்கு ஒரு ஆர்வம் எழுகிறது. அப்படி எழுந்த ஆர்வத்தில் துறவியாக ஓரிரு ஆண்டுகள் சென்றபின் தற்போது ஜாதகியின் நிலை என்ன என்று அறியக் கிளம்பிய போது கிடைத்த தகவல்களையும் இவரது துறவு வாழ்வின் ரகசியங்களையும் அதற்கான வர்க்கச் சக்கரமான விம்சாம்சத்தின் மூலம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
விம்சாம்சத்தில் மோட்ச ராசிகளுள் முதன்மையான கடகமே லக்னமாக அமைந்துள்ளது. லக்னாதிபதி சந்திரன் நீசமாகிவிட்டார். விருச்சிகம் கால புருசனுக்கு 8 ஆவது பாவகம் என்பது குறிப்பிடத்தக்கது. 8, 12 இடங்கள் சிறைத்தண்டனை, அடைபடுதலை குறித்தாலும் ஆன்மீகத்தை பொறுத்தவரை இவை சிறப்புக்குரிய பாவகங்களாகும். மறைவு ஸ்தானமான 8 என்பது கண்கொண்டு பார்க்க இயலாத மாய சக்திகளை ஆய்வு செய்வதற்கு அருமையான பாவகமாகும். ஜோதிடம், ஆன்மீகம், மாந்தரீகம் ஆகியவை இவற்றுள் சில. 12 ஆமிடம் என்பது சிறை போன்று தன்னை குறுக்கிக்கொண்டு தவமியற்றி மோட்சமடைவதை குறிக்கும் பாவகமாகும். கவனிக்க கால புருஷனுக்கு மோட்ச பாவகமான 12 ஆமிடம் மீனத்தில் அதிக கிரகங்கள் நிற்பதால் இவருக்கு மோட்ச சிந்தனைகள் இயல்பாகவே அதிகம் எனலாம். லக்னாதிபதி சந்திரனும் கால புருஷனுக்கு 8 ல் நீசம் பெற்றுவிட்டதால் இவர் சிறையிலடைபட்டது போல ஒடுங்கி வாழ வேண்டிய சூழலே உள்ளது. இதனால் இவருக்கு ஆன்மீகமே சிறப்பு, துறவு வாழ்க்கையே ஏற்றது என்று முடிவுக்கு வரலாம். ஆனால் இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. அது கால புருஷ மோட்ச பாவகம் மீனத்தின் அதிபதியும் குடும்ப காரகருமான குரு, குடும்ப ஸ்தானாதிபதி சூரியனுடன் பரிவர்த்தனையுயாகியுள்ள அமைப்புத்தான் அது. ராசிக் சக்கரத்திலேயே ஜாதகி தனது துறவு வாழ்வை மாற்றி அமைக்கக்கூடிய வாய்ப்பு இருந்ததை பார்த்தோம். விம்சாம்சம் அதை இன்னும் நுட்பமாக விவரிக்கிறது.
இந்த ஜாதகி சுக்கிர தசையில் சனி புக்தியின் துவக்கத்தில்தான் துறவு அமைப்புக்குள் சென்றார். ஜாதகத்தில் அமைந்த பரிவர்தனையானது இடம் பெயர்ந்த பிறகே செயல்படும். அதுவரை பரிவர்த்தனை கிரகங்கள் தனக்கான வாய்ப்புக்கு காத்திருக்கும் என அறிக. 2 ஆமிடம் குடும்பம், 9 ஆமிடம் இறை தேடல், 12 ஆமிடம் மோட்சம் என்பதை நாமறிவோம். இங்கு குடும்ப ஸ்தானம் இரண்டாமிடத்தைவிட்டு இறை தேடலுக்கான 9 ஆமிடமும், கால புருஷ 12 ஆமிடமுமான மீனத்திற்கு குரு பரிவர்த்தனை ஆவதால், மீனச் சூரியன் சிம்மத்திற்கு திரும்புகிறார். இதனால் 2 ஆமிடம் வலுவடைகிறது. இப்போது நீசமான சந்திரனுக்கு 10 ல் சூரியன் திக்பலம் பெறுவதால் சந்திரனுக்கு நீச பங்கம் ஏற்படுகிறது. லக்னாதிபதி வலுவடைவதால் இங்கு காட்சிகள் மாறுகின்றன. சுக்கிர தசையில் சனி புக்தியின் துவக்கத்தில் துறவறம் ஏற்ற ஜாதகி, மிகச் சரியாக சனி புக்தியின் கடைசி அந்தரமான பரிவர்த்தனை குரு அந்தரத்தில் தனது துறவரத்தைத் துறந்து தனது குடும்பத்திற்கே மீண்டும் திரும்புகிறார். இது ஏறக்குறைய முதலையின் வாய்க்குள் சென்று மீண்டும் உயிருடன் திரும்பும் பிராணியின் நிலைதான். ஆனால் ஜாதக அமைப்பு ஜாதகியை சாதிக்க வைத்தது. 2000 ஆம் ஆண்டில் பிறந்த சிறு பெண்தான் இந்த ஜாதகி. சுயமாக முடிவெடுக்கும் வாலிப வயதில் இருந்தாலும், மனதளவில் பக்குவப்படாதவர்களை சன்னியாசிகளாக ஏற்பது எந்த மதத்திற்கும் நல்லதல்ல. துறவியான ஜாதகி, அது தான் மனமுவந்து ஏற்றதல்ல, தனக்கு திணிக்கப்பட்டது என்பதை விரைவிலேயே உணர்ந்துவிட்டார். ஆனால் துறவறம் தாம் விரும்பிய வாழ்க்கை அல்ல என்பதை ஜாதகி உணரும் முன் காலம் கடந்துவிட்டிருந்தது. திமிங்கலத்தின் வயிற்ருக்குள் சென்றுவிட்ட மீனின் நிலையில் தனது வாழ்வை காப்பாற்றிக்கொள்ள ஜாதகி தனது உயிரை பணயம் வைத்தார். பல தற்கொலை முயற்சிகளுக்குப் பிறகு, ஜாதகி உயிரை விட்டாலும் விடுவாரே தவிர சந்நியாசியாக இருக்க வாய்ப்பே இல்லை என்பதை ஜாதகி துறவறம் ஏற்ற மத அமைப்பு புரிந்துகொண்டது. ஜாதகி தற்கொலை செய்துகொண்டால் அது தங்களுக்கு அவப்பெயரை தருவதோடு, அரசு நடவடிக்கையும் பாயும் என்ற எண்ணத்தில் ஜாதகி துறவறத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இல்லறம் மட்டுமல்ல, துறவறமும் திணிக்கப்படக் கூடாது. விருப்பமில்லா வாழ்வு எந்த இடத்திலும் சிறக்காது.
பின் குறிப்பு:
இந்த ஜாதகி துறவரத்திற்குள் சென்ற துவக்கத்தில், ஜாதகியிம் இவரது தாயும் எதிர்கொண்ட போராட்டமான மனநிலையை விவரித்து 2021 ல் நான் எழுதிய பதிவை பின்வரும் இணைப்பை சொடுக்கி வாசகர்கள் வாசிக்கலாம்.
எவனோ ஒருவன் வாசிக்கிறான்! – ஜோதிட நுணுக்கங்கள் (jothidanunukkangal.com)
விரைவில் மீண்டுமொரு பதிவில் சந்திப்போம்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சர்யா பழனியப்பன்.
கைபேசி:8300124501