வாழ்வில் அனைத்து பாக்கியங்களும் அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை. அமைவதை தக்க வைத்துக்கொள்ளவும் நல்ல ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். முன்னோர் சொத்து என்பது முன்னோர்களின் உடல், பொருள், ஆன்மா குடியிருக்கும் பதிவுகளாகும். அவற்றை எக்காரணம் கொண்டும் அவசியமற்ற வகையில் இழக்கக் கூடாது. முன்னோர் சொத்துக்களை முறையாக பேணுவதன் மூலமும், அதில் இருக்கும் தோஷங்களை நீக்கி அவற்றை மேம்படுத்துவதன் மூலமும் முன்னோர்கள் ஆசி நமக்கு தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்துகொள்ளலாம். உடன் பிறப்புகளுடன் முன்னோர் சொத்தை முறையாக பகிர்ந்துகொள்வதன் மூலம் முன்னோர்கள் மனம் மகிழ்வர். முன்னோர் சொத்தை பகிர்வதில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் முறையன்றி நடந்துகொள்வோர் அதை அனுபவிக்க இயலாமல் செய்வதற்கும் முன்னோர்களின் சாபம் காரணமாக இருக்கும். முன்னோர்கள் மீது மதிப்பில்லாமல் பகட்டுக்காக அவர்களை படையலிட்டு வழிபடுவதாலும், குல தெய்வத்திற்கு ஆராதனை செய்வதாலும் புண்ணியமில்லை. முன்னோர்களை ஆராதிப்பது மற்றும் குல தெய்வத்தை வழிபடுவது என்பது அவர்கள் மீது நாம் காட்டும் நன்றி உணர்ச்சியின் வெளிப்பாடே. ஆனால் தற்போது முன்னோர் வழிபாடு என்பது பெரும்பாலும் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. வருடத்தின் குறிப்பிட்ட நாளன்று அவர்களுக்கு பிடிக்கும் உணவை படையலிட்டு வழிபட்டுவிட்டு வாழ்க்கையில் அவர்களது எண்ணங்களுக்கு எதிராக நடப்பதால் முன்னோர் ஆசி கிடைக்காது. வறுமையில் வாழும் ஒரு ஏழை தான் இந்த பூமியில் இருக்க காரணமாக உள்ள தனது மூதாதையர்களை நன்றியோடு நினைவு கூர்வதால் நமது முன்னோர்களின் ஆசிகளால் அவர் வாழ்வில் உயர்வது உறுதி. பூர்வீக சொத்தை தனது வாழ்வின் வளமைக்காக இழந்தால் அவர்கள் ஆசி ஜாதகருக்கு கிடைக்காது. வறுமைக்காக இழக்கலாம் ஆனால் வளமைக்காக இழக்கக் கூடாது. முன்னோர்கள் முறையற்ற வாழ்வு வாழ்ந்து கடும் பாதகங்களை செய்திருந்தால் ஒருவர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியேறுவதாலும் பூர்வீக சொத்தை நிராகரிப்பதாலும் பூர்வீக தோஷங்களில் இருந்து பெருமளவு தன்னை காத்துக்கொள்ள இயலும். இத்தகையோர் பூர்வீகத்தை விட்டு வெளியேறிவிட்டாலும் பூர்வீக சொத்தை அனுபவித்தால் பூர்வீக தோஷம் நிச்சயம் பாதிக்கும்.

முன்னோர்களை விட தங்களது சுய சம்பாத்தியத்தின் மூலமான உயர்வு தங்களுக்கு முக்கியம் என்று வெளிநாடுகளுக்கு சென்று குடியேறுவோர் தற்போது அதிகம். இதனால் பராமரிக்க இயலாத தங்கள் முன்னோர் சொத்துக்களை விற்றுவிடுகின்றனர். இதை தவறு என்று கூற இயலாது என்றாலும் பூர்வீகத்தின் மீதான தங்கள் பிடியை மட்டுமல்ல முன்னோர் ஆசியையும் அவர்கள் இழக்கின்றனர் என்பது மறுக்க இயலாத உண்மை. ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் 5 ஆவது பாவமும் அதன் அதிபதியும், சனியும் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு பூர்வீகம் நன்மை செய்யாது. சனி வக்கிரமாகவோ அல்லது பாதிக்கப்பட்டிருந்தாலோ முன்னோர்களே முறையற்ற வாழ்க்கை வாழ்ந்திருப்பர். அடித்தட்டு மக்களை உறிஞ்சி முன்னேறியவர்களாக முன்னோர் இருக்கக்கூடும். இதனால் ஒரு ஜாதகரது வம்சம் ஒரு போதும் அந்த இடத்தில் தழைக்காது. வம்சா விருத்தியில் இத்தகைய தோஷங்கள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. பொருளாதாரத்தில் இவை பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. 5 மற்றும் 5 ஆமதிபதி பாதிக்கப்பட்டிருந்தால் ஜாதகரது பூர்வீக தவறுகளால் இந்த ஜென்மத்தில் அவர் பாதிப்படைவார். ஜாதகத்தில் செவ்வாய் பாதிக்கப்படிருந்தால் பாதிப்பின் காரணம் சகோதரம் மற்றும் சொத்து ஆக இருக்கும்.
