ஜாதகத்தில் கிரகங்களின் செயல்பாடுகளை மதிப்பிட பல்வேறு யுக்திகளை நமது ஞானிகள் அருளிச் சென்றுள்ளார். அவற்றுள் ஒன்று யோகி-அவயோகி யுக்தியாகும். ஒரு ஜாதகத்தில் ஜாதகருக்கு உதவும் மனநிலையில் உள்ள கிரகத்தை யோகியும், ஜாதகரை தண்டிக்கும் மனநிலையில் உள்ள கிரகத்தை அவயோகியும் குறிக்கின்றனர். ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டென்பதுபோல யோகி ஜாதகரின் புண்ணியத்தை குறிப்பிட்டால் அவயோகி ஜாதகரின் பாவ கர்மாவை குறிக்கிறார். யோகி கிரகம் ஜாதகத்தில் எந்த நிலை பெற்றாலும் தனது காரக ஆதிபத்திய வகையில் ஜாதகரின் உயர்வுக்கு வழிவகுக்கும். யோகி தீமை தரும் நிலையில் இருந்தாலும் தனது தீமையை குறைத்துச்செய்து ஜாதகரை திருத்தி, அவர் வாழ்வில் உயர உதவி செய்யும். மாறாக அவயோகி கிரகம் நல்ல ஆதிபத்தியமும் காரகமும் பெற்றிருந்தாலும் கூட ஜாதகரை பாடாய் படுத்தி விடும். ஒன்றுக்கொன்று எதிராக செயல்படும் இக்கிரகங்கள் தங்களது காரக ஆதிபத்திய வகையில் செயல்படுவதோடு நில்லாமல் தங்களது சாரநாதர்களின் காரக ஆதிபத்திய வழியில் தங்கள் செயல்களை நடத்திக்கொள்கின்றன. உண்மையில் யோகி-அவயோகி கிரகங்களை விட அவர்களின் சார நாதர்களே ஒருவரின் உயர்வு-தாழ்வுக்கு காரணமாகிறார்கள். இதுபற்றி ஆராய்வதே இன்றைய பதிவு.
கீழே ஒரு ஆணின் ஜாதகம்.
ஜாதகத்தில் கடக லக்னாதிபதி சந்திரன் 4ல் திக்பலம் பெற்று 6, 9 ஆமதிபதி குரு சாரத்தில் சிறப்பாக அமைந்துள்ளார். 6 ஆமிடமான தனுசில் செவ்வாய் அமைந்துள்ளார். கன்னி ராசியில் வித்யா காரகர் புதன் உச்சமாகி, அரசு காரகர் சூரியனுடன் இணைந்து, போதனை காரகர் குரு தொடர்பு பெற்றுள்ளார். சூரியனின் உத்திரம்-4 ல் நிற்கும் புதன் தனது தசை துவங்கியதும் சுய புக்தியில் தனது காரகம், தான் நின்ற நட்சத்திர அடிப்படையில் ஜாதகருக்கு அரசுப்பணி வாய்ப்பை வழங்கினார். சூரியன் வேலை பாவகமான 6 ல், குரு வீட்டில் நிற்கும் 5, 1௦ ஆமதிபதி செவ்வாய் சாரம் சித்திரை-2 ல் நிற்பதால் அரசுப்பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. 1௦ ஆம் பாவகத்தை திக்பலம் பெற்ற சந்திரன் விசாகம்-3 ல் நின்று பார்ப்பது இதற்கு துணை செய்தது. கன்னியில் புதன், குரு தொடர்பு பள்ளி ஆசிரியரை குறிக்கும்.
