ஜோதிடத்தில் “ஒரு பாவாதிபதி வலுவிழந்து அந்த பாவத்திற்குரிய காரக கிரகம் வலுப்பெற்று புதன் தொடர்பானால் அந்த ஜாதகர் பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்றொரு குறிப்பு நீண்ட நாட்களாக எனக்கு புரிபடாமல் இருந்தது. சமீபத்தில் ஒரு ஜாதகத்தை பார்த்தபோதுதான் இக்கருத்தின் பொருள் விளங்கியது. மேற்சொன்னது ஒரு அருமையான ஜோதிடக் கருத்து. நமது புராணங்களில் பூப்போல தூவியுள்ள இத்தகைய ஜோதிடக் கருத்துக்களை புராணப் பின்னணியில் நாம்தான் கவனமாக ஆராய்ந்து தெளிய வேண்டியுள்ளது. மேற்சொன்ன கருத்து மஹாபாரதத்தில் கிருஷ்ணாவதாரத்தில் வருகிறது. ஜோதிட ஆய்வாளர்களுக்கும் இத்தகைய விளக்கப் பதிவுகள் உதவும் என்ற வகையில் இன்றய பதிவு வருகிறது.
ஜோதிடத்தில் குருவும் புதனும் ஜீவ ராசி அதிபதிகளாகும். இவை புதியன படைத்தல் என்ற வகையில் இதர கிரகங்களைவிட மேம்பட்டு நிற்கின்றன. இவ்விரு கிரகங்களும் உருவாக்கித் தரும் விதிகளின் படியே இதர கிரகங்கள் செயல்பட வேண்டிய கட்டாயம் உண்டு. இப்படி இவ்விரு கிரகங்களும் ஒன்றை உருவாக்கவோ அல்லது அழிக்கவோ ஒரு விதியை உருவாக்குகின்றன அல்லது ஒரு படைப்பை உருவாக்குகின்றன என்றால் அந்தப்படைப்பிற்கு ஒரு காரண கர்மா இருக்க வேண்டும். எனவே கர்ம காரகர் சனி இவர்கள் குறிப்பிட்ட படைப்பை உருவாக்க குருவிற்கும் புதனுக்கும் உத்தரவிடும் மூல காரணியாக திகழ்கிறார். புதன் மஹா விஷ்ணுவின் அம்சம். தீயோரை அழிக்கவும் நல்லோரை காக்கவும் அவதாரங்களை எடுப்பவர் மஹாவிஷ்ணு. ஜோதிடத்தில் புதனும் குருவும் எந்த கிரக அம்சத்தில் எந்த ராசி, லக்னத்தில் மஹா விஷ்ணு பிறக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றனர். கிருஷ்ணர் மதுராவில் தேவகிக்கு மகனாகப் பிறந்து கோகுலத்தில் யசோதையிடம் வளர்ந்தவர். புதனின் அதிதேவதை மஹா விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர் பிறப்பிலேயே ஜாதகப்படி ஒரு தாய் வயிற்றில் பிறந்து, மாற்றுத் தாயிடம் வளர்க்கப்பட வேண்டிய ஜாதக அமைப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புதன் ஒன்றுக்கு பதிலாக, ஒன்றிக்கு மாற்றான மற்றொன்றை குறிக்கும் காரக கிரகமாகும்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஜாதகத்தில் ரிஷப லக்னத்திற்கு தாயாரை குறிப்பிடும் 4 ஆமிடத்தில் ஆட்சி சூரியன் 8 ஆமதிபதி குருவுடன் இணைவதால் 4 ஆமதிபதியும், 4 ஆவது பாவகமும் பாதிக்கப்படுகிறது. ஆனால் தாயாரை குறிக்கும் காரக கிரகம் சந்திரன் உச்சம் பெற்றதால் மாற்றுத் தாயிடம் வளரும் சூழல் ஏற்படுகிறது. மாற்றிடத்தில் வளரும் அமைப்பை, 4 ஆமதிபதி சூரியனின் உத்திர நட்சத்திரத்தில், சந்திரனுக்கு திரிகோணத்தில் உச்சம் பெற்ற புதன் குறிக்கிறார். தாய் மாமனை குறிக்கும் புதன் லக்ன மாரகாதிபதி சந்திரனுக்கு திரிகோணத்தில் அமைந்ததால் தாய் மாமனான கம்சனே கிருஷ்ணனை அழிக்க எண்ணுகிறார். நாம் துவக்கத்தில் பார்த்த விதி இங்கு செயல்படுகிறது. புராண அடிப்படையில் குறிப்பிடப்பட்ட இவ்விதி மனித வாழ்வில் உண்மையில் செயல்படுகிறதா? என ஒரு உதாரண ஜாதகம் மூலம் ஆராய்வோம்.