தனது முன்னோர் கட்டிய வீடு மிகவும் பழுதாகிவிட்டது. அதை இடித்து புதிதாக கட்டலாமா? அல்லது தங்களது தோட்டத்து நிலத்தில் புதிதாக வீடு கட்டி குடியேறலாமா? என்று கேட்டவருக்காக பார்க்கப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் நீங்கள் கீழே காண்பது.

துலாம் உதயம். உதயத்தில் கேது அமைந்து மேஷத்தில் ராகுவுடன் இணைந்த குருவின் பார்வையை பெறுகிறார். இந்தப் பிரசன்னத்தில் கேள்வியின் தன்மையை உறுதி செய்துகொண்டு பதிலுக்கு செல்லலாம் என்பது இதர பிரசன்னங்களை விட ஜாமக்கோள் பிரசன்னத்திற்கு உள்ள தனிச் சிறப்பு. குறிப்பாக 10 ஆமிடம் கேள்வியை தெளிவு படுத்தும். உதயத்தில் அமைந்த ஜாம புதன் 12 ஆமிட உதயாதிபதி சுக்கிரனுடன் பரிவர்த்தனை ஆகிறார். ஒரு நிலையில் இருந்து மற்றோர் நிலைக்கு மாறும் ஜாதகரின் மன நிலையை இது குறிப்பிடுகிறது. ஜாமக்கோளில் உச்ச-நீச்ச கிரகங்கள் கேள்வியுடன் நேரடியாக தொடர்புகொண்டு கேள்வியை இயக்கிக்கொண்டிருக்கும். இங்கு ஜாமச் செவ்வாய் 4 ல் உச்சமாகி 10 ஆமிட சந்திரனோடு உள்வட்டத்தில் இணைந்துள்ளார். கடகாதிபதி சந்திரன் கால புருஷ 4 ஆமிடாதிபதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 4 ஆமிடமும் செவ்வாயும் வீட்டை, தோட்டத்தை குறிக்கும். உதயத்திற்கு 10 ல் ஆரூடமும் கவிப்பும் அமைந்து உள்வட்டத்தில் உதயாதிபதி சுக்கிரனும் அங்கேயே அமைகிறார். அங்கு வெளிவட்டத்தில் உதயத்திற்கு 4 ஆமதிபதி சனி உதயத்திற்கு 4 ல் நிற்கும் சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்று நிற்கிறார். ஜாம சுக்கிரன் நீசம் பெற்று பரிவர்த்தனை மூலம் உதயத்திற்கு வந்து ஆட்சி பெற்று கேதுவுடன் இணைகிறார். இது சுக்கிரன் குறிப்பிடும் வளமைக்காக கேள்வியாளர் வீடு கட்டி இடம் மாற முயல்வதையும் அதே சுக்கிரன் 10 நிற்பதால் வளமைக்காக இடம் மாறினால் அதன் தாக்கம் தொழிலில் எதிரொலிக்கும் என்பதையும் குறிப்பிடுகிறது.

ஆரூடம் உதயத்திற்கு 10 ஆமிடமான கடகத்தில் புதனின் ஆயில்யத்தில் அமைகிறது. கவிப்பு சனியின் பூசத்தில் அமைந்துள்ளது. சனியும் 10 ஆமிடமும் ஜீவனத்தை குறிக்கும். இவர் ஒரு வியாபாரி இவரது வியாபார தொடர்புகள் அனைத்தும் பல தசாப்தங்களாக இவரது பூர்வீக இருப்பிடத்திலேயே நடந்து வந்துள்ளன. தற்போது வரை பூர்வீகத்திலேயே தொடர்ந்துகொண்டுள்ளது. தற்போது இருப்பிடத்தை மாற்றி வீடு கட்டினால் இவரது வியாபாரம் பாதிக்கும் என்பது இவரது பயமாக உள்ளது. 10 ஆமிட சனி 4 ஆமிட சந்திரனோடு பரிவர்த்தனை ஆவதே இதற்குக் காரணம். ஜாம சனி பரிவர்த்தனைக்கு முன் பூர்வீக பாவம் (5 ஆமிடம்) கும்பத்திற்கு 6 ல் கடகத்தில் அமைகிறார். பரிவர்த்தனைக்கு பிறகு 5 க்கு விரைய பாவம் மகரத்திற்கு வந்து அமைகிறார். இதனால் வசதியை முன்னிட்டு இடம் மாறினால் இவரது வியாபார தொடர்புகள் பாதிக்கும் என்ற இவரது எண்ணம் நியாயமானதே. துலாம் உதயமே வியாபாரத்தை குறிக்கும் உதயமாகும். அங்கு கேதுவுடன் இணைந்து நிற்கும் புதன் இவரது வியாபாரத் தொடர்புகளை கூறுகிறது.