ஜாதகருக்கு உச்சம் பெற்ற வாக்கு காரகர் புதன் தசை முடிந்து வாழ்வில் நிதர்சனங்களை உணர்த்தும் கேது தசை துவங்கிய பிறகு வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தினார். 2 ஆமிட கேது வருமானத்தை தடை செய்ய வேண்டும். வருமானம் சிறப்பானால் குடும்பத்தில் பாதிப்பை தருவார். 2 ஆமிட கேது அரசு அதிகார காரகர் சூரியன் வீட்டில் நிற்கிறார். இவருக்கு வழக்கு வகையில் வேலையில் பாதிப்பு ஏற்பட்டது. வழக்கு காரகர் கேதுவின் தசையில், வழக்கு பாவம் 6 ன் அதிபதி குருவின் விசாகம்-3 ல் நிற்கும் சந்திரனின் புக்தியில் வழக்கு ஏற்பட்டது. மேஷ சனி கேதுவின் அஸ்வினி-4 ல் நிற்பதால் பணியிடத்தில் வழக்கு. தசாநாதன் கேது பாதகாதிபதி சுக்கிரனின் பூரம்-4 ல் நிற்கிறார். 2 வீட்டு ஆதிபத்தியம் உள்ள சுக்கிரனின் வீட்டில் நிற்பதால், தான் நின்ற இட பலனையும் சுக்கிரனின் மற்றொரு வீடான பாதக ஸ்தானமான 11 ஆம் இட பலனையும் தர வேண்டும் என்ற அடிப்படையில் பாதகம் வழக்கு வடிவில் சந்திர புக்தியில் ஏற்பட்டது. 2 ல் கேது முன் யோசனையற்ற கடும் சொல் சொல்ல வைக்கும். சூரியன் வீட்டில் நிற்கும் கேது சொல்லில் அதிகாரத்தையும் வெளிப்படுத்தும். வாக்கைக்கொண்டு சம்பாதிக்கும் ஆசிரியப் பணியில்தான் ஜாதகர் உள்ளார். ஜாதகர் பள்ளி விடுதி காப்பாளரிடம் தனது ஆளுமை, அதிகாரத்தை சொல்லில் வெளிப்படுத்தியதால், விடுதி காப்பாள பெண்மணியின் புகாரின் அடிப்படையில் ஜாதகர் மீது விடுதி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக POCSO வழக்கு போடப்பட்டது. விடுதிக்காப்பாளரை (Warden) குறிக்கும் காரக கிரகம் செவ்வாயாகும். பெண்களை குறிக்கும் பாதகாதிபதி சுக்கிரனின் பூரம்-3 ல் நின்று, விடுதியை குறிக்கும் 12 ஆம் பாவகத்தை செவ்வாய் பார்ப்பதால் விடுதி காப்பாள பெண்மணியால் வழக்கு போடப்பட்டது. புதனின் வீடு 12 ஆம் பாவகமாக வந்தால் அது பள்ளி விடுதியை குறிக்கும். பள்ளி-புதன், விடுதி-12 ஆமிடம். பாதகாதிபதி சுக்கிரன் சாரத்தில் செவ்வாய் நிற்பதால், ஜாதகருக்கு பாதகம் பள்ளி விடுதிக்காப்பாளர் வடிவில் ஏற்பட்டுள்ளது. புதனுடன் இணைந்து நிற்கும் குரு, பள்ளிக் குழந்தைகளை குறிக்கிறார். வழக்கு பாவமான 6 ஆமிடாதிபதி குரு, 6 ல் நிற்கும் செவ்வாய் சாரம் பெற்றதால் பள்ளி விடுதி காப்பாளர் பெண்மணியால், பள்ளி விடுதி குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்கு பதியப்பட்டது.
ஜோதிட விதிகள் முரண்படுவது ஏன்?
இந்த ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் இயற்கை பாவிகளானாலும் லக்ன சுபர்கள். இருவரும் சுபாவ பாவிகளுக்கு சிறப்பைத்தரும் 3, 6 ஆகிய உப ஜெய பாவகங்களில் தங்களது நட்பு வீட்டில் நிற்கிறார்கள். 3 ஆமிடம் முயற்சி, 6 ஆமிடம் வேலை என்ற வகையில் இந்த அமைப்பு அரசு வேலை தந்துள்ளது . அதே சமயம் செவ்வாய் குறிக்கும் காப்பாளரால், சூரியன் குறிக்கும் அரசு சார்பில் வழக்கும் ஏற்பட்டுள்ளது. இது முரண்பாடான அமைப்பாக உள்ளது. சாதாரணமாக ஜோதிடர்கள் இது போன்ற இடங்களில் தடுமாறுவார். இது போன்ற நிலையில்தான் ஜோதிடத்தில் சிறப்புமிக்க தனித்துவமான விதிகளை பயன்படுத்த வேண்டியுள்ளது.