2௦12 ல் பிறந்த சிறுமியின் ஜாதகம் இது. ஜாதகத்தில் 4 ஆமதிபதி புதன் மீனத்தில் அஷ்டமாதிபதி சனியின் உத்திரட்டாதி-3 ல் நீசமாகிவிட்டார். புதனின் சாரநாதர் சனி உச்சமடைந்து வக்கிரம் பெற்று பலகீனமாகிவிட்டார். 4 ஆமிடத்திற்கு இருபுறமும் பாவிகள் அமைந்து பாவ கர்த்தாரி யோகமும் செயல்படுகிறது. இத்தகைய அமைப்புகளால் 4 ஆமதிபதியும், 4 ஆவது பாவகமும் வலுவிழந்துவிட்டன. ஜாதகத்தில் தந்தையை குறிக்கும் சூரியனும் தாயை குறிக்கும் சந்திரனும் சஷ்டாஷ்டகத்தில் (6/8) இருப்பதை கவனியுங்கள். இதனால் பெற்றோர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜாதகியின் 4 ஆவது வயதில் பிரிந்துவிட்டனர். ஜாதகத்தில் 4 ஆமதிபதி புதன் நீசம் பெற்றாலும் தனது உச்ச வீடான 4 ஆமிடத்தை நேர் பார்வை பார்க்கிறார். இதனால் என்ன பாதிப்பு வந்தாலும் ஜாதகிக்கு தாய் போன்றதொரு உறவை புதன் தனது தசா-புக்தி காலங்களில் அமைத்துத் தருவார் எனலாம். சிறுமி தந்தையின் பொறுப்பில் இருக்கிறாள். ஜாதகத்தில் சந்திரன் ராசியில் ஆட்சி பெற்று லக்னாதிபதி புதனின் ஆயில்யத்தில் நிற்கிறார். இதனால் ஜாதகியின் 7 வயது வரை புதன் தசைதான் என்பதால் தாயை பிரிந்தாலும் ரிஷபத்தில் சந்திரனின் சாரம் ரோகிணியில் அமைந்த கேது வடிவில் மாற்றுத்தாயாக சிறுமியின் தந்தை வழிப் பாட்டி அமைந்தார். புதன் தசையின் சனி புக்தியில் பாட்டியின் மரணம் சிறுமியை உலுக்கியது என்றே சொல்லலாம். இதனிடையே சிறுமியின் தந்தை இரண்டாம் தாரமாக மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். ஜாதகிக்கு தாய் மற்றும் பாட்டிக்குப் பிறகு, தாய் போல கவனித்துக்கொள்ள ஒரு சித்தி கிடைத்தார். சந்திரன் புதனுக்கு நட்பு என்பதாலும் லக்னாதிபதியின் சாரம் பெற்றதாலும் சிறுமியை சித்தி மகளாக கவனித்துக்கொண்டாலும், புதன் சந்திரனுக்கு பகை என்பதால் சித்தியின் பிரியத்தை தாய் மற்றும் பாட்டியின் பாசத்திற்கு மாற்றாக ஏற்றுக்கொள்ள சிறுமி மறுக்கிறார். ஆனால் சிறுமிக்கு தாய்ப்பாசம் சித்தி வடிவில் கிடைத்துக்கொண்டுதான் உள்ளது.
சிறுமிக்கு தாய் பாசம் போய், தாய் போல பாட்டி பாசம் கிடைத்தது. அதன் பிறகு சித்தி வடிவில் மாற்றுத்தாயின் பாசம் கிடைக்கிறது. காரணம் தாயை குறிக்கும் 4 ஆமிடமும் அதன் அதிபதியும் வலுவிழந்துவிட்டதால் தாய் பாசத்தை முழுமையாக அனுபவிக்க கொடுப்பினையில்லை. ஆனால் தாயை குறிக்கும் காரக கிரகம் சந்திரன் ஆட்சி பெற்று புதன் சாரத்தில் அமைந்ததால் மாற்றுத்தாயின் பாசம் கிடைக்கிறது. சந்திரனுக்கு புதன் தொடர்பு தாயை போல மற்றொன்று என்பதை குறிக்கிறது. இந்தச் சிறுமி உண்மையில் ஸ்ரீகிருஷ்ணரால் சீர்வதிக்கப்பட்டவள்தான். புதனுக்கு சனி தொடர்பு இல்லாமல் மாற்றுத்தாய் யோகம் ஏற்படுவது சாத்தியமில்லை. இங்கு புதன் மீனத்தில் சனி சாரத்தில் அமைந்தது மாற்றுத்தாய் யோகம் சிறுமிக்கு கிடைப்பதை உறுதி செய்கிறது. சந்திரனுக்கு புதன் தொடர்பு கிடைத்தது அதை அனுபவிக்க வைக்கிறது. லக்னாதிபதியுடன் தொடர்பாகும் கிரகங்கள் வாழ்நாள் முழுதும் ஜாதகரை தொடர்ந்து வரும் என்பதற்கேற்ப சந்திரனுக்கு லக்னாதிபதி தொடர்பு ஏற்பட்டது சிறுமிக்கு கிடைக்கும் மாற்றுத்தாயின் பாசம் நீடித்த ஒன்று என்பதை குறிப்பிடுகிறது.
அருமையான ஜோதிட விதியை எளிமையாக புராணங்களில் கூறியுள்ளது எவ்வளவு உண்மை என்று ஆழ்ந்து ஆராயும்போதுதான் புரிகிறது. பிரபஞ்ச இயக்கத்தை நாம் எளிமையாக புரிந்துகொள்ளவே நமது ஞானிகள் புராணங்களை இயற்றியுள்ளனர். இடைச்செருகள்களாக சில தவறான கருத்துக்களை இடைக்காலத்தில் சிலர் புகுத்தியிருந்தாலும் நமது ஞானிகளின் உயர்ந்த நோக்கங்களை புறந்தள்ள முடியாது.
மீண்டும் மற்றொரு பதிவில் விரைவில் சந்திப்போம்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்,
கைபேசி: 8300124501.