புத்திர மற்றும் பூர்வ புண்ணியத்தை குறிக்கும் 5 ஆமிட சனி கும்பத்தில் தனது மூலத்திரிகோணத்தில் நின்றாலும் அவர் வக்கிரமடைந்து பின்னோக்கி 4 ஆமிடம் மகரத்திற்கு வருகிறார். இது இவரது பூர்வீகத்தின் குறைபாடுகளை குறிக்கிறது. இப்படி புத்திர மற்றும் பூர்வீக பாவகாதிபதி வலுவிழப்பது கேள்வியாளருக்கு சாதகமான அமைப்பல்ல. சனி கேள்வியாளரது முன்னோர்களின் வாழ்வியலை குறிக்கிறது. உள்வட்ட சனி வக்கிரமாவதால் பாதிப்பில் உள்ளது. இவரது முன்னோர்கள் அடித்தட்டு மக்களிடம் வியாபார பொருட்களை வாங்கி அதை வெளியூர் வாசிகளுக்கு நல்ல விலைக்கு விற்றுள்ளனர். அடித்தட்டு மக்கள் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதை இவ்வமைப்பு குறிப்பிடுகிறது என்றாலும் வாழ்க்கை போராட்டத்தில் இவற்றை பெரிய குற்றங்களாக கருத முடியாது என்பதால் இதன் பொருட்டு ஏற்படும் தோஷத்தின் தாக்கம் குறைவே. முன்னோர்களின் கர்மாவை அறிய முன்னோர்களை குறிப்பிடும் சனியின் பார்வை பெரும் இடங்களையும் 5 ஆம் பாவக தொடர்புகளையும் ஆராய வேண்டும். இங்கு 5 ஆமிட சனி தனது மூன்றாவது பார்வையாக உதயத்திற்கு 7 ஆமிடத்தில் ராகுவால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட குருவை பார்ப்பதும், ஜாம குரு 3 ல் ஆட்சியில் இருந்தாலும் அது மறைவு ஸ்தானம் என்பதால் கேள்வியாளருக்கு பூர்வீகத்தில் புத்திரம், குரு தொடர்புடைய ஒரு பாதிப்பு உள்ளதை குறிப்பிடுகிறது. அதாவது கேள்வியாளரது முன்னோர்கள் தங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்காக குரு தொடர்புடைய உயிர் காரகங்களுக்கு அதாவது குழந்தைகள், ஆசிரியர்கள், மதிப்புமிகு மனிதர்கள், வேதம் ஓதும் பிராமணர்கள் ஆகியோர் வகையில் ஏதேனும் பாதகங்களை செய்திருக்க வேண்டும் என்பதை பாதிக்கப்பட்ட குரு தெரிவிக்கிறார். இது கேள்வியாளருக்கு உயிர் காரகத்துவ வகையில் பாதிப்பைத் தரும். பொருட்காரக வகையில் பாதிக்காது. எனவே பூர்வீகத்தில் சனியின் நிலையையும் கருத்தில்கொண்டு பார்க்கையில் தோஷம் தெளிவாகிறது. எனவே பூர்வ புண்ணியத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும். குருவின் அம்சங்களுக்கு மதிப்பு செய்ய வேண்டும். குருவிற்கு சாந்திப் பரிகாரங்களும் செய்துகொண்டு பூர்வீகத்திலேயே தற்போதைய வீட்டை புதுப்பித்துக் கட்டி குடியேறலாம் அன்று கேள்வியாளருக்கு பதிலளிக்கப்பட்டது. இதனால் தோஷத்தை முழுமையாக போக்கிக்கொள்ள இயலாவிட்டாலும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.
கேள்வியாளர் பூர்வீகம் தொடர்பாக பிரசன்னம் சுட்டிக்காட்டியவற்றை ஒப்புக்கொண்டார். குறிப்பாக தங்களது வீட்டின் ஒரு பகுதியில் தனது சிறு வயதில் தனது பெற்றோர்கள் காலத்தில் ஒரு பெண் மருத்துவர் மூலம் ஒரு கருக்கலைப்பு மையம் வாடகைக்கு இயங்கியது என்று கூறினார்.
மீண்டும் விரைவில் மற்றுமொரு பதிவில் சந்திக்கிறேன்.
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501