யோகி-அவயோகி
மேற்கண்ட ஜாதகத்தில் ஆழ்ந்து கவனிக்கையில் இந்த ஜாதகர் ப்ரீத்தி நாம யோகத்தில் பிறந்துள்ளதால் யோகி புதனாகும். அவயோகி செவ்வாயாகும். செவ்வாய் இந்த ஜாதகத்தில் லக்ன ராஜ யோகாதிபதியாக நட்பு வீட்டில் உபஜெய ஸ்தானத்தில் செவ்வாய்க்கு தனிச்சிறப்பை தரும் போட்டிகளில் வெற்றி தரும் 6 ஆமிடத்தில் அமைந்திருந்தாலும் அவர் பாதகாதிபதி சாரம் பெறுவதால் பாதகத்தை செய்ய வேண்டியவராகிறார். லக்ன சுபர் அவயோகியாகி அவர் பாதகாதிபதி சாரம் பெற்றால் அது ஒரு ஜாதகரை கதறி கண்ணீர் விட வைக்கும் அமைப்பாகும். யோகியான புதன் அவயோகி செவ்வாய்க்கு எதிரியானாலும், வெற்றி ஸ்தானத்தில் தனது மூலத்திரிகோண வீட்டில் உச்ச வலுப்பெற்றதால் செவ்வாயைவிட மிக வலுவாகவே உள்ளார். இந்நிலையில் புதன் செவ்வாயின் சித்திரையில் நின்றிருந்தால் செவ்வாயின் பாவ வலுவை குறைந்திருப்பார். ஆனால் புதன் இங்கு சூரியன் சாரம் பெற்றுள்ளார். மேலும் தனது தசை முடிந்துவிட்டதால் கேதுதசையில் குறுக்கிட இயலா நிலை. செவ்வாய் போன்றே செயல்படும் கேதுவும் செவ்வாயும் ஒருவருக்கொருவர் திரிகோணம் பெற்றுள்ளது ஆகியவை இங்கு வழக்கால் ஏற்பட்ட பாதகத்தை கடுமையாக்கிவிட்டது.
இங்கு யோகி புதன் லக்ன விரையாதிபதியானாலும் ஜாதகருக்கு வேலை தந்து வாழ்வளிக்கிறார். ஆனால் லக்ன யோகாதிபதி செவ்வாய் அவயோகியாகி, லக்ன சுபர் சூரியனும் அவயோகி செவ்வாய் சாரம் பெற்றதால் செவ்வாய் மற்றும் சூரியனின் காரக ஆதிபத்திய வகையில் பாதகாதிபதி மூலம் பலவித அவயோகங்களை அனுபவிக்க வைத்துக் கொண்டுள்ளது. ஜாதகர் தற்போது சுக்கிர தசையில் உள்ளார். பாதகாதிபதி சுக்கிரன் அவயோகி சாரம் பெற்ற சூரியனின் உத்திரம்-2 ல் நிற்பதால் வழக்கு இன்னும் நடக்கிறது. பாதன ஸ்தான பலனை வழங்கும் நீச-பங்கப்பட்ட சுக்கிரன், வெற்றி பாவகம் 3 ல் நிற்பதால், தான் நின்ற பாவக பலனையும் வழங்கியாக வேண்டும். கோட்சார சனி கும்பத்திற்கு வந்து ஜனன கால சனியை 3 ஆம் பார்வையாக பார்க்கும் காலம் வழக்கு முடிவுக்கு வரும்.
அவயோகி பாதிப்பில் இருந்து பாதுகாப்பை தேடிக்கொள்ள வழியுண்டா?
நமது கடந்த பிறவிகளின் பாவ கர்மாவே அவயோகி வடிவில் தண்டிக்கும் என்பதால் இப்பிறவில் நமது புண்ணிய செயல்களை பெருக்கிக்கொள்ள வேண்டும். கூடுதலாக அவயோகியின் காரகம், ஆதிபத்தியம் மற்றும் அவயோகி சாரம் பெற்ற கிரக உறவுகள் போன்றவற்றில் மிகுந்த எச்சரிக்கையாகவும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வதும், அவர்களிடம் இருந்து விலகி இருப்பதும், இவற்றிற்குரிய தெய்வங்களை வழிபடுவதும் அவயோகி வடிவில் வரும் தீமைகளை பெருமளவு குறைக்கும்.
விரைவில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்,
அதுவரை வாழ்த்துக்களுடன்,
ஜோதிஷ ஆச்சார்யா பழனியப்பன்.
கைபேசி: 8300